Published:Updated:

அந்த 0.006 சதவீதத்தை விடுங்கள்... இன்னமும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது சிவன்! #Chandrayaan2

ம.காசி விஸ்வநாதன்
கார்த்திகேயன் மேடி

நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பில்லியன் கணக்கில் செலவிடும் இதைப்போன்ற மிஷனுக்கு, வெறும் மில்லியன்களில்தான் செலவுசெய்திருக்கிறது, இஸ்ரோ.

#IndiaWithISRO
#IndiaWithISRO ( Karthikeyan Maddy / Vikatan )

பொதுவாக முக்கிய கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க மட்டுமே தூங்காமல் நள்ளிரவு பொழுதுகளில் கண்விழித்துக் காத்திருந்த இந்தியா, வேறொரு காரணத்திற்காக நேற்று இரவு கண்விழித்தது. இஸ்ரோவின் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதைப் பார்ப்பதற்கான கண் விழித்தல் அது! தூர்தர்ஷன், ஃபேஸ்புக் லைவ் என எதாவது ஒரு வழியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பார்த்துவிட மொத்த இந்தியாவும் பெருமித உணர்வோடு தயாராக இருந்தது. அதென்ன இந்தியா... உலகமே இந்த நிகழ்வைத்தான் உற்றுக்கவனித்துக் கொண்டிருந்தது. இப்படியான பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று இரவு 1.37 மணிக்கு ’விக்ரம்’ என்னும் லேண்டர் தரையிறங்கும் படலம் தொடங்கியது. "15 minutes of terror" என அழைக்கப்படும் அந்த திகில் இறுதி நிமிடங்களை எட்டும்போது நம்மையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. தொடக்கத்தில் எல்லாம் எதிர்பார்த்தபடியே சென்றது. ’ரஃப் பிரேக்கிங்’ (Rough Braking) கட்டம் வெற்றிகரமாக முடிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நீடிக்கவில்லை.

அடுத்து ’ஃபைன் பிரேக்கிங்’ (Fine Braking). அந்தக் கட்டத்தின்போது ’விக்ரம்’ லேண்டரிலிருந்து வந்துகொண்டிருந்த சிக்னல் திடீரென தடைப்பட்டது. பெங்களூரு இஸ்ரோ கண்காணிப்பு மையமே அமைதியிலும் பதற்றத்திலும் ஆழ்ந்தது. பெரும் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் அனைவரையும் கவலையும் திகைப்பும் பற்றிக்கொண்டது. இஸ்ரோ இயக்குநர் சிவன் அவசரமாகப் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார். நேரலையில் பார்த்தவர்களுக்கு "இப்போதுதானே கொண்டாடிக்கொண்டிருந்தனர்... அதற்குள் என்ன ஆனது?" என்ற கேள்வி எழுந்தது. ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

Isro Sivan
Isro Sivan
DD News

சில நிமிடங்களுக்குப்பின், "நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரம்வரை எதிர்பார்த்ததைப்போலவே லேண்டர் பயணப்பட்டது. அதற்குபின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராயவுள்ளோம்" என கவலை படர்ந்த முகத்தோடு தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சிவன்.

"Success is a journey, not a destination"

இந்த ஆங்கில வாக்கியத்தை நீங்களும் கேட்டிருப்பீர்கள். அதனால், இது எப்படி நடந்தது என்று ஆராய்வதற்குமுன் இந்த பயணம் எங்கு தொடங்கியது என்பதைப் பார்ப்போம்.

தொடர் தடங்கல்கள்!

சந்திரயான்-2 விண்ணில் பயணித்தது சில நாட்கள்தான் என்றாலும் அதன் தொடக்கம் நிகழ்ந்தது 11 ஆண்டுகளுக்கு முன். ஆம்... 2007-ம் ஆண்டே சந்திரயான் 2 -வுக்கான திட்டங்கள் இறுதிசெய்யப்பட்டு ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Roskosmos உடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. அதன்படி, சந்திரயான் 2-வில் இருக்கும் ஆர்பிட்டர் மற்றும் ரோவர் இரண்டையும் இஸ்ரோ தயாரிக்கும். ரோவரை நிலவில் களமிறக்கும் லேண்டரை மட்டும் ரஷ்யா தயாரித்து வழங்கும் என முடிவெடுக்கப்பட்டது. 2008-ல் சந்திரயான்-1 வெற்றிகரமாக விண்ணில் பறந்த உற்சாகத்துடன், 2009-ல் சந்திரயான் 2-வின் வடிவம் இறுதிசெய்யப்பட்டு இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகளால் சோதனையும் செய்யப்பட்டது. இதற்குபின், சந்திரயான் 2-வில் அமைக்க வேண்டிய கருவிகள் பற்றி முடிவுசெய்யப்பட்டு 2010-ல் சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் உள்ளிட்ட முழு வடிவத்தை அறிவித்தது இஸ்ரோ. ’2013-ல், சந்திரயான் 2-வை விண்ணில் ஏவப்போவதாக’ முதல் அறிவிப்பும் வந்தது. ஆனால், இங்கேதான் முதல் சிக்கல் எழுந்தது.

செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான ஃபோபஸுக்கு செல்லவிருந்த Fobos-Grunt-ன் தோல்வியால் பாதிக்கப்பட்டிருந்த ரஷ்யா, 2013-க்குள் லேண்டரை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை என்றது. இதனால் இஸ்ரோ 2015-ஐ இலக்காக வைத்து உழைத்தது. ஆனால், ரஷ்யாவின் Roskosmos மீண்டும் ’நோ’ சொன்னது. அப்போது பொருளாதார சிக்கல்களாலும், தொழில்நுட்ப தோல்விகளாலும் பாதிக்கப்பட்டிருந்தது Roskosmos. அதேசமயம் முன்பு நடந்த தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாதென பல விஷயங்களை ஆய்வு செய்துவந்தது அந்த நிறுவனம். இதனால் 2015-க்குள் லேண்டரை தருவதெல்லாம் சாத்தியமே இல்லை எனக் கைவிரித்தது ரஷ்யா. அதன்பிறகு தான், இஸ்ரோ தைரியமாக அந்த முடிவை எடுத்தது.

“சொந்தமாக இங்கேயே லேண்டரை வடிவமைப்பது!”

அது மட்டுமே ஒரே வழி என அதை நோக்கி உழைக்கத் தொடங்கியது இஸ்ரோ. இந்த மாற்றத்தினால் மற்ற கலன்களின் அம்சங்களிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாக இருந்தது.

Isreal's Beresheet
Isreal's Beresheet

இப்படி பலமுறை தள்ளிப்போடப்பட்ட பிறகு, 2018 ஏப்ரலில் சந்திரயான்-2 விண்ணில் பாயும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் அக்டோபர் மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டது. இறுதியாக, சந்திரயான்-2 ஏவும் திட்டம் 2019-ம் ஆண்டுக்கு வந்துசேர்ந்தது. நிச்சயம் இந்த ஆண்டு ஏப்ரலுக்குள் சந்திரயான் விண்ணில் பாயும் என நம்பப்பட்டது. ஆனால், ஏப்ரலில் இஸ்ரேலின் Beresheet செயற்கைக்கோள் நிலவில் ’சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முயற்சி செய்து தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இறுதியாக, ஜூலை 15-ம் தேதி சந்திரயான் 2வுக்கு நாள் குறிக்கப்பட்டது. அன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாயத்தயாரானது சந்திரயானை நிலவுக்கு எடுத்து செல்லவிருந்த GSLV Mk III ராக்கெட். கடைசி நேரத்தில், அதாவது 56 நிமிடங்களுக்கு முன்னால் ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் இடத்தில் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாகச் சிறிய கசிவு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதனால் மீண்டும் தள்ளிப்போனது சந்திரயான்-2 மிஷன். இந்த மிஷனின் தள்ளிப்போகும் படலத்தை முழுவதுமாக படித்து முடிப்பதற்குள்ளாகவே உங்களில் பலருக்கு சோர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் இத்தனை தடங்கல்களைக் கடந்து, பொறுமையாக உழைத்தது இஸ்ரோ குழு. சிறிய தவறுகூட நடந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். அதனால் ’இஸ்ரோ கவனக்குறைவாக இருந்தது’ என்று எவரும் அவர்களின் உழைப்பை குற்றம்சாட்டிவிட முடியாது.

அந்த 0.006 சதவிகிதம்!

Vikram  Descent Trajectory
Vikram Descent Trajectory
DD News

விக்ரம் சாராபாயின் நூற்றாண்டுக்குள் நிலவில் சந்திரயான்-2 தடம்பதிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது இஸ்ரோ. நிலவில் தரையிறங்கும் லேண்டருக்குக் கூட அவரின் நினைவாகவே 'விக்ரம்' என பெயரிடப்பட்டது. கடந்த ஜூலை 22-ம் தேதி எந்தக் குழப்பமும் இல்லாமல் விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் எந்த சிக்கலுமின்றிப் பயணித்த விண்கலம், கடைசி 2.1 கிலோமீட்டர், அதாவது மொத்த பயணத்தில் 0.0006 சதவிகித தூரத்தைக் கடப்பதற்குமுன் சிக்னல் அனுப்பத் தவறியது... இதை ’தோல்வி’ என்று சொல்லும் அளவுக்கு கொடுமையானது அறிவியல். ஆனால் இது பின்னடைவு தானே தவிர நிச்சயம் தோல்வியல்ல. லேண்டரிலிருந்து வெளிவரும் 'பிரக்யான் ரோவர்’ ஒரு நாள் (14 பூமி நாட்கள்) மட்டுமே நிலவின் பரப்பில் சோதனை செய்யவிருந்தது. ஆனால் ஆர்பிட்டர் வருடக்கணக்கில் நிலவைச் சுற்றிவந்து சோதனைகள் மேற்கொள்ளும்.

'இது நிச்சயம் தோல்வியல்ல!'

Isro Sivan
Isro Sivan
Vikatan

இறுதியாக இதுகுறித்து தூர்தர்ஷன் சேனலுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன் , "இந்த மிஷனின் குறிக்கோள்களில் 90-95 சதவிகிதம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எரிபொருள் அதிக அளவில் மீதமிருப்பதால் திட்டமிட்ட ஒரு வருடத்தைவிடவும் அதிககாலம், சுமார் 7.5 ஆண்டுகள் சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிவரும்.மேம்பட்ட dual-band synthetic aperture radar பயன்படுத்தப்படுவதால் ஆர்பிட்டரால் 10 மீட்டர் ஆழம்வரை நிலவின் பரப்பில் ஸ்கேன் செய்யமுடியும். இது உறைந்த பனியாக இருக்கும் தண்ணீரை கண்டுபிடிக்கும் என நம்புகிறோம். மேம்பட்ட IR ஸ்பெக்ட்ரோமீட்டர், இரண்டு கேமராக்கள் போன்றவை இந்த ஆர்பிட்டரில் இருப்பதால் விக்ரம் லேண்டரை விட, இதுவரை பார்க்கப்படாத பல தகவல்களை இது பெற்றுத்தரும். மேலும், விக்ரம் லேண்டரின் நிலையையும் இது கண்டறிந்து சொல்லக்கூடும். லேண்டரை தரையிறக்குவது இந்த மிஷனின் சிறிய பகுதிதான், அதை வெற்றிகரமாக எங்களால் நிகழ்த்தமுடியவில்லை. அடுத்த 14 நாட்கள் லேண்டருடனான தொடர்பை மீட்கமுயற்சி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

சிவன் சொல்வது போன்றே லேண்டர் தரையிறங்குவது இந்த மிஷனின் சிறியப்பகுதிதான். லேண்டரிலிருந்து வெளிவரும் ’பிரக்யான் ரோவர்’ நிலவில் ஒரு நாள் (14 பூமி நாட்கள்)தான் ஆராய்ச்சி செய்யும். ஆனால் சிவன் சொல்லும் வார்த்தைகளின்படி, ஆர்பிட்டர் 7.5 வருடங்கள் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே சோதனைகளை மேற்கொள்ளும். மேலும் இது மொத்தமாக சுற்றி, ஆரம்பித்த இடத்திற்கே வர மூன்று நாட்கள் ஆகும் என்பதால் அதற்குள் விக்ரம் லேண்டரின் நிலை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறலாம். லேண்டர் தரையிறங்கவிருந்த இடம் எது என்று தெரிந்தாலும், கடைசி நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியாததால் இந்த இடத்தை சுற்றி 10 கிலோமீட்டர் வட்டத்தை தேடவேண்டியதாக இருக்கும். நிலவில் மோதி நொறுங்காமல் இருக்குமேயானால் அதை எளிதில் கண்டுபிடிக்க இயலும் என்று இஸ்ரோ தரப்பு கூறுகிறது. இதனால் கூடுதல் தகவல்களுக்கு சில நாட்கள் காத்திருப்போம்.

