Published:Updated:

இஸ்ரோவின் வருங்காலத் திட்டங்கள்..!- அடுத்த ஆண்டு விண்ணில் பாய்கிறது ஆதித்யா, சந்திரயான்-3

சந்திரயான் 2 விண்ணில் ஏவும்போது
சந்திரயான் 2 விண்ணில் ஏவும்போது ( ISRO )

அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அதன் கண்காணிப்பு நிலையத்துடனான இணைப்பைக் கடந்த செப்டம்பர் 7 -ம் தேதி அன்று இழந்தது. இதற்கான காரணம் என்னவென்று கண்டறியப்பட்டு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இஸ்ரோ.

'சந்திரயான் 2 தோல்வியடைந்தது இதனால்தான்!' மீண்டும் நிலவில் தரையிறங்கத் திட்டமா?!

அதுமட்டுமல்லாமல் சந்திரயான் 3 விரைவில் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ கூறியிருந்தது. இந்நிலையில், சந்திரயான்-3 அடுத்த ஆண்டு நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான்-3 செலவிற்காக அரசிடம் கூடுதலாக ரூ.75 கோடி கேட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி. இப்போது கூடுதலாகக் கேட்கப்பட்டிருக்கும் இந்தத் தொகையானது இந்த பட்ஜெட்டில் 11%.

இந்தச் சந்திரயான் 3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும். இந்த 75 கோடியில் ரூ.60 கோடி, சந்திரயான் 3-க்குத் தேவையான கருவிகள், பாகங்கள் வாங்குவதற்கும் ரூ.15 கோடி மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

Vikram Lander
Vikram Lander

மொத்த பட்ஜெட்டான ரூ.666 கோடியில் ரூ.8.6 கோடி மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இந்த மிஷன் 2021 அல்லது 2022-ல்தான் செயல்படுத்தப்படும். ரூ.12 கோடி, சிறிய செயற்கோள்கள் சிலவற்றை விண்ணிற்கு எடுத்துச்செல்லும் SSLV(Small Satellite Launch Vehicle) வாகனத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த விண்கலங்களை ஏவத் தேவையான ஏவுதளத்தை உருவாக்க ரூ.120 கோடி செலவாகும். மேலும் இஸ்ரோ, UR Rao செயற்கைக்கோள் நிலையம், சதீஷ் தவான் செயற்கைக்கோள் நிலையம் என இரண்டு முக்கிய மையங்களைக் கட்டவுள்ளது. இவை செயற்கைக்கோள்களைப் பரிசோதிக்கவும் மற்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும். இதற்குத்தான் அதிகபட்ச தொகையாக ரூ.516 கோடி செலவாகும்.

சந்திரயான் 3 மட்டும் அல்லாமல் சூரியனுக்குச் செல்லும் ஆதித்யா மற்றும் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டங்களும் இஸ்ரோவின் வருங்காலத் திட்டங்களாக இருக்கும். இதில் ஆதித்யா அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏவப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தைத் தொடவில்லை என்றாலும் சந்திரயான் 3 நிலவைச் சிறப்பாக ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு