Published:Updated:

சூரிய கிரகணத்தில் வெளியே செல்லலாமா, சாப்பிடலாமா, கர்ப்பிணிகளுக்கு பாதிப்பா?'- மருத்துவரின் பதில்கள்

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை நிலவு, சூரியனை மறைத்துவிடுவதால் அன்று நம்மால் வெறும் கண்களாலேயே சூரியனைப் பார்க்க முடியும். அதுவும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இங்குதான் பிரச்னையே வருகிறது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் அடிக்கடி நிகழ்கிற வானியல் நிகழ்வுதான் என்றாலும், ஒவ்வொரு முறையும் சூரிய கிரகணம் வரும்போதும், 'இதைச் செய்யலாமா; அதைச் செய்யக் கூடாதா' என நமக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களுக்கான பதில்களை பொதுநல மருத்துவர் ராஜேஷ், குழந்தை நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ ஆகியோரிடம் கேட்டோம். அவர்களின் பதில்களுக்கு முன்னால், வரப்போகிற (26.12.2019) சூரிய கிரகணத்தைப் பற்றி ஒரு சில வரிகள்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

அன்றைய தினம் காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை, மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் சூரிய கிரகணம் தெரியும். இந்த முறை 'நெருப்பு வளைய சூரிய கிரகணம்' நிகழவிருக்கிறது. இந்தக் கிரகணத்தில், நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காது என்பதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். அதனால்தான் இதை 'வளைய சூரிய கிரகணம்' என்கிறார்கள். இனி, சூரிய கிரகணம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள் குறித்துப் பார்ப்போம்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்தால் கண் பார்வை பறிபோய்விடுமா?

''அதிகமான வாய்ப்பிருக்கிறது என்பதுதான் மருத்துவ உண்மை. பொதுவாக, தினமும் சூரியனிலிருந்து வருகிற புற ஊதாக்கதிர்களால் நம் கண்களுக்குப் பிரச்னை ஏற்படாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஓசோன் மண்டலம் அதை அதிகபட்சம் வடிகட்டித்தான் பூமிக்கு அனுப்புகிறது. இரண்டு, சூரியனை, அதன் பிரகாசம் காரணமாக நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. சூரியனைப் பார்க்கவில்லையென்றால் அதிலிருந்து வருகிற புற ஊதாக்கதிர்களால் கண்களுக்குப் பிரச்னையும் வரப் போவதில்லை.

வெறும் கண்ணாடி வழியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது
வெறும் கண்ணாடி வழியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது

ஆனால், சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை நிலவு, சூரியனை மறைத்துவிடுவதால் அன்று நம்மால் வெறும் கண்களாலேயே சூரியனைப் பார்க்க முடியும். அதுவும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இங்குதான் பிரச்னையே வருகிறது. பிரகாசமான சூரியனைப் பார்க்கையில் நம் கண்களின் மையத்தில் இருக்கிற பியூபிள் சுருங்கிவிடும். ஆனால், சூரிய கிரகண நேரத்தில் இந்தப் பிரகாசம் சூரியனிடம் இருக்காது என்பதால், பியூபிள் சுருங்காது. அதனால், கிரகணத்திலிருந்து வெளிப்படுகிற கதிர்கள் கண்களுக்குள் நுழைந்து ரெட்டினாவை பாதித்தால், பார்வை பறிபோக 90% வாய்ப்பிருக்கிறது.

சூரிய கிரகணத்தால் ரெட்டினா பாதிக்கப்பட்டால், பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி, எந்தவித வலியுணர்வும் தெரியாது. கண் பார்வையில் பிரச்னை வந்துவிட்டது என்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் புரிவதற்கே அரை மணி நேரமாகிவிடும். அதனால்தான் இதை மருத்துவர்கள் நாங்கள் Painless Blindness என்று குறிப்பிடுகிறோம். அதனால், இந்த நேரத்தில் குழந்தைகளைக் கண்டிப்பாக வெளியே விடக்கூடாது. கட்டாயம் வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், சூரிய கிரகணத்தைப் பார்க்காமல் தவிர்த்துவிடுங்கள். மற்றபடி, ஒரு சில விநாடிகள் தெரியாமல் பார்க்க நேர்ந்துவிடுவதால் கண் பார்வையில் எந்தப் பிரச்னையும் வராது.

Solar Eclipse
Solar Eclipse

சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடலாமா?

''சூரிய கிரகணத்துக்கும் அந்த நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தாராளமாகச் சாப்பிடலாம்.''

தெருவில் விற்பனை செய்கிற உணவுகளைச் சாப்பிடலாமா?

''தாராளமாகச் சாப்பிடலாம். சூரிய கிரகண நேரத்தில் சாப்பிட்டால், உடம்புக்குப் பிரச்னை வரும் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரங்களும் இதுவரை இல்லை.''

கிரகண நேரத்தில் சன் ஸ்கிரீன் அப்ளை செய்துகொண்டு வெளியே செய்யலாமா?

''கிரகணத்தால் சருமத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது. கண்களுக்குத்தான் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.''

கிரகணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏதாவது பிரச்னைகள் வருமா?

''கிரகண நேரத்தில் கர்ப்பிணிகளுக்குத்தான் இங்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். எந்தப் பொருளையும் வெட்டக்கூடாது, காய்கறி நறுக்கக் கூடாது, சாப்பிடக் கூடாது, குடிக்கக் கூடாது என்று அந்தப் பட்டியல் மிக நீண்டது. இவற்றுக்கெல்லாம் இதுவரை எந்த அறிவியல் ஆதாரங்களும் நம்மிடம் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் வெளிப்படுகிற கதிர்களால் கருவில் இருக்கிற குழந்தைக்கு, குறிப்பாக முதல் டிரைமெஸ்டரில் இருக்கிற கருவுக்கு என்ன பிரச்னை வரும் என்று நமக்குத் தெரியாது என்பதால், கிரகண நேரத்தில் திறந்த வெளியில் இல்லாமல் இருப்பதே கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பு.''

கர்ப்பிணிகள் சூரிய கிரகண நேரத்தில் வெளியே செல்லலாமா?
கர்ப்பிணிகள் சூரிய கிரகண நேரத்தில் வெளியே செல்லலாமா?

ஒருவேளை கிரகண நேரத்தில் பிரசவ வலி வந்துவிட்டால்..?

''பிரசவ வலியை கிரகண நேரத்தில் வரக்கூடாது என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால், தாராளமாக வெளியே வரலாம். அதேபோல, அவசர சிகிச்சைக்காக, சிகிச்சைக்காக, அலுவல் வேலைகளுக்காக வெளியே செல்ல வேண்டியிருப்பவர்களும், கிரகணத்தை மட்டும் பார்க்காமல் தவிர்க்கவும்.''

வலிப்பு நோய் ஏற்படக்கூடியவர்கள், கிரகண நேரத்தில் வெளியே வரலாமா?

''வலிப்பு நோய் ஏற்படக்கூடியவர்களுக்கு, கிரகணத்தால் பாதிப்பு வரும் என்பதற்கும் எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும், வெறும் கண்களால் சூரிய கிரகணத்தைப் பார்க்காதீர்கள் என்பதுதான் அட்வைஸ்.''

டாக்டர் ஜெயஶ்ரீ, டாக்டர் ராஜேஷ், டாக்டர் பழனிராஜ்
டாக்டர் ஜெயஶ்ரீ, டாக்டர் ராஜேஷ், டாக்டர் பழனிராஜ்

மொத்தத்தில், மூன்று மருத்துவர்களும் வலியுறுத்திய ஒரு விஷயம்... சூரிய கிரகணத்தை கேமரா, டெலஸ்கோப் என்று எதன் வழியாகவும் பார்க்கக் கூடாது. சூரிய கிரகணத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்றால், அதற்கென்று இருக்கிற பிரத்யேக சன் ஃபில்டர் கண்ணாடி அணிந்துகொண்டு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதுதான்.

சூரிய கிரகணம் குறித்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன? - பயனுள்ள 10 தகவல்கள்!