Published:Updated:

`முதல் மனித உருகொண்ட ரோபோ!' - இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் கலக்கவிருக்கும் `வியோமித்ரா!'

வியோமித்ரா
வியோமித்ரா

தூரத்தில் இருந்து பார்த்தால் ISRO-வில் பணிபுரியும் ஒரு பெண் விஞ்ஞானி என்றுதான் எண்ணத் தோன்றும். வியோமித்ரா, அத்தகைய நேர்த்தியான வடிவமைப்பு.

கணினி வேற்று கிரகவாசிபோல் பார்க்கப்பட்ட காலம்போய் இன்று கணினியும் செல்போனும் உலகையே ஆட்கொண்டுள்ளது. அதேபோல் ரோபோக்கள் இன்று உலக அளவில் பல அளப்பரிய செயல்களைச் செய்கின்றன. வெளிநாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகம். நம் நாட்டில் ரோபோக்களின் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது எனலாம்.

ISRO-வின் கண்டுபிடிப்பான வியோமித்ரா (Vyommitra) என்ற ரோபோ, formal உடையணிந்து, ISRO-வின் அடையாள அட்டையுடன், அழகான கண் சிமிட்டலுடன் அமர்ந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால் ISRO-வில் பணிபுரியும் ஒரு பெண் விஞ்ஞானி என்றுதான் எண்ணத் தோன்றும். அத்தகைய நேர்த்தியான வடிவமைப்பு.

வியோமித்ரா
வியோமித்ரா

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தது 'வியோமித்ரா.' "நான் முதல் மனித உருகொண்ட ரோபோ. என்னால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காணவும், அவர்களுடன் உரையாடவும், அவர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கவும் முடியும். ஆராய்ச்சியாளர்கள் செய்யும் வேலைகளான ஸ்விட்ச் பேனல் ஆபரேசன், ECLSS (Environmental control and Life Support System) வேலைகள், உஷார்படுத்தும் வேலை மற்றும் சக பயணியாகவும் என்னால் இருக்க முடியும்" என்று பேட்டி அளித்துள்ளது பாதி மனித உருக்கொண்ட வியாமித்ரா.

மனிதர்கள் செய்வதைத் திரும்ப செய்யவல்ல இந்த ரோபோவுக்கு கால்களில்லை என்பதால் இதனால் முன்புறமும் பக்கவாட்டிலும் மட்டுமே சாய்ந்து வேலைகளைச் செய்ய முடியும். அதனால் இதை "Half Humanoid" என்கிறார்கள்.

கடந்த ஆண்டு 2019-ல் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அவர்கள் நம் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று உரையாற்றினார். அந்த உரையின் விதையை தன்னுள் எடுத்த ISRO அதை விருட்சமாக உருவாக்க எடுத்த திட்டம்தான் "Gaganyaan Mission". இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட ரோபோதான் வியோமித்ரா. மனிதர்கள் இல்லாத சோதனை ஓட்டத்தை இந்த வருட டிசம்பரிலும் மற்றும் ஜூன் 2021-லும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதில் வியோமித்ரா பங்கேற்று விண்வெளி செல்லும். அங்கிருந்து ISRO விஞ்ஞானிகளிடம் உரையாட முடியும். அவர்களின் கட்டளைக்கு ஏற்ப இந்த ரோபோவால் பணிபுரிய முடியும்.

விண்கலன்
விண்கலன்

ISRO 2022-ல் மனிதர்களை இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக 4 இந்திய விமானிகள் தேர்வாகி உள்ளார்கள். அவர்களுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள் உடல் நிலையைக் கண்காணிக்க இந்திய விமான துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரான்சில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். 2022 மனிதர்களுடன் இணைந்து வியோமித்ரா விண்வெளி செல்லுமா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

விண்வெளியில் சென்று கலக்க வியோமித்ராவுக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு