Published:Updated:

தியான்வென் - 1 ரோவர்: செவ்வாயில் இறங்கிய சீனா... தொடரும் தேடுதல் வேட்டை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தியான்வென் - 1 ரோவர் மாதிரி!
தியான்வென் - 1 ரோவர் மாதிரி! ( Ng Han Guan | AP )

அமெரிக்காவுக்கு அடுத்து செவ்வாயில் ரோவரை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடு சீனாதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிலவில் இருந்த விண்வெளிப் போட்டி, இப்போது செவ்வாய் கிரகத்திற்கு மாறியிருக்கிறது. இதுவரை அமெரிக்கா மட்டுமே கோலோச்சி வந்த செவ்வாய்க் கோட்டையில் தற்போது சீனாவும் நுழைந்திருக்கிறது. இன்று (மே 15) காலை தங்கள் ரோவரை வெற்றிகரமாக செவ்வாய் மண்ணில் தரையிறக்கியிருக்கிறது சீனா. தியான்வென் - 1 (Tianwen - 1) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் என மூன்று உபகரணங்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவை அடுத்து செவ்வாயில் ரோவரைத் தரையிறக்கும் இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. (சோவியத் யூனியன் 'மார்ஸ் 3' என்ற விண்கலத்தை செவ்வாயில் 1971-ல் தரையிறக்கியது. ஆனால், 20 நொடிகளில் அதனுடனான தொடர்பு போய்விட்டது). மேலும், ஒரு திட்டத்தில் மூன்று உபகரணங்களையும் வெற்றிகரமாக பயன்படுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் பெறுகிறது சீனா. செவ்வாய்க்கு சீனாவின் முதல் முயற்சி இது. இதற்கு முன்னர் சீனா 2012-ல் ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய்க்கு இங்குவோ - 1 (Yinghuo-1) என்ற ப்ரோப் ஒன்றை அனுப்பி அது தோல்வியில் முடிந்தது.

சீனா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்!
சீனா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்!
Jin Liwang | AP
ஆபரேஷன் செவ்வாய்!

கடந்த ஆண்டு ஜுலை 23-ல் சீனாவின் வென்சங் ஏவுதளத்தில் இருத்து லாங் மார்ச் 5 விண்கலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது தியான்வென் - 1. எட்டு மாதங்கள் கழித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயை அடைந்து அதனை சுற்றிவரத் தொடங்கியது தியான்வென் - 1. சீனாவின் பெரிய சாவாலே ரோவரை லேண்டர் மூலம் பாதிப்பின்றி தரையிறக்குவதுதான். அதனையும் இன்று வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது சீனா. தியான்வென்னுடன் செலுத்தப்பட்ட ரோவருக்கு ஸூராங் (Zhurong) எனப் பெயரிட்டுள்ளது சீனா. ஸூராங் என்பது சீன இதிகாசங்களில் நெருப்புக் கடவுளின் பெயராகச் சொல்லப்பட்டிருக்கும். அதையே ரோவருக்கும் வைத்திருக்கிறது சீனா.

வெற்றிகரமாக ரோவர் தரையிறங்கியதைக் கொண்டாடும் சீன விஞ்ஞானிகள்
வெற்றிகரமாக ரோவர் தரையிறங்கியதைக் கொண்டாடும் சீன விஞ்ஞானிகள்
Jin Liwang

சீனாவின் ஆர்பிட்டர் ஏற்கெனவே செவ்வாயின் படங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது‌. அதன் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் செவ்வாயின் நிலவியல், சுற்றுச்சூழல், வளிமண்டல அமைப்பு மற்றும் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. இதற்காக 13 கருவிகளை இந்தத் திட்டத்தின் உபகரணங்களில் பொருத்தியிருக்கிறது சீனா.

மாலத்தீவு அருகே விழுந்த சீன ராக்கெட்டின் பகுதிகள்... இன்று தப்பித்தோம், ஆனால் நாளை?!

சீனா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் செவ்வாய்க்கு விண்கலங்களைச் செலுத்தியிருந்தன. அவற்றில் அமெரிக்காவின் அதிநவீன பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் தரையிறங்கியிருந்தது. ஐக்கிய அரபு அமீரகம் தூரத்தில் இருந்து செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு ஆர்பிட்டரை மட்டும் அனுப்பியிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு