Published:Updated:

🔭 `விடியல்' ரகசியம் சொல்லுமா ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்?

James Webb Space Telescope
News
James Webb Space Telescope ( Image: NASA )

சுமார் 1360 கோடி ஆண்டுகளுக்கு முன் நம்மை உருவாக்க வந்த அந்த ஒளியை, இன்று நாம் தேடிப்போகிறோம். பிரமிப்பாக இருக்கிறதல்லவா? அதனால்தான், இதை மனிதனின் கடந்த காலத்துக்கான ஒரு பயணம் என்றும் வர்ணிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Exclusive Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

கடந்த சனிக்கிழமையன்று தென் அமெரிக்காவின் ஃபிரெஞ்ச் கியானாவிலிருந்து ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (James Webb Space Telescope) அடுத்தடுத்த நாள்களை, ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் அடுத்த 2 வாரங்களுக்கு எந்தப் பிரச்னையும் செய்யாமல், சமர்த்தாக சுற்றுவட்டப்பாதையில் நின்று, தன் பணியைத் தொடங்கிவிட்டால் போதும்; நாம் இதுவரைக்கும் இந்தப் பிரபஞ்சம் பற்றி அறியாத பல ரகசியங்கள் வெளிவருவது உறுதி. அப்படி என்ன சொல்லப்போகிறது இந்தத் தொலைநோக்கி?

எதற்காக இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி? 🔭

வெப் தொலைநோக்கி பற்றித் தெரிந்துகொள்ளும் முன், ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால், இதன் அருமையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

 • 1990-ம் ஆண்டு நாசாவால் அனுப்பப்பட்ட தொலைநோக்கிதான் ஹப்பிள். இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பல தகவல்கள் ஹப்பிள் நமக்கு கண்டுபிடித்து சொன்னதுதான். இந்தத் தொலைநோக்கி தந்த தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து மட்டும் இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்வெளி புகைப்படங்கள் கிடைத்துள்ளன. இன்று நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விண்வெளி புகைப்படங்களின் உபயம், ஹப்பிளாகவே இருக்கும்.

 • அவ்வளவு ஏன்… இந்த பிரபஞ்சத்தின் வயது 1380 கோடி ஆண்டுகள் எனக் கண்டுபிடிக்க உதவியதுகூட ஹப்பிள்தான். 30 ஆண்டுகள் ஆனாலும், இது இன்னமும் ஓய்வுபெறவில்லை. புவியின் சுற்றுவட்டப்பாதையில் நின்று டியூட்டியில்தான் இருக்கிறது. அப்புறம் எதற்கு இந்த வெப் தொலைநோக்கி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Hubble and James Webb Space Telescope
Hubble and James Webb Space Telescope
NASA via AP

காரணம், ஓர் ஆதி ரகசியம்!

ஹப்பிள் எவ்வளவுதான் நமக்காக உழைத்தாலும் அதனால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நமக்கு உதவ முடியாது. அதனால், ``பாஸ்.. இதை வச்சிகிட்டு கீழ்த்திருப்பதி வரைக்கும்தான போகமுடியும்?” என நாசா விஞ்ஞானிகள் 1996-லிருந்தே திட்டமிட்ட அடுத்த புராஜெக்ட்தான் இந்த வெப் தொலைநோக்கி. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், கனடிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசா ஆகிய மூன்றும் சேர்ந்துதான் இந்த புராஜெக்ட்டுக்கு உயிர்கொடுத்துள்ளன.

 • ஹப்பிள், நம் பிரபஞ்சத்தின் வயதை 1380 கோடி ஆண்டுகள் எனக் கண்டுபிடித்தது எனப் பார்த்தோம் அல்லவா? இப்போது அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

 • நாம் இருப்பது பூமி (கோள்), பூமி இருப்பது சூரியக்குடும்பத்தில். சூரியக்குடும்பம் இருப்பது பால்வெளி மண்டலத்தில் (அண்டம்); பால்வெளி மண்டலம் இருப்பது பேரண்டத்தில் (Universe).

 • இந்தப் பேரண்டம் / பிரபஞ்சம் எல்லாம் உருவானது Big Bang Therory (பெருவெடிப்பு கோட்பாடு) காரணமாக என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அந்த பெருவெடிப்பு நிகழ்ந்துதான் 1380 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

 • அந்தப் பெருவெடிப்பு நடந்து சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களோ, வேறு அண்டங்களோ தோன்றவில்லை. ஆற்றல் மூலமாக விளங்கிய அந்தப் பெருவெடிப்பு நடந்த இடத்திலிருந்து எந்த ஒளியும் வெளிவரவில்லை. இதை, `Dark Age’ என்கின்றனர் விஞ்ஞானிகள் (விண்வெளி மொத்தமும் இருட்டில் இருந்திருக்கிறது!). அதற்குப் பிறகு பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையவே, திடீரேன பிரபஞ்ச மூலத்திலிருந்து ஒளி வீசத்தொடங்கியது; அதன் ஆற்றலில், நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள் அனைத்தும் அடுத்த கோடிக்கணக்கான ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 • நட்சத்திரங்கள் இணைந்து அண்டக்கூட்டங்கள் உருவாகின; அண்டக்கூட்டத்தில் கோள்கள் உருவாகின. அதில் ஒன்றான இந்தப் பூமியில் உயிர்களும் உருவாகின. இப்படி அனைத்துக்கும் காரணமான அந்த ஒளி பிறந்த நிகழ்வைத்தான், Cosmic Dawn (காஸ்மிக் விடியல்) என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஏன் நடந்தது என்பதற்கு அவர்களிடம் விடையில்லை.

 • ஹப்பிள் விட்டதும், வெப் தொடப்போவதும் இங்குதான். அதாவது, ஹப்பிள் தொலைநோக்கியால் 1340 கோடி ஒளி ஆண்டுகள் வரைதான் பார்க்க முடியும். ஆனால், வெப்-பால் 1360 கோடி ஒளி ஆண்டுகள் வரையிலும் பார்க்க முடியும்.

The timeline of the universe
The timeline of the universe
Image Courtesy: NASA

இதிலென்ன அவ்வளவு பெரிய வித்தியாசம்?

விஷயம் இருக்கிறது!

 • அண்டங்கள், கோள்கள் எல்லாம் எப்படி வரிசையாகப் பிறந்தது எனப் பார்த்தோம் அல்லவா? அதில், தற்போதைய நிகழ்கால அண்டங்கள் பற்றி நம்மிடம் ஓரளவு தகவல்கள் இருக்கின்றன; உபயம்: ஹப்பிள்.

ஆனால், அதற்கு முன்பு இருந்த ஆதிகால அண்டங்கள், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் உருவான நட்சத்திரங்கள், அப்புறம் அந்த Dark Age பற்றியெல்லாம் நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஒரு சுவாரஸ்யமான நாவலை, முதல் அத்தியாயத்தை விட்டுவிட்டு படித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் நிலைமையும்.

 • அந்த அத்தியாயத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நமக்காக எழுதுவதுதான் வெப் தொலைநோக்கியின் வேலை.

 • இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையையும், அந்த காஸ்மிக் விடியலின்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்வதுதான் வெப்பின் முதல் டாஸ்க். அதனால்தான் ஹப்பிளை விட 100 மடங்கு திறன்மிகுந்ததாக இதை வடிவமைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எப்படி இது மட்டும் இவ்வளவு திறன்மிகுந்ததாக இருக்கிறது?

காரணம், வெப் தொலைநோக்கியின் தொழில்நுட்பம்தான்.

 • தொலைநோக்கிகளின் முக்கிய அம்சம், இதிலிருக்கும் கண்ணாடிகள்தான். பொதுவாக, நாம் ஒரு பொருளைக் கண்டால் என்ன நடக்கிறது? அதன் ஒளி நம் கண்ணில் புகுந்து, ரெட்டினாவில் விழுகிறது; இதேதான் இந்தத் தொலைநோக்கி கண்ணாடிகளின் வேலையும். அண்டத்தில் விழும் ஒளியை சேமித்து வைத்துக்கொள்ளும்; ஒரு கேமரா போல.

 • ஹப்பிளின் கண்ணாடிகளால் நாம் கண்ணால் காணும் அளவிலான ஒளியை மட்டுமே சேமிக்க முடியும். ஆனால், வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகள், அகச்சிவப்பு கதிர்களைக்கூட சேமிக்க முடியும். (நைட் விஷன் கண்ணாடிகள் போல).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது திரும்பவும் அந்த ஆதி ரகசியத்துக்கு வருவோம்.

 • சூரிய ஒளியானது நம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடம் ஆகும் எனப் படித்திருப்போம் அல்லவா? அதாவது, நாம் இப்போது சூரியனைப் பார்த்தால் அது 8 நிமிடத்துக்கு முந்தைய சூரியனின் வெர்ஷன். அதேபோலத்தான் பிரபஞ்ச வெளியிலும்.

 • அப்படி, 1360 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தைத்தான் வெப் தொலைநோக்கி பார்க்கப்போகிறது. (அதாவது, நம் குழந்தைப் பருவத்துக்கே சென்று நம்மைப் பார்ப்பது போல.) எப்படி கடந்த காலத்தில் நிகழ்ந்ததைப் பார்க்க முடியும் என்கிறீர்களா?

 • அந்த பிரபஞ்ச மூலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உமிழப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கும். சூரியன், சந்திரன் அளவுக்கெல்லாம் ஒளி நமக்கு வராது. மாறாக, அகச்சிவப்பு கதிர்களாக விண்வெளியில் சிதறிக்கொண்டு நம்மை நோக்கி வரும். அவற்றை அள்ளிப்போட்டு, பூமிக்கு அனுப்புவதுதான் வெப்-பின் சாமர்த்தியம்.

இதனால் என்ன நன்மை?

 • வெப் தொலைநோக்கியின் இன்னொரு டாஸ்க், Exoplanets எனப்படும் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்கள் இருக்கிறதா என ஆராய்வது. இதற்காக வெவ்வேறு கோள்களின் வளிமண்டலத்தை ஸ்கேன் செய்யப்போகின்றனர் விஞ்ஞானிகள்.

 • மேலே பார்த்த இரண்டு டாஸ்க்குகளுமே வெப் தொலைநோக்கியிடம் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் விடைகள். ஆனால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இவற்றைத் தாண்டியும் வெப் நமக்கு பல புதிர்களை அவிழ்க்கலாம். அவை இந்தப் பிரபஞ்சம் பற்றிய புரிதலில் நம்மை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லலாம் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.

 • மேலும், இந்த வெப் தொலைநோக்கியின் பயணம் என்பது, நம்முடைய கதையை, நாமே முழுமையாகத் தெரிந்துகொள்வது போல. யோசித்துப் பாருங்கள்…

1360 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வினால் அண்டங்கள், கோள்கள் எல்லாம் தோன்றுகின்றன. அதில் ஒன்றில், உயிரினங்கள் தோன்றுகின்றன. அதில் ஒரு இனம், பரிணாம வளர்ச்சியால் மேலெழுந்து, அறிவியல் வளர்ச்சி காண்கிறது. இன்று, அந்த இனம், அதன் ஆதியைத் தேடி ஒரு கருவியை பிரபஞ்ச வெளிக்கு அனுப்புகிறது.

சுமார் 1360 கோடி ஆண்டுகளுக்கு முன் நம்மை உருவாக்க வந்த அந்த ஒளியை, இன்று நாம் தேடிப்போகிறோம். பிரமிப்பாக இருக்கிறதல்லவா? அதனால்தான், இதை மனிதனின் கடந்த காலத்துக்கான ஒரு பயணம் என்றும் வர்ணிக்கின்றனர் விஞ்ஞானிகள்!

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Exclusive Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!