Published:Updated:

உங்க பேர் செவ்வாய்க்கிரகத்துக்குப் போகணுமா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

சே. பாலாஜி

செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் ரோவரில் உங்களின் பெயரையும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறது நாசா.

Mars 2020
Mars 2020

க்அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நாசா.

அந்தப் பதிவில் நாசா "2020 ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செல்லவிருக்கின்ற எங்களின் ரோவர், மில்லியன் கணக்கான மக்களின் பெயர்களையும் மைக்ரோ சிப் வடிவில் கொண்டுசெல்ல இருக்கிறது. எனவே, உங்களின் பெயர் அதில் இடம்பெற இப்போதே பதிவுசெய்து உங்கள் பெயரை செவ்வாய்க்கிரகத்துக்கு ரோவரில் பறக்க விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளது.

இதில் பெயரைப் பதிவு செய்வதற்கு நம்முடைய பெயர், நாடு, அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும். பெயர்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019.

செவ்வாய்க்கிரகத்துக்குக் கொண்டுசெல்ல, நாசாவுக்கு பெயர்களை அனுப்ப https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற லிங்கை க்ளிக் செய்து, பக்கம் திறந்ததும், உங்கள் முதல் பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிடவும். பிறகு, பட்டியலிலிருந்து நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் தங்கள் அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சலை குறிப்பிடுங்கள். அனைத்துத் தகவல்களையும் பூர்த்திசெய்த பிறகு, 'Send My Name to Mars' என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். உங்கள் பெயர் நாசாவுக்கு அனுப்பப்படும்.

Mars 2020
Mars 2020

நீங்கள் உங்கள் பெயரை அனுப்பியதும், வேறொரு இணையப்பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு உங்களின் மாதிரி போர்டிங் பாஸ் காட்டப்படும். உங்களின் சுய விவரங்களோடு அது இருக்கும். அதைத் தரவிறக்கவோ, அச்சிடவோ செய்யலாம்.

எதிர்காலத்தில் எலான் மஸ்க் போன்றவர்கள் நிலவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினால் மனிதர்கள் அங்கு சென்று வசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதுவரைக்கும் செவ்வாயில் நம் 'பெயர்சொல்லும்படி' ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இதுபோன்ற முயற்சிகள்தான் ஒரே வழி. 😉