Published:Updated:

`செவ்வாய்க் கிரகத்தில் அணுகுண்டை வீசவேண்டும்!’ எலான் மஸ்க்கின் விநோத ஆசைக்குக் காரணம் என்ன?

Nuclear Bomb Blast
Nuclear Bomb Blast

அணுகுண்டை செவ்வாய்க் கிரகத்தில் ஒரு ‘நல்ல’ விஷயத்துக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

இன்று உலகத்தின் பார்வையில் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் எதுவென்றால் அது அணுகுண்டுதான். வரலாற்றில் இதுவரை இரண்டு தடவைகள் மட்டுமே அணுகுண்டுகள் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் ஏற்படுத்திய பாதிப்பு அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

Nuclear Bomb Blast
Nuclear Bomb Blast

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அணு ஆயுதங்களைப் பற்றிய பேச்சு அடிபட்டது. இந்தியா முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து மாறலாம் என்று ராஜ்நாத் சிங் பேசியது முதல் காரணம். எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட் மற்றொரு காரணம். இந்தியா பூமியில் அணுகுண்டை பயன்படுத்துவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எலான் மஸ்க் பல மில்லியன் கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார். அவர் அணுகுண்டைப் பயன்படுத்த விரும்புவது செவ்வாய்க் கிரகத்தில்.

இங்கே ஆறு, கடல், மழை எல்லாமே மீத்தேன்தான்! - டைட்டனில் உயிர் தேடும் நாசா

நாசா உட்படப் பல விண்வெளி நிறுவனங்கள் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பி வைக்க முடிவுசெய்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் பூமியை விட்டு மனிதன் வெளியேறும் நிலை வந்தால் செவ்வாய்க் கிரகத்தில்தான் அதற்கு ஏற்ற சூழல் இருக்கும் அங்கேதான் குடியேற வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருக்கிறது. செவ்வாய்க்கு மனிதனை அனுப்பிவைக்கும் போட்டியில் முன்னிலையில் இருப்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான். வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிவைக்கும் முதல் மனிதன் செவ்வாயில் கால் பதிப்பான். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க் கடந்த சில நாள்களுக்கு முன்னால் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.

‘Nuke Mars!’ என்ற அந்த ட்வீட் அவர் கடந்த 2015-ம் ஆண்டு சொன்ன கருத்தை அவர் இன்னும் மறக்கவில்லை என்பதையே உணர்த்தியது. செவ்வாய்க் கிரகத்தில் அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டும் என அப்போது ஒரு பேட்டியில் கூறியிருந்தார் எலான் மஸ்க். அவர் என்ன சொன்னாலும் உற்று நோக்கும் உலகம் இந்த விநோதமான யோசனையைக் கொஞ்சம் வித்தியாசமாகவே பார்த்தது. அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளைப் பற்றி எலானுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்திப் பார்க்கலாம் என அவர் முடிவு செய்ய என்ன காரணம்?

Vikatan

ஒரு கிரகம் சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றது என்பதே அதன் வெப்பநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் மிக முக்கியமான ஒன்று. பூமியிலிருந்து தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கிரகத்தில் -60 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. வளிமண்டலத்தின் அடர்த்தியும் குறைவு என்பதால் செவ்வாய்க்கு உள்ளே வரும் வெப்பத்தையும் அதனால் தக்கவைக்க முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்ய அணு குண்டைப் பயன்படுத்தலாம் என்பதுதான் எலான் மஸ்க்கின் திட்டம்.

Mars
Mars

இதைப் பற்றி விளக்கிய எலான் மஸ்க், தான் செவ்வாயின் தரைப்பகுதியில் அணு குண்டைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் துருவப்பகுதிக்கு மேலே வளிமண்டலத்தில் அதைப் பயன்படுத்துவதுதான் திட்டம் என விளக்கம் கொடுத்தார். அணு குண்டுகளை தொடர்ச்சியாக வெடிக்கச் செய்வதன் மூலமாக அந்தப் பகுதியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் நிலத்தில் பனிப்படலங்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் கலக்கும். இதன் மூலமாகப் பூமியில் நிகழ்வதைப் போல பசுமை இல்ல வாயு விளைவு அங்கேயும் நிகழ வாய்ப்புண்டு என்பதால் அது வெப்பநிலையை அதிகரிக்கும். இதற்காக ஹைட்ரஜன் குண்டுகளைப் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க்கின் யோசனை அவருக்குச் சரியானதாகத் தோன்றினாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். காரணம் வளிமண்டலத்தில், பனிக்கு அடியில் எனச் செவ்வாயில் இருக்கும் ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்ஸைடின் அளவு மிகக் குறைவுதான். ஆகவே அணுகுண்டு வெடித்து வெப்பத்தால் பனி உருகினாலும் கூட காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். எனவே என்ன செய்தாலும் பசுமை இல்ல வாயு விளைவு அங்கேயும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகும். மேலும் அணுகுண்டுகளால் கடுமையான கதிர்வீச்சு வெளியாகும். அதுவும் மனிதர்களுக்கு வாழ்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்காது என்ற கருத்தும் நிலவியது.

Nuclear Bomb Blast
Nuclear Bomb Blast
Vikatan

நிலைமை இப்படியிருக்க பல வருடங்களுக்குப் பிறகு அணுகுண்டு திட்டத்தை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தியிருக்கிறார் எலான் மஸ்க். ‘Nuke Mars!’ என்ற வாக்கியம் அதைக் குறிப்பதுதான். அதை வலியுறுத்துவது தொடர்பாக T-Shirt ஒன்றையும் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தான் சொன்னது ஒரு நாள் நடக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

அடுத்த கட்டுரைக்கு