Published:Updated:

Space Tourism: விண்வெளியில் விர்ஜின் கேலக்டிக்... சாதனை செய்த 71 வயது ரிச்சர்ட் பிரான்சன்!

ரிச்சர்ட் பிரான்சன், ஸ்ரீஷா பண்ட்லா குழுவினர்
ரிச்சர்ட் பிரான்சன், ஸ்ரீஷா பண்ட்லா குழுவினர் ( Susan Montoya Bryan | AP )

பூமிக்குத் திரும்பிய பின்னர் தனது குழுவினரை வாழ்த்திய பிரான்சன், "17 ஆண்டு கால கடின உழைப்பிற்குக் கிடைத்த பலனாக இது கிடைத்துள்ளது" எனப் பெருமிதம் அடைந்தார்.

பெருந்தொற்றின் பிடியில் உலகம் சிக்கிக்கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நேரம் சுற்றுலா என்ற வார்த்தையையே பலரும் மறந்திருப்போம். இந்தச் சூழலிலும், மக்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்வதற்குப் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றனர் உலகின் முக்கிய பணக்காரர்கள் சிலர்.
புறப்படும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம்
புறப்படும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம்
Virgin Galactic via AP

ஆம், விண்வெளிச் சுற்றுலா, அதாவது Space Tourism என்ற திட்டத்தை முன்வைத்து அமேஸான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸின் (Jeff Bezos) ப்ளூ ஆரிஜின் (Blue Origin) நிறுவனமும், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் சில காலமாகவே கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. இந்த மாதம் 20-ம் தேதி ஜெஃப் பெஸோஸின் பளூ ஆரிஜின் நிறுவனம் பயணியர்களுடன் கூடிய முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. அதற்கு 9 நாள்களுக்கு முன்பே, அதாவது நேற்றே சொந்த விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.

பயணத்தில் ரிச்சர்ட் பிரான்சன் குழுவினர்
பயணத்தில் ரிச்சர்ட் பிரான்சன் குழுவினர்
Virgin Galactic via AP

பல்வேறு துறைகளிலும் தடம் பதித்திருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜின் என்கிற மல்டி நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன். 71 வயதாகும் இவர் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட ஐந்து பேருடன் நேற்று விண்வெளிக்குப் பறந்திருக்கிறார். மெக்சிகோ பாலைவனத்திலிருந்து 88 கி.மீ உயரம்வரை சென்று வளைந்து இருக்கும் பூமிப் பந்தை ரசித்திருக்கின்றனர். புவிஈர்ப்பு விசை இல்லாமல் சுமார் நான்கு நிமிடங்கள் விண்வெளியில் மிதந்து பின்னர் மீண்டும் தரை இறங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

பூமிக்குத் திரும்பிய பின்னர் தனது குழுவினரை வாழ்த்திய பிரான்சன், "17 ஆண்டு கால கடின உழைப்பிற்குக் கிடைத்த பலனாக இது கிடைத்துள்ளது" எனப் பெருமிதம் அடைந்தார்.
கொண்டாட்டத்தில் ரிச்சர்ட் பிரான்சன், ஸ்ரீஷா பண்ட்லா குழுவினர்
கொண்டாட்டத்தில் ரிச்சர்ட் பிரான்சன், ஸ்ரீஷா பண்ட்லா குழுவினர்
Andres Leighton

முன்பு குறிப்பிட்டது போல இந்தத் தனியார் விண்வெளி சுற்றுலா அனுபவத்தை மக்களுக்கு தருவது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் நீண்டநாள் கனவு. அவரும் இந்த மாதம் தனது சொந்த விண்வெளி சுற்றுலா நிறுவனத்தில் விண்வெளி பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு 9 நாள்கள் முன்னதாக விண்வெளிக்குப் பறந்ததின் மூலம் சொந்த ராக்கெட்டில் விண்வெளி பயணத்தை நிறைவு செய்த முதல் நபராகிறார் ரிச்சர்ட் பிரான்சன். விண்வெளிக்குச் செல்லும் 70 வயதைக் கடந்த இரண்டாவது நபர் ரிச்சர்ட் பிரான்சன்.

Sirisha Bandla
Sirisha Bandla
Photo: Twitter//@USAndIndia
மேலும் அவருடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி பெண்ணான ஸ்ரீஷா பண்ட்லா கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸிற்கு அடுத்தாக விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் ஆகிறார். விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்திய குடிமகன் ராகேஷ் ஷர்மா மட்டுமே.

தனது மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள் உட்பட 500 பேர் பார்த்து கொண்டிருக்க பிரான்சனின் ராக்கெட் பூமியிலிருந்து புறப்பட்டது. பணக்காரர்களுக்கு இடையிலான தனியார் ஸ்பேஸ் டூரிசம் போட்டியில் வென்றுள்ள பிரான்சனை ப்ளூ ஆர்ஜின் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SPACEX) நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் வாழ்த்தினர்.

அடுத்த கட்டுரைக்கு