Published:Updated:

விவசாய தேசத்தில் விண்வெளிக் கனவுகள் சாத்தியமானது எப்படி? #VikramSarabhai100

விக்ரம் சாராபாய்
விக்ரம் சாராபாய்

விண்வெளித் தொழில்நுட்பங்கள் மக்களுக்காகப் பெருமளவில் பயன்பட வேண்டும் என்பதை முதல் இலக்காக வைத்திருந்தவர் விக்ரம் சாராபாய். அவரின் 100-வது பிறந்தநாள் இன்று.

சந்திரயான் 2-வை வெற்றிகரமாக விண்ணில் ஏவுகிறது; 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி உலகையே வியக்கவைக்கிறது; சூரியன்தான் அடுத்த இலக்கு எனச் சொல்லி பிரமிப்பூட்டுகிறது. இப்படி எண்ணற்ற ஆச்சர்யங்களை நிஜமாக்கிக்கொண்டிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சியான இஸ்ரோ. இன்றைக்கு இந்தப் பெருமைகளுக்கு காரணமான நம் விஞ்ஞானிகளை எந்த அளவுக்கு கொண்டாடுகிறோமோ, அதே அளவுக்குக் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் பிதாமகன். இது அவரின் நூற்றாண்டு.

"இளம்பெண்களே... கனவுகளை நோக்கி நகருங்கள்" சந்திரயான் 2வில் பணியாற்றும் ரித்து கரிதால் #RituKaridhal

உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டுமே செயற்கைக் கோள்களை அனுப்ப திட்டமிட்ட 1960-களில் அந்தப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைக் கண்டு உலகமே அதிசயித்தது. நமது விண்வெளி ஆய்வுக்கூடமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைந்த வளாகமே, இன்று அவரைப் போற்றும்விதமாக விக்ரம் சாரா பாய் மையம் என்றுதான் அழைக்கப்படுகிறது. அந்தச் சாதனைகளுக்குக் காரணம் இந்த ஒற்றை மனிதர்தான்.

இந்தியக் கனவு நாயகர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் ஆசிரியர் விக்ரம் சாரா பாய். இவர் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் அகமதாபாத்தில் 1919-ல் பிறந்தார். மகா சுட்டியான சிறுவனாக வளர்ந்தார். ஒருமுறை தன் தந்தையிடம் ரயில் பொம்மை ஒன்றைக் கேட்டார் விக்ரம். அப்போது அவருக்கு 6 வயது. ரயில் பொம்மை வாங்கித்தர தந்தை எதனாலோ தயங்கி தாமதித்தார். உடனே தன் நண்பர்கள் இருவரோடு களம் இறங்கிய சாரா பாய் வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களை வைத்து மினி மோட்டாரில் ஓடும் ரயிலை தானே செய்து விளையாடத் தொடங்கினார். விரைவில் அதன் சக்கரங்களுக்கு ஏற்ற தகர தண்டவாளத்தையும் அவர் செய்து அசத்தியபோது ஊரே அதுபற்றி பேசி வியந்தது.

கூகுளின் டூடுல்
கூகுளின் டூடுல்
Google

தனது 9 வயதில் சைக்கிள் கேட்டு, அதைத் தொடர் நச்சரிப்புகளுக்குப் பின்னர் பெற்றார் அவர். சைக்கிள் ஓட்டுவதைவிட சுகமான அனுபவம் வேறு உண்டா. அதை ஓட்டும் போது சர்க்கஸ் வித்தைகள் செய்பவரா நீங்கள்? அப்படியெனில் விக்ரம் சாரா பாயின் சுட்டித்தனங்கள் கொஞ்சம் உங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கைகளையும் ஹேண்ட் பாரிலிருந்து எடுத்துவிடுவார் அவர். பிறகு கீழிருந்து காலை எடுத்து ஹேண்ட் பாரில் வைப்பார். நேர் ரோட்டில் சைக்கிள் லாவகமாக ஓடும்போது கைகளை விரித்து... இதோ நான் வானில் பறக்கிறேன் என சத்தமாகக் கூவியபடியே கண்களை மூடுவார் விக்ரம் சாரா பாய்.

