Published:Updated:

தொடர்ந்து தடைகளைச் சந்திக்கும் இஸ்ரோ... இனி என்ன ஆகும் சந்திரயான் 2? #Chandrayaan2

ஞா.சுதாகர்

திட்டமிடப்பட்ட காலஅளவை விடவும் பலமுறை தள்ளிப்போய்விட்டது சந்திரயான் 2. ஏவுதளம் வரை சென்றும் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் பழைய இடத்துகே வந்துநிற்கிறது. இனி சந்திரயான் 2 என்ன ஆகும்?

GSLV MK III-ல் சந்திரயான் 2
GSLV MK III-ல் சந்திரயான் 2 ( ISRO )

துவரை கிரிக்கெட் வரலாறு கண்டிராத அளவுக்கு சூப்பர் ஓவர் வரை சென்ற கிரிக்கெட் உலகக்கோப்பை ஃபைனல்; விம்பிள்டன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக நேரம் நீண்ட டென்னிஸ் இறுதிப்போட்டி. இந்த இரண்டு படபடப்புகளையும் தாண்டி, அன்றைய இரவு நகம்கடிக்க இந்திய ஊடகவியலாளர்களுக்கு மூன்றாவது காரணம் ஒன்றும் இருந்தது. அது அன்று விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான் 2.

இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ
இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ
ISRO

தகவல் தொடர்புக்கான இன்சாட், கனிமவளங்களைக் கண்டறிவதற்கான ஐ.ஆர்.எஸ், பேரிடர் மேலாண்மைக்கான ஜிசாட், நேவிகேஷனுக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என இதுவரைக்கும் எத்தனையோ செயற்கைக்கோள்களை மக்கள் பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவியிருக்கிறது இஸ்ரோ. இவையனைத்துமே விண்வெளித் தொழில்நுட்பத்தில் தேசம் தன்னிறைவு அடைந்துவருவதை உலகுக்கு பறைசாற்றினாலும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்ற இரண்டு திட்டங்கள் 2008-ல் ஏவப்பட்ட சந்திரயான் 1 மற்றும் 2013-ல் ஏவப்பட்ட மங்கள்யான். விண்வெளித் தொழில்நுட்பத்தைத் தாண்டி விண்வெளி அறிவியலில் இந்தியாவின் பங்கை எடுத்துச் சொன்னவை இவை இரண்டும். இந்த முயற்சியின் இன்னொரு அவதாரமாக 2008-ல் உதித்ததுதான் சந்திரயான் 2. அதற்கடுத்து சரியாக 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் தன்னுடைய பயணத்துக்காக நிலத்திலேயே காத்திருக்கிறது சந்திரயான் 2.

சென்னையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா. ஜூலை 14 அன்று இரவு என்னுடைய பயணம் இதுதான். ஒவ்வொருமுறையும் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்கள் ஏவப்படும்போது, இஸ்ரோவே சென்னையிலிருந்து ஊடக பிரதிநிதிகளை அழைத்துச் செல்லும். சந்திரயான் 2-வுக்கும் அதேதான். இங்கிருந்து கிளம்பிச்செல்ல விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது இஸ்ரோ. சென்னையிலிருந்து ஏறத்தாழ மூன்று மணி நேரப்பயணம்; ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்துவிடலாம். எப்போதும்விடவும் இந்தமுறை கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் என்பதால் ஸ்ரீஹரிகோட்டாவின் சாலைகளில் பயணிக்கும்போதே மக்களின் ஆர்வத்தைக் காணமுடிந்தது. ஆங்காங்கே மக்கள் வீதிகளிலும், சின்னச் சின்ன வியூ பாயின்ட்டுகளிலும் நின்று ஏவுதளத்தின் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைதியான ஒரு கிராமத்தைத் தாண்டி, அழகான ஒரு பறவைகள் சரணாலயத்தைத் தாண்டி, இறுதியாக சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்துக்குள் நுழைந்தோம்.