GSLV Mk III ராக்கெட்
GSLV Mk III ராக்கெட்

சாஹோ பட்ஜெட்டில் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-2

நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், இதுபோன்ற மிஷன்களுக்கு பில்லியன் கணக்கில் செலவிடுவார்கள். ஆனால், வெறும் மில்லியன்களில்தான் செலவுசெய்திருக்கிறது இஸ்ரோ. மொத்த பட்ஜெட் 978 கோடி. கிட்டத்தட்ட ’சாஹோ’ திரைப்படத்தின் பட்ஜெட் தான் சந்திரயான்-2-வை விண்ணில் ஏவுவதற்கே செலவு செய்திருக்கிறது இஸ்ரோ. (GSLV Mk III ராக்கெட்டுக்கான செலவு 375 கோடிதான், சாஹோ ~350 கோடி )

சவாலான இறுதி நிமிடங்கள்!

சந்திரயான்-2 முயற்சி செய்த இந்த சாப்ஃட் லேண்டிங் சவாலானதுதான். இஸ்ரேலின் beresheet எல்லாம் சரியாகச் செய்து இதில்தான் தோல்வியைச் சந்தித்தது. இதுமட்டுமல்லாமல் விக்ரம் லேண்டர் யாரும் செல்லாத தென்துருவதில் தரையிறங்கவிருந்தது. இங்குதான் South Pole-Aitken basin இருக்கிறது. விண்கல் தாக்கத்தால் மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பகுதி இது. மேலும், தட்பவெப்பநிலையும் மிகவும் கடுமையாக இருக்கும். நிலவின் மேற்பரப்பை நோக்கி மிகவேகமாக வரும் லேண்டரை அதிலிருக்கும் thrusters சரியான எதிர் சக்தியைக் கொடுத்து, சரியாகத் தரையிறக்கியிருக்க வேண்டும். இதன் இரண்டாம் கட்டத்தில்தான் லேண்டருடனான தொடர்பு அறுந்தது.

கடந்த 60 ஆண்டுகளில் நடந்த நிலவுக்குச் செல்லும் விண்வெளித் திட்டங்களில், 40 சதவிகிதம் தோல்வியையே சந்தித்துள்ளன.
நாசா

கவனஈர்ப்பு!

#Chandrayaan2 trending
#Chandrayaan2 trending

இதற்குமுன் பல சாதனைகள் படைத்திருந்தாலும் இஸ்ரோ பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. அதிலிருந்து பாடங்கள் கற்று மீண்டு வந்து சாதித்தும் இருக்கிறது. ஆனால் ஐபிஎல் போன்ற Pre-launch ஷோவை ஒரு தனியார் நிறுவனம் ஒளிபரப்பு செய்தது தொடங்கி ட்விட்டர் டிரெண்டிங் வரை இந்த அளவுக்கு கவனஈர்ப்பை இதுவரை எந்த மிஷனுக்கும் இஸ்ரோ கண்டதில்லை. மக்கள் ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுக்கு இத்தனை ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமான விஷயம்தான். இஸ்ரோ ஏதேனும் அரசியல் அழுத்தத்தை சந்தித்ததா என்பதெல்லாம் தெரியவில்லை, அதைப்பற்றி பேசவேண்டிய நேரமும் இது இல்லை. இது நம் இஸ்ரோ விஞ்ஞானிகளை கொண்டாடும் நேரம், துவண்டு போய் நிற்கும் அவர்களுக்கு தோள்கொடுக்கும் நேரம்.

நிலவில் யாரும் தரையிறங்காத தென்துருவத்திலும் தடம் பதிக்கமுடியும் என்று மொத்த உலகத்தையும் தோனியின் இன்னிங்ஸை போல கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் காத்திருக்க வைத்ததே சிவன் தலைமையிலான இஸ்ரோ குழுவுக்கு பெரும்வெற்றிதான். இழந்த இணைப்பை விரைவிலேயே இஸ்ரோ மீண்டும் பெறலாம். ஒருவேளை இந்தமுறை தவறினாலும் அடுத்தமுறை நிச்சயம் நிலவில் 'Soft Landing' செய்துவிடும். நம் விஞ்ஞானிகளின் திறமையும், உழைப்புமே அதற்கு சாட்சி. அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது சிவன்!

சந்திரயான-2: இறுதி நிமிடங்களில் லேண்டருடனான தொடர்பு அறுந்தது!#LiveUpdates