Published:Updated:

``2022 ஆகஸ்டில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்!”- திருவனந்தபுரம் இஸ்ரோ மையத் தலைவர் நாராயணன்

``மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டம், வரும் 2022 ஆகஸ்ட் 15-க்குள் செயல்படுத்தப்படும்” என திருவனந்தபுரம் இஸ்ரோ திரவ உந்துகை அமைப்பு மையத்தின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் நாராயணன்
பட்டமளிப்பு விழாவில் நாராயணன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் இஸ்ரோ திரவ உந்துகை அமைப்பு மையத்தின் இயக்குநர் விஞ்ஞானி நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,``ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் தொழில்நுட்ப மாற்றங்களை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இஸ்ரோ விண்வெளி மையம்
இஸ்ரோ விண்வெளி மையம்

தொழில்நுட்பப் பொறியியல் துறையின் ஒவ்வோர் அம்சத்திலும் செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்கள் கற்றலில் புதிது புதிதாக எழும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை, தொலைதொடர்பு, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு, சூறாவளிக் கண்காணிப்பு, மீன்பிடி மண்டலம் என நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் இஸ்ரோ ஏதோ ஒரு வகையில் சேவை செய்து வருகிறது.

``நாங்கள் 2 மாதங்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம்" நாசா அறிவிப்பு குறித்து இஸ்ரோ சிவன்

ஒரே விண்வெளிப் பயணத்தில் 104 விண்கலன்களை வெற்றிகரமாக ஏவி அறிமுகப்படுத்தியது இந்தியா மட்டும்தான். சந்திரயான் 1, இங்கிருந்து 4 லட்சம் கி.மீ கடந்து சென்று, சந்திரனைச் சுற்றி வந்து அங்கு தண்ணீர் இருந்ததை கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்பை உலகத்தில் முதன்முறையாகச் செய்தது இந்தியாதான். மங்கள்யான் 68 கோடி கி.மீ வெற்றிகரமாகப் பயணித்து முதல் முறையிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது. ஆனால், சந்திரயான் 2, 98 சதவிகிதம் வெற்றிகரமாக இருந்தது.

திருவனந்தபுரம் இஸ்ரோ மையம்
திருவனந்தபுரம் இஸ்ரோ மையம்

இது, உலகின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. இது உயர் துல்லியத்தன்மை கொண்ட புகைப்படங்களை அளிக்கிறது. வரும் 2022 ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக, 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பி வரும் வகையில் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் 50 விண்கலன்களை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது”என்றார்.