சந்திரயான் 2-விற்கான கவுன்ட்டவுன்
சந்திரயான் 2-விற்கான கவுன்ட்டவுன்
Vikatan: G.Sudhakar

ஊடகங்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் நேரில் காண அனுமதி உண்டு என்பதால், வாயிலிலேயே நூற்றுக்கணக்கான மக்களை காணமுடிந்தது. உற்சாகத்தோடு முகப்பில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். (அது இல்லாமல் கொண்டாட்டமா?!) அதற்கடுத்து பல கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே ஊடகங்களுக்கான முனையத்தில் அனுமதிக்கப்பட்டோம். மணி அதிகாலை 1:30. இன்னும் சரியாக 1 மணி நேரம் 21 நிமிடங்கள். சந்திரயான் 2 கிளம்ப இன்னும் இவ்வளவுதான் நேரம். அந்த அரங்கில் சில நிமிடங்களுக்கு ஒருமுறை ராக்கெட் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டேயிருந்தனர் விஞ்ஞானிகள். ஒவ்வொரு அடுக்காக எரிபொருள் நிரப்பபடுவது, சோதனை செய்யப்படுவது என அத்தனை தகவல்களும் தரப்பட்டுக் கொண்டே இருந்தன.

2:51... அந்த அதிகாலை நேரத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த எண் இதுதான். ஊடக அரங்கிலிருந்த கடிகாரத்தில் நேரமும், கவுன்ட்டவுனும் தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. 2 மணி ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அடுத்த அறிவிப்பு. யாருமே எதிர்பார்க்காத ஓர் அறிவிப்பு. சந்திரயான் 2 திட்ட இயக்குநரிடமிருந்து. ``சந்திரயான் 2-வுக்கான கவுன்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. அடுத்து எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்."

நிறுத்தப்பட்ட கவுன்ட்டவுன்
நிறுத்தப்பட்ட கவுன்ட்டவுன்
Vikatan: G.Sudhakar

சலசலப்பும், கேள்விகளும் அந்த அரங்கை நிரப்பவே எந்த பதிலுமின்றி அங்கிருந்து கலைந்தனர் இஸ்ரோ அதிகாரிகள். அடுத்த சில நிமிடங்களில் எல்லா ஊடகங்களிலும் சந்திரயான் 2 நிறுத்திவைக்கப்பட்டது செய்தியானது. எப்படியும் சந்திரயான் 2 இன்று ஏவப்படாது, தொழில்நுட்பக் கோளாறு என அந்த செய்திகள் வளர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில், ``செயற்கைக்கோள் ஏவுகலனில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறால், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவது இன்று நிறுத்திவைக்கப்படுகிறது. அடுத்து எப்போது ஏவப்படும் என்பதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" எனச் சொல்லி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது இஸ்ரோ. அன்று அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் அந்தச் செய்தி ஏமாற்றம்தான். அன்றைய இரவு இதற்காக கண்விழித்துக் காத்திருந்த லட்சக்கணக்கான மக்களுக்கும் இது வருத்தம் தரக்கூடியதுதான். ஆனால், சந்திரயான் 2-வின் கடந்த காலத்தைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் இதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றும்.

ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு! - நிறுத்திவைக்கப்பட்ட சந்திரயான்- 2

னவரி 15, 2012. செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான ஃபோபோஸிலிருந்து மாதிரிகளை எடுத்துவருவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட Fobos-Grunt விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாக பசிபிக் கடலை நோக்கி வந்துகொண்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட விண்கலம் அது. முதன்முதலாக செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக சீனா சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளோடு சென்ற விண்கலம் அது. இரண்டு நாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும் அந்த ஜனவரி 12-ல் வீணானது. செவ்வாயின் துணைக்கோளை நோக்கி 2011-ல் அனுப்பிவைக்கப்பட்ட Fobos-Grunt தோல்வியடைந்து பசிபிக் கடலில் விழுந்தது. தொடர்தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்த ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு அது மற்றுமொரு அடி. கூட்டுமுயற்சியில் தோல்வியடைந்த சீனாவுக்கும்கூட. ஆனால், இந்த இரண்டும் தேசங்களையும் தவிர, Fobos-Grunt-டால் பாதிக்கப்பட்ட இன்னொரு தேசம் இந்தியா.

சோதனையில் சந்திரயான் 2
சோதனையில் சந்திரயான் 2
ISRO

ந்திரயான் 2-வுக்கான திட்டங்கள் 2007-ம் ஆண்டே இறுதிசெய்யப்பட்டு அப்போதே ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Roskosmos உடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. அதன்படி சந்திரயான் 2-வில் இருக்கும் ஆர்பிட்டர் மற்றும் ரோவர் இரண்டையும் இஸ்ரோ தயாரிக்கும். ரோவரை நிலவில் களமிறக்கும் லேண்டரை மட்டும் ரஷ்யா வழங்கும். இதற்கான நிதிஉதவிக்கான அனுமதியையும் 2008-ல் அன்றைய அரசு வழங்க சந்திரயான் 1 உடன் சேர்ந்து சந்திரயான் 2-வுக்கான திட்டங்களும் வேகம்பெற்றன. 2009-லேயே சந்திரயான் 2-வின் வடிவம் இறுதிசெய்யப்பட்டு இருநாட்டு விஞ்ஞானிகளால் சோதனையும் செய்யப்பட்டது. இதையடுத்து, சந்திரயான் 2-வில் இருக்கவேண்டிய கருவிகள், திட்ட விவரங்கள் போன்றவற்றையெல்லாம் இறுதிசெய்து 2010-ல் சந்திராயன் 2-வின் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் உள்ளிட்ட முழு வடிவத்தை அறிவித்தது இஸ்ரோ. 2013-ல் விண்ணில் ஏவுவதற்கான முதல் அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால், இங்கேதான் முதல் சிக்கல் எழுந்தது.

Fobos-Grunt-ன் தோல்வியால் பாதிக்கப்பட்டிருந்த ரஷ்யா 2013-க்குள் லேண்டரை வழங்கமுடியாது என்றது. பிறகென்ன? 2015-ஐ இலக்காக வைத்து உழைத்தது இஸ்ரோ. ஆனால், ரஷ்யா மீண்டும் காலை வாரியது. பொருளாதார சிக்கல்களாலும், தொழில்நுட்ப தோல்விகளாலும் பாதிக்கப்பட்டிருந்த Roskosmos அடுத்தடுத்த அடிகளை அளந்தே வைத்தது. Fobos-Grunt-ல் நடந்த பிழைகளைக் கண்டறிவதற்கும், அதை எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கும் தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டு வந்தது ரஷ்யா. அதற்காக Fobos-Grunt-ல் பயன்படுத்தப்பட்ட அத்தனை அம்சங்களையும் மறுஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில், இஸ்ரோவுக்கு தரவேண்டிய லேண்டரின் சில அம்சங்களும் அடக்கம். எனவே, எப்படியும் 2015-க்குள் லேண்டரை தரவே முடியாது என கைவிரித்தது ரஷ்யா. ஒப்பந்தத்திலிருந்தும் விலகியது. இப்போது இஸ்ரோவுக்கு வேறு வழியே இல்லை. சொந்தமாக இங்கேயே லேண்டரை வடிவமைப்பது மட்டும்தான் ஒரே தீர்வு. அதை நோக்கி ஒடத் தொடங்கியது இஸ்ரோ. மீண்டும் தள்ளிப்போனது சந்திரயான் 2.

சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்
சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்
ISRO

ரஷ்யாவின் லேண்டருக்குப் பதில், புதிய லேண்டர் என்பதால் சந்திரயானின் விண்கலத்திலும் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது. இதெல்லாம் முடிந்து 2018, ஏப்ரல் மாதம் சந்திரயான் விண்ணில் பாயும் என அறிவித்தார் விண்வெளித்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். ஆனால், ``இதுவும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு சந்திரயான் 2-வை ஒத்திவைத்திருக்கிறோம்" என 2018-ல் மார்ச் மாதம் அறிவித்தார் இஸ்ரோவின் தலைவரான சிவன். ஆனால், இதுவும் சில தொழில்நுட்ப சோதனைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2019-ம் ஆண்டு, அதாவது இந்த ஆண்டு ஜனவரி 3-ல் சந்திரயான் 2-வை ஏவத் திட்டமிட்டுள்ளோம் என்றது இஸ்ரோ. ஒருவேளை இது தவறிப்போனால் எப்படியும் ஏப்ரலில் நிச்சயம் என்றது. ஆனால், சோதனைகளின்போது லேண்டரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் மீண்டும் சிக்கலில் உழன்றது இஸ்ரோ. இந்த சமயத்தில்தான் இஸ்ரேலின் Beresheet நிலவில் கால்பதிக்க நினைத்து காலை ஒடித்துக்கொள்ளவே கூடுதல் கவனத்துடன் செயல்பட்டது இஸ்ரோ. இறுதியாக, (இந்தமுறை நிஜமாகவே! 😷) ஜூலை மாதம் சந்திரயான் 2-விற்கு தேதி குறித்தது இஸ்ரோ. ஜூன் மாதம் சரியான தேதியையே அறிவித்தார் இஸ்ரோ தலைவர் சிவன். அதன்படி ஜூலை 15 அன்று அதிகாலை 2:51 மணிக்கு சந்திரயான் 2 கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அப்போது என்ன நடந்தது என்பதைத்தான் மேலே படித்திருப்பீர்கள். சரி, சந்திரயான் 2 இனி என்ன ஆகும்? இஸ்ரோவுக்கு இது பெரிய பின்னடைவா?

இஸ்ரோவோ, நாசாவோ... எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும் தோல்விகளின்றி பயணத்தை தொடர்ந்ததில்லை. இஸ்ரோவுக்கும் தோல்விகள் புதிதல்ல. ஆனால், இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், இது தோல்வியல்ல என்பதைத்தான். எல்லா சோதனைகளும் முடிந்து, இறுதியில் எரிபொருள் நிரப்பும் தறுவாயில்தான் இறுதிப்பிழை கண்டறியப்பட்டுள்ளது. எந்த Engineering System-ஐப் பொறுத்தவரைக்கும் இது சாதாரணம்தான்.

``எந்தவொரு பிழையுமே இல்லையென்றால் எங்களால் இரண்டு நாள்களில் கூட ஒரு ராக்கெட்டை விட முடியும். ஆனால், Engineering System-களில் பிழைகள் வருவதும், அவற்றை சரிசெய்வதும் சகஜம். இது எங்களுக்கும் பொருந்தும்"
சந்திரயான் 2 ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சிவன்

இப்போது நடந்திருப்பதும் அப்படி ஒன்றே. கடைசி நேரத்தில் அதாவது 56 நிமிடங்களுக்கு முன்னாள் ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் இடத்தில் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாக சிறிய தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டறிந்த திட்ட இயக்குநர் வனிதா சந்திரயான் 2-வை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தார். மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வை கடைசி நிமிடத்தில் நிறுத்திவைப்பது மிகப்பெரிய பின்னடைவாக தெரிந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக இது இயல்பான ஒன்றே. இந்தக் கட்டுரை முழுவதும் படித்ததுபோல சந்திராயன் 2-விற்கு வந்த சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஆனால், அதன் இறுதி நிமிடங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் இது பெரிதாகத் தெரிகிறது. அவ்வளவே!

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?

சந்திரயான் 2 செயற்கைக்கோளிலிருந்து அதை ஏந்திச்செல்லும் ராக்கெட் வரை இந்தத் திட்டம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புதான். இதை இன்று பெருமையாகச் சொல்லமுடிகிறது என்றால், அதற்கு இந்திய விஞ்ஞானிகளின் கடந்த 10 ஆண்டுகால உழைப்புதான் காரணம். எனவே, இந்த சிறுதடங்கல்களும் விரைவில் சரியாகிவிடும்.

இனி அடுத்து சந்திரயான் ஏவப்படும்?

ஏவுகிற கடைசி நிமிடங்களில் திடீரென பிரச்னை எழுந்ததையடுத்து உடனடியாக இஸ்ரோவின் இன்ஜினீயர்கள் GSLV-ன் எரிபொருள்களை முழுவதுமாக நீக்கிவிட்டு சோதனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சோதனைகள் எத்தனை நாள் நடக்கும், சந்திரயான் 2 எப்போது முழுமையாகத் தயாராகும் போன்ற விவரங்கள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாத இறுதியிலேயே சந்திரயான் 2 ஏவப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம், விண்டோ பீரியட். 

ஸ்ரீஹரிகோட்டாவில் நடக்கும் சந்திரயான் 2 பணிகள்
ஸ்ரீஹரிகோட்டாவில் நடக்கும் சந்திரயான் 2 பணிகள்
ISRO

பூமியிலிருந்து பிற கிரகங்களுக்கு அனுப்பப்படும் எல்லா செயற்கைக்கோள்களும், அங்கே சரியாக சென்றுசேர இங்கிருந்து துல்லியமான நேரத்தில் அனுப்பப்பட வேண்டும். அதுவும் சந்திரயான் 2 போல லேண்டர் கொண்ட மிஷன்களுக்கு இது இன்னுமே முக்கியம். அப்போதுதான் சரியான நேரத்தில் நிலவை அடைந்து, சரியான இடத்தில் கால் பதிக்கமுடியும். இதற்காக நிலவு பூமியைச் சுற்றிவரும் பாதை, இருப்பிடம் ஆகியவற்றைக் கணக்கிட்டுதான் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும். அப்படி அனுப்புவதற்கான கால அளவுதான் விண்டோ பீரியட் (Window Period). சந்திரயான் 2-விற்கு ஜூலை 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் விண்டோ பீரியட் இருந்தது.

