Published:Updated:

`சவாலான இறுதி நொடிகளுக்குத் தயாராகும் சந்திரயான் 2' - இன்று இரவு நிலவில் தரையிறங்குகிறது!

ம.காசி விஸ்வநாதன்

பயணத்தின் சவாலான கட்டத்தை அடைந்திருக்கிறது சந்திரயான் 2!

Chandrayaan 2 landing
Chandrayaan 2 landing

சந்திரயான் 2 விண்கலனுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் ஜூலை 22 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது உலக நாடுகள். இதுவரை யாரும் தடம் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 2. இன்று இரவு இந்த சாதனை நிகழ்த்தப்படவிருக்கிறது. இது வெற்றிகரமாக நடந்தால் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்குப்பின் நிலவில் பாதுகாப்பான தரையிறங்குதல் செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். ஏற்கெனவே சந்திரயான் 1 நிலவில் crash landing செய்திருக்கிறது என்றாலும் இது சற்றே சவாலானது.

Vikram Lander
Vikram Lander

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விக்ரம் எனப்படும் லேண்டர் சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிந்தது. இதற்குப் பின், விக்ரம் லேண்டர் இரண்டு சுற்றுப்பாதைகள் சுற்றி சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகியுள்ளது. சந்திரயான் -2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கெனவே செய்திருந்தாலும் இந்த சாப்ஃட் லேண்டிங் சவாலான பணிதான். இஸ்ரேலின் beresheet எல்லாம் சரியாகச் செய்து இதில்தான் தோல்வியைச் சந்தித்தது. இதுமட்டுமல்லாமல் விக்ரம் லேண்டர் யாரும் செல்லாத அளவு தெற்குப் பகுதியில் தரையிறங்கவுள்ளது. இங்குதான் South Pole-Aitken basin இருக்கிறது. விண்கல் தாக்கத்தால் மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பகுதி இது. இதனால் தரையிறங்கும்முன் அந்தப் பகுதியை ஆராய்ந்து அதன்பின்தான் எங்கே தரையிறங்கலாம் என்பது முடிவெடுக்கப்படும்.

நிலவின் பரப்பை நோக்கி மிகவேகமாக வரும் இந்த லேண்டர், விநாடிக்கு 2 கிலோமீட்டர் அளவுவரை எட்டும். இறுதி நேரத்தில் விக்ரம் லேண்டரில் இருக்கும் thrusters சரியான எதிர் சக்தியைக் கொடுத்து வேகத்தைப் பூஜ்யத்துக்குக் கொண்டுவர வேண்டும். இது துல்லியமாக நடந்தால்தான் தரையிறங்குதல் சரியாக நடக்கும். இந்த இறுதி 15 நிமிடங்கள்தான் இந்த மொத்த மிஷனின் மிகச் சவாலான நிமிடங்கள். இது வெற்றிகரமாக நடந்துவிட்டால் ப்ரக்யான் என்னும் ரோவர் லேண்டரிலிருந்து வெளிவந்து நிலவின் பரப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்.

இன்று இரவு 1.30 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வை நேரலையாக நேஷனல் ஜியோகிராபிக் சேனல் மற்றும் ஹாட்ஸ்டாரில் 11.30 மணி முதல் பார்க்கமுடியும்.

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?