சூரியனைச் சுற்றி வரும் பட்டியலில் கோள்கள் மட்டுமில்லாது ஏராளமான விண்கற்களும் அடக்கம். இவற்றில் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு மிக அருகில் ஒரு விண்கல் இன்னும் 72 மணி நேரத்துக்குள் கடக்கவிருப்பதாக நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது. இதனால் பூமிக்கோ மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி அறிவியலாளர்கள் சொல்வதைப் பார்ப்போம்.
விண்கல் 388945 (2008 TZ3) என்று பெயரிடப்பட்ட இது 1608 அடி அகலம் கொண்டது. அதாவது நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரத்தை விட பெரியது. இந்த விண்கல் ஒருவேளை பூமியில் மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த முறை விண்கல் பூமியைத் தாக்கப் போவதில்லை என நம்பிக்கை அளிக்கின்றனர். அவர்களது கணக்கு படி பூமிக்கு 2.5 மில்லியன் மைல்கள் தொலைவில் இந்த விண்கல் கடந்துவிடும் எனத் தெரிவிக்கின்றனர். நமக்கு வேண்டுமானால் இந்தத் தொலைவு பெரிதாக இருக்கலாம், ஆனால் விண்வெளியில் மிகக் குறைவான தூரம் இது.
சுவாரஸ்யம் என்னவென்றால், சம்மர் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு நாமெல்லாம் போவது போல இந்த விண்கல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் இப்படி விசிட் அடித்துவிட்டு செல்கிறது. 2020-ல் வந்த போது 1.7 மில்லியன் மைல் தொலைவில், அதாவது இப்போதைவிட சற்றே அருகில் பூமியைக் கடந்து சென்றது. 2024-ல் வரும் போது 6.9 மைல் தொலைவில் கடக்குமாம். அதே சமயம், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருந்தாலும், இந்த விண்கல் இந்தளவு அருகில் பூமியைக் கடந்துபோகும் நிகழ்வு இனி 2163 ஆண்டுதான் நடக்கும் என்கிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி, வருகிற மே 15-க்குள் பூமிக்கு மிக நெருக்கமான தொலைவில் இந்த விண்கல் நம்மைக் கடந்து செல்லும் என அறிவியலளார்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அச்சப்படத் தேவையில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.