இந்த நாள்களில் அதிகாலை 2:51 மணியிலிருந்து 3:01 மணி வரைக்கும் இந்த விண்டோ பீரியட் நீடிக்கும். அதற்குப் பிறகு அனுப்பமுடியாது. இதுவே வேறுநாள்கள் என்றால் ஒருநாளைக்கு வெறும் ஒரு நிமிடம்தான் விண்டோ பீரியட் கிடைக்கும். இந்தக் கால அளவில் சந்திரயான் 2-வை ஏவுவது மிகக்கடினம். எனவே, அடுத்த விண்டோ பீரியடான ஜூலை 29, 30-ல் வேண்டுமானால் சந்திரயான் 2 ஏவப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்குள் தொழில்நுட்ப சோதனைகள் அனைத்தும் முடிந்து சந்திராயன் 2 தயாராகுமா என்பது இஸ்ரோவுக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை இந்த ஜூலையையும் விட்டுவிட்டால் அதற்கடுத்து செப்டம்பர் மாதம் விண்டோ பீரியட் கிடைக்கும். எனவே, இந்த மாத இறுதியில் சந்திரயான் 2 மீண்டும் தள்ளிப்போனால் செப்டம்பரில் ஏவப்பட வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற கடைசிநேர தொழில்நுட்ப சவால்கள் இஸ்ரோவுக்கு புதிதல்ல; ஏன்... சந்திரயான் 1 செயற்கைக்கோளே இப்படியொரு சம்பவத்தைக் கடந்துதான் வென்றது. அந்தச் சம்பவத்தை சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமியின் வார்த்தைகளில்...

``சந்திராயன் விண்ணில் பாய்ந்த நாள். கவுன்ட் டவுன் ஆரம்பம். எல்லாமே கோயிங் ஸ்டெடி. 24 மணி நேரம் மட்டும் இருக்கும்போது, திடீரென ராக்கெட்டின் ஸ்பேர் யூனிட் ஒன்று வேலை செய்யவில்லை. அதைச் சரிசெய்தால் அடுத்த பூதம்.. எல்லா எலெக்ட்ரானிக் வேலைகளும் முடிந்த பிறகுதான், ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்புவோம். டன் கணக்கில் எரிபொருளை உள்ளே செலுத்தி அதை உறையவைப்பதுதான் கடைசி வேலை. எரிபொருள் நிரப்பும்போது திடீரெனச் சிவப்புப் புகை... லீக்கேஜ்! மறுநாள் காலை 6:22-க்கு சாட்டிலைட் ஏவ வேண்டும். இரவு பத்து மணிக்கு இந்தச் சிக்கல். எல்லாரும் போராடுகிறோம். ஒருவழியாக இரவு 2 மணிக்குப் பிரச்னையைச் சரிசெய்து நிமிர்ந்தால், பலத்த இடி, மின்னல்! அதிகாலை நாலு மணிக்கு ஃபைனல் கவுன்ட் டவுன் ஆரம்பமாக வேண்டும். ஆனால், இந்த க்ளைமேட்டில் சாத்தியமில்லை. `சரி, 4 மணி வரை பார்க்கலாம்' எனக் காத்திருந்தோம். வானம் ஆல் க்ளியர்! ஒன்றரை மணி நேரத்தில் தலைகீழ் மாற்றம். 6:22-க்கு துல்லியமாகத் தரையில் இருந்து மேலெழுந்தது சந்திராயன். அடுக்கடுக்காக அத்தனை பிரச்னைகள்... பிரஷர்! ஆனால், நம் ஆட்கள் சளைக்காமல் போராடி வென்றெடுத்தனர்.
- 22/04/09 ஆனந்த விகடன் இதழில் மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் 1 போலவே, நாளை இப்படி இந்தத் தடங்கல்களும் சந்திரயான் 2-வின் வெற்றிக்கதையில் இடம்பிடிக்கலாம். கிரிக்கெட்டிலிருந்து தொடங்கிய இந்தக் கட்டுரையை இப்படி கிரிக்கெட்டிலேயே முடிக்கலாம்.

சந்திரயான் 2-வின் ஆட்டம், இன்னொரு '`ரிசர்வ் டே'வுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ரிசல்ட்டை இந்தமுறை இஸ்ரோ மாற்றும் என நம்புவோம்.