இப்படி பல விஷயங்களில் விதவிதமான ஆராய்ச்சிகள் செய்துபார்த்த விக்ரம் சாரா பாய் படிப்பிலும் சோடை போகவில்லை. மிகவும் ஈடுபாட்டோடு படித்த அவருக்கு கணிதமும் அறிவியலும் கைவந்த கலையாக இருந்தன. பள்ளிப்படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் கல்லூரி படிப்புக்கு இடம் கிடைத்தது. லண்டனில் கல்லூரி காலத்தில் விக்ரம் சாராபாய்க்கு, விஞ்ஞானிகள் ஹென்றி கேவெண்டிஷ் போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். காஸ்மிக் அலைகள் எனும் அண்ட அலைகள் மீது அவருக்கு அலாதி விருப்பம் வந்து விஞ்ஞானியாக ஆய்வுகளைத் தொடர்ந்தார் சாராபாய்.

சந்திரயான் 2 விண்ணில் ஏவும்போது
சந்திரயான் 2 விண்ணில் ஏவும்போது
ISRO

ஆனால், இரண்டாம் உலகப்போர் காரணமாக அவர் 1942-ல் இந்தியா திரும்பினார். நேரே இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனை சந்தித்தார்; நோபல் அறிஞர் ராமனின் தலைமையில் இந்தியாவிலேயே காஸ்மிக் அலைகள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி உலகின் கவனத்தை ஈர்த்தார் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு நமது முதல் பிரதமர் நேரு அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்திய தாய்த்திருநாட்டை உலக அளவில் உயர்த்திட முயன்றபோது துணைநின்ற விஞ்ஞானிகள் பலர். அவர்களில் முதன்மையானவர் விக்ரம் சாரா பாய். அவரது கடும் உழைப்பால் உருவான அறிவியல் நிறுவனங்கள் ஒன்றிரண்டல்ல.

அறிவியலும் தொழில்நுட்பமும் பல்கலைக்கழகப் பாடம் மட்டுமல்ல. அவை சாதாரண மக்களுக்குப் பயன்படுவதே சிறப்பு என அறிவித்தார் விக்ரம் சாரா பாய். இந்தியா ஒரு விவசாய நாடு. பலவிதமான இனங்கள் சேர்ந்து வாழும் நாடு. விவசாயிகள், மீனவர்கள், மலைவாழ் மக்கள் என்று பலதரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் விண்வெளித் தொழில்நுட்பங்கள் பயன்பட வேண்டும் என நினைத்த சமூக விஞ்ஞானி விக்ரம் சாராபாய்.

Vikatan

மற்ற நாடுகள் விண்வெளியில் அறிவியல் ஆய்வுகள் செய்துகொண்டிருந்தபோது நம் நாட்டின் தகவல் தொடர்புக்காக செயற்கைக் கோள்களை அனுப்பி தொலைக்காட்சி (டிவி) நாடாக இதை மாற்றியவர் விக்ரம் சாரா பாய். விவசாயிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரம் கண்டு சொல்லவும், மீனவர்களுக்கு கடலின் தட்பவெப்பத்தை அறிவிக்கவும், விண்வெளி ஆய்வை வளைய வைத்த மாமேதை விக்ரம் சாரா பாய்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உட்பட 18 அறிவியல் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கி இந்தியாவின் அறிவியலை 'வானமே எல்லை' என உயர வைத்த அந்த மாமனிதர் 1971-ல் டிசம்பர் 30 அன்று நம்மைவிட்டு பிரிந்தார். அவரது கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் முதன்மையானது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் எனும் கனவு நாயகனை கண்டுபிடித்து நாட்டுக்கு வழங்கியது ஆகும்.

`இதுதான் உண்மையில் சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்!'- வைரல் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

பனிப்போர் சமயம் நாட்டின் பெருமைகளை உயர்த்துவதற்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சிகளில் போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. அதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இந்தியாவின் தேவை அறிந்து விண்வெளித் திட்டங்களை வடிவமைத்தவர். அதை செயல்படுத்தியவர். அதனால்தான் விவசாய நாடாக இருந்த இந்தியா இன்றைக்கு விண்வெளி அறிவியலிலும் ஜொலிக்க முடிகிறது. விக்ரம் சாரா பாய்க்கு இந்த நாளில் நன்றி சொல்வோம்!

அடுத்த கட்டுரைக்கு