Published:Updated:

`இன்று தவறவிட்டால் 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’- அரிய நிகழ்வு குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்

வளைய சூரிய கிரகணம்
வளைய சூரிய கிரகணம்

சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம்.

பரந்து விரிந்திருக்கும் வான்வெளியானது பார்க்கப் பார்க்க சலிக்காத ஒரு அதிசயமாக இருக்கிறது. அந்த வானில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்தவகையில், இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கும் `வளைய சூரிய கிரகணம்’ ஆனது மிகவும் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். அதாவது, சூரியனிலிருந்து வரும் ஒளி நிலவால் தடுக்கப்பட்டு, அந்த நிலவின் நிழலானது பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழுகிறது. அதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். இதேபோல பூமியின் நிழல் நிலவில் விழுந்து, நிலவு மறைந்துபோனால் அது சந்திர கிரகணம் எனப்படுகிறது.

`இன்று தவறவிட்டால் 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’- அரிய நிகழ்வு குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்

சூரியனுக்கும் பூமிக்குமிடையே சந்திரன் வருவதால், சூரியன் மறைக்கப்பட்டு நிலவின் நிழல் நம் பூமியின் மீது விழுகிறது. நிலவு சூரியனை முழுதாக மறைக்கும் நிகழ்வைத்தான் முழு சூரிய கிரகணம் என்கிறோம். ஆனால், இன்றைய நிகழ்வின் போது நிலவானது சூரியனை முழுவதுமாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டுமே மறைக்கிறது. எனவே, சூரியனின் விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போல காட்சியளிக்கும். இதைத்தான் வளைய சூரிய கிரகணம் என்கிறோம். இதுதான் இன்றைக்கு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது!

இன்று காலை சுமார் 9.30 மணிக்கு சூரியனின் மையத்தில் அந்த அற்புதக் காட்சி புலப்படும். சூரியனின் நடுவில் பொட்டு வைத்ததுபோல், நிலவின் கருமைப்பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக்கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்கும். 2 நிமிடம் வரை நெருப்பு வளைய வடிவத்தில் சூரியன் காட்சி தரும். பின்னர் மெல்ல மெல்ல வளையம் அழிந்து சூரியன் பிறை வடிவில் காட்சி தரும். சுமார் 11.16 வரையில் பிறைவடிவில் காட்சி தரும் சூரியன், அதன்பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடும். இந்த வளைய சூரிய கிரகணமானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 93 சதவிகிதம் தெளிவாகத் தெரியும் என்றும் தமிழகத்தின் மற்றபகுதிகளில் சில நொடிகள் வரை தெரியுமென வானியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்

இந்த நிகழ்வு குறித்து மத்திய அரசின் விக்யான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ``கிரகணம் போன்ற இயற்கை வான் நிகழ்வுகள் மிக மிக அற்புதமானவை. இந்தக் கிரகணங்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் ஏராளமான வதந்திகளும் இருக்கின்றன. ஆனால், இந்த வளைய சூரிய கிரகணமானது யாருக்கும் எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால், மக்கள் அனைவரும் இந்த அதிசய நிகழ்வைக் காண வேண்டும். பொதுவாகவே, சூரியனிலிருந்து பலவிதமான கதிர்கள் வெளிவருகின்றன. எனவே, சூரிய கிரகணத்தின்போது புதிதாக எந்தவொரு கதிரும் வெளிவரப்போவதில்லை. எனவே, மக்கள் இந்தக் கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் படத் தேவையில்லை. இந்த வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலேயோ, தொலைநோக்கி, பைனாகுலர், கூலிங்கிளாஸ் மற்றும் வெல்டர்கள் பயன்படுத்தும் கண்ணாடி போன்றவற்றையோ பயன்படுத்தி பார்க்கக் கூடாது. நுண்துளை கேமரா மூலம் சூரியனின் பிம்பத்தை விழச் செய்தும், தொலைநோக்கிகள் மூலமாகவும் பிம்பத்தை உருவாக்கிப் பார்க்கலாம். சூரிய கண்ணாடிகள் மூலமாகவும் பார்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 2 குறைந்தபட்ச கிரகணங்கள் ஏற்படும் என்றாலும், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருமுறை காணக்கிடைக்கும் சூரிய கிரகணம், மறுமுறை அதே இடத்தில் இப்படியான கிரகணம் ஏற்பட சராசரியாக 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு