Published:Updated:

யூரி ககரின்... முதன் முதலில் மனிதன் விண்வெளிக்குச் சென்ற நாள்... இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு!

First man in space
First man in space

ரஷ்ய குழந்தைகளின் மனதில் யூரி, ஒரு ஹீரோவாகவும் முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார். அவர் விண்வெளிக்கு சென்ற 60-ம் ஆண்டு விழா இன்று விண்வெளி ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். யூரி ககரின் (Yuri Gagarin) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம், யூரி ககரின் ஒரு விண்வெளி வீரர் என்று. ஆனால் அவரைப் பற்றிய தகவல்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அளவிற்கு நம் நினைவில் இருக்காது. 'யூரி ககரின்', விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்.
யூரி ககரின்
யூரி ககரின்

ஆமாம், இப்போ தான் ஞாபகம் வருது என்கிறீர்களா! 1950-களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே யார் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பது என்ற பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 20 ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. தாங்கள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்பதைப் பறைசாற்றுவதில் குறியாக இருந்தன இரு நாடுகளும். அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று தேசத்தின் பாதுகாப்பு. தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாட்டின் மீது தாக்குதல் நடந்த எந்த நாடும் விரும்பாது, மற்றொன்று பெருமை. இந்த இரண்டிற்காகத்தான் இரு நாடுகளும் போட்டிப் போட்டு விண்வெளித் தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தன.

ஜூலை 29,1955... விண்வெளியில் தாங்கள் ஒரு செயற்கைக் கோளை ஏவப்போவதாக அறிவிக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 1955, தாங்களும் தங்கள் முதல் செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்தப்போவதாக அறிவிக்கிறது ரஷ்யா. அங்கே தொடங்குகிறது இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளிப் போட்டி.

ரஷ்யா கூறியபடியே 1957 அக்டோபர் 4-ல் பூமியை வலம் வரும் முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. ஸ்புட்னிக்-1 (Sputnik-1) என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள்தான் பூமியில் இருந்து விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக் கோள்.

First man in space
First man in space

அதனைத் தொடர்ந்து 1957 நவம்பர் 3-ல் லைகா என்று பெயரிடப்பட்ட நாயை விண்ணுக்கு அனுப்பி பூமியிலிருந்து விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெயரையும் பெறுகிறது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுப் பல செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தின. தான் தான் விண்வெளித் தொழில்நுட்ப ஜாம்பவான் என மார்தட்டிக் கொள்ள இருநாடுகளுக்கு ஒரு பெரிய வெற்றி தேவையாக இருந்தது.

அந்தப் பெரிய வெற்றியை யூரி ககரினை விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம் பெற்றது ரஷ்யா. 1961 ஏப்ரல் 12, மாஸ்கோ நேரப்படி காலை 9.07-க்கு வாஸ்டாக் -1 (Vostak -1) விண்கலத்தின் மூலம் பூமியின் முதல் மனிதர் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார். பூமியில் இருந்து 327 கிலோமீட்டர்கள் தொலைவில் 1 மணி நேரம் 48 நிமிடம் விண்வெளியில் பறந்த பிறகு பூமிக்குத் திரும்புகிறது விண்கலம். அது விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யா அந்த வெற்றியை யூரி ககரினை விண்ணிற்கு அனுப்பியதன் மூலம் சுவைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூரி ககரின் ரஷ்யாவின் ஹீரோவாகிறார். அவர் விண்வெளிக்குச் சென்று 60 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்றும் ரஷ்ய மக்களின் மனதில் அவர் ஹீரோவாகவே கொண்டாடப்படுகிறார். ககரின் விண்ணுக்குச் செல்லும் போது, விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அவர் விண்வெளியிலேயே அதிக நாள்கள் செலவிட வேண்டியிருந்தால் அதனைத் தாக்குப்பிடிக்கும் விதமாக 10 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் அந்த விண்கலத்தில் இருந்தன. ஆனால், அதற்கான தேவை இன்றி 108 நிமிடங்கள் கழித்து விண்கலம் பூமிக்குத் திரும்பிவிட்டது. ஆனால், விண்கலம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான எந்த வசதியும் அந்த வாஸ்டாக் விண்கலத்தில் இல்லை. ககரின், விண்கலம் பூமியை அடையும் முன்பே விண்கலத்தில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்றுதான் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியை அடைவதற்கு 7 கிமீ-களுக்கு முன்பே ககரின் விண்கலத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

Yuri Gagarin
Yuri Gagarin

அந்தப் பயணத்தை முறையான விண்வெளிப்பயணமாக அறிவிக்க வேண்டும் என்றால் விண்கலம் முறையாகப் பூமியில் தரையிறங்கியிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. எனவே, ககரின் வானிலேயே விண்கலத்தில் இருந்து வெளியேறியதை ரஷ்யா வெளியே உலகிற்கு அறிவிக்கவில்லை. 1971-ல் தான் ககரின் பயணித்த விண்கலம் பூமியை அடைவதற்கு முன்பே ககரின் வெளியேறிவிட்டார் எனத் தெரியவந்தது. எனினும் அவர்தான் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

1969-ல் நிலவில் கால் பதித்தது அமெரிக்கா. அங்கே யுரி ககரினின் பெயர் பொறித்த நினைவுப் பதக்கத்தையும் அவரை கௌரவிக்கும் விதமாக நிலவில் விட்டு வந்தது அமெரிக்கா. அது மட்டுமல்லாமல், விண்வெளிப் பயணங்களில் உயிரிழந்தவர்கள் பெயர் பொறித்த பதக்கங்களையும் நிலவில் விட்டுவந்தது அமெரிக்கா. ரஷ்ய குழந்தைகளின் மனதில் யூரி, ஒரு ஹீரோவாகவும் முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார். அவர் விண்வெளிக்கு சென்ற 60-ம் ஆண்டு விழா இன்று விண்வெளி ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.

முதல் என்பது எப்போதும் ஸ்பெஷல்தானே!

அடுத்த கட்டுரைக்கு