Published:Updated:

``நாங்கள் 2 மாதங்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம்" நாசா அறிவிப்பு குறித்து இஸ்ரோ சிவன்

சிவன் - இஸ்ரோ மைய தலைவர்
சிவன் - இஸ்ரோ மைய தலைவர்

இதன்மூலம் நாசா புதிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கிறது இஸ்ரோ.

விண்வெளி ஆராய்ச்சியில் ஆகச் சிறந்த முயற்சியாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க முடிவு செய்திருந்தது இஸ்ரோ. இதற்காகப் பல தடைகளைக் கடந்து ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2. அனைத்து முக்கியக் கட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்து, நிலவில் தரையிறங்கும் கட்டமாக செப்டம்பர் 7-ம் தேதி நுழைந்தது சந்திரயான் 2. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நொடிகளுக்கு முன், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால், நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை நூலிழையில் இழந்தது இந்தியா. இந்த நிகழ்வுக்குப் பிறகு நேற்று மீண்டும் தலைப்பு செய்திகளில் 'சந்திரயான் 2', 'விக்ரம் லேண்டர்' போன்றவை இடம்பெற ஆரம்பித்தன. இதற்குக் காரணம் சண்முக சுப்பிரமணியன் என்ற 33 வயது தமிழக இளைஞர்.

சண்முக சுப்பிரமணியன்
சண்முக சுப்பிரமணியன்

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கு சண்முக சுப்பிரமணியன் என்பவர் உதவியதாகக் குறிப்பிட்டது நாசா. இவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். இவர், விக்ரம் லேண்டர் நிலவைச் சென்றடையும் முன்பு நாசாவின் Lunar Reconnaissance Orbiter (LRO) எடுத்த படங்களையும், அதன் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு விக்ரம் லேண்டர் இந்தப் பகுதியில்தான் விழுந்திருக்கும் என யூகித்து நாசாவுக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதை ட்விட்டரிலும் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்த நாசா இவர் சொன்னதை உறுதிசெய்து 'அது விக்ரம் லேண்டர் விழுந்த இடம்தான், அங்கு காணப்படுவது விக்ரம் லேண்டரின் பாகங்கள்தான்' எனத் தெரிவித்தது. இதை நாசா, இஸ்ரோ என இரண்டு அமைப்புகளுக்குமே அனுப்பியதாகவும், நாசாவின் LRO குழுதான் நல்ல முறையில் அதை ஆராய்ந்து பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

`நாசாவால் முடியாததை செய்யணும்னு நினைச்சேன்!’- விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சென்னை இன்ஜினீயர்

நேற்று, சமூக வலைதளங்கள் அனைத்திலும் இதுதான் டிரெண்டிங் என்றாலும் இந்தக் கண்டுபிடிப்பு குறித்து இஸ்ரோ தரப்பிலிருந்து எந்த ஓர் அறிவிப்போ விளக்கமோ தரப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரோவின் தலைவர் சிவன் பேசியிருக்கிறார்.

"லேண்டர் இருக்கும் இடத்தை செப்டம்பர் 10-ம் தேதியே நமது ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடித்துவிட்டோம். இதற்கான அறிவிப்பையும் அப்போதே வெளியிட்டோம். இதை இஸ்ரோ இணையதளத்தில் பார்க்கலாம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இவர் சொல்வதைப் போல ஓர் அறிவிப்பு செப்டம்பர் 10-ம் தேதி இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டிருப்பது உண்மைதான். தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்த மூன்று நாள்களுக்கு பின் வெளியான அந்த அறிக்கை "விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என்பதைச் சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டது. மீண்டும் லேண்டருடனான தொடர்பை நிறுவ முயற்சி செய்து வருகிறோம்" என்கிறது.

இதன்மூலம் நாசா புதிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்பதையே மறைமுகமாகச் சொல்கிறது இஸ்ரோ.
விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர்

நாசாவின் இந்தக் கண்டுபிடிப்பு, சந்திரயான்-2 குறித்து கூடுதலாக ஏதாவது தகவல் பெற உதவுமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன், "விக்ரம் லேண்டர், 30 கிலோமீட்டரிலிருந்து 5 கிலோமீட்டர் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் கீழிறங்கியது. ரஃப் பிரேக்கிங்குக்குப் பிறகுதான், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், தரையிறங்குதலில் இறுதிக் கட்டமான 'ஃபைன் பிரேக்கிங்கில் 'ஒரு த்ரஸ்டரை மட்டுமே கொண்டு இயங்கியுள்ளது. இதன்காரணமாக, லேண்டரின் வேகம் ஒரு மணித்துளிக்கு 146 மீட்டாராகக் குறைந்துள்ளது. இதனால் திசைமாறிப்போன லேண்டர், குறிப்பிட்ட தரையிறங்கும் பகுதியிலிருந்து 750 மீட்டர் தள்ளிச் சென்று செயலிழந்திருக்கிறது. தரையிறங்குதலில் ஏற்பட்ட விபத்து காரணமாக, லேண்டரில் உள்ள இயந்திரம் பழுதடைந்து பூமியுடனான இணைப்பை இழந்தது" என்று தோல்வியின் காரணத்தைத் தெரிவித்திருந்தது. Liquid Propulsion System Centre இயக்குநர் வி.நாராயணன் தலைமையிலான இஸ்ரோவின் குழு, நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து இந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

'சந்திரயான் 2 தோல்வியடைந்தது இதனால்தான்!' மீண்டும் நிலவில் தரையிறங்கத் திட்டமா?!

நாசாவின் இப்போதைய அறிவிப்பும் விக்ரம் லேண்டரின் பாகங்கள் தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து 750 மீட்டர் தள்ளியிருப்பதையே தெரிவிக்கிறது. இதன்மூலம் இஸ்ரோ குழு முன்பே விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது தெளிவாகிறது.

அடுத்த கட்டுரைக்கு