13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் நிலை என்ன, உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கும் போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை (JWST) வரும் 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது நாசா. இந்திய நேரப்படி 17:50 மணிக்கு (12:20 GMT) ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இது நாசா (NASA), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து உருவாக்கியிருக்கும் முதன்மையான கண்காணிப்பு டெலஸ்கோப்.
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2000-ம் ஆண்டுகளின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப்பெரிய டெலஸ்கோப்பாக இருக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல சிக்கல்களும், கால தாமதமும் ஏற்பட்டு இந்தத் திட்டம் பாதியில் தடைபட்டது.
பின்பு $500 மில்லியன் செலவில், 2007-ம் ஆண்டு மீண்டும் இந்த டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது. அப்போதும் இதற்கு தொழில்நுட்ப ரீதியாகவும் பிற காரணங்களாலும் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியாக இப்போது 2021-ல் இந்த டெலஸ்கோப்பை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பவிருக்கிறார்கள். ஏற்கெனவே இதற்கான செலவு $10 பில்லியனைத் தொட்டுவிட்டதாம். இது இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
பிரான்ஸின் கயானாவிலிருந்து ஐரோப்பிய 'ஏரியானா 5' ராக்கெட்டைக் கொண்டு இந்த டெலஸ்கோப் விண்ணில் ஏவப்படும். ராக்கெட்டிலிருந்து வெளியே வந்த 30 நிமிடங்களுக்குள் 344 முக்கிய தருணங்களை இது எதிர்கொள்ளும். வெப் டெலஸ்கோப்பை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும், இதற்கு 30 நாள்கள் வரை ஆகுமாம்!

1960-களில் நாசாவின் பல முக்கிய விண்வெளி செயல்பாடுகளுக்குக் காரணமான முக்கிய நபரான ஜேம்ஸ் இ.வெப்பின் நினைவாக இந்த புதிய டெலஸ்கோப்பிற்கு 'ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் vs ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்ன வித்தியாசம்?
விண்வெளி ஆராய்ச்சி குறித்து கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் இருப்பவர்கள் கூட நிச்சயம் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். 1990, ஏப்ரல் மாதம் பூமியின் கீழ் சுற்றுவட்டப்பாதையில் ஏவப்பட்டது இந்த டெலஸ்கோப். மூன்று தசாப்தங்களாக, இந்தப் புகழ்பெற்ற டெலஸ்கோப் அண்டத்தைப் பற்றிய நமது பார்வையை விரிவுபடுத்தி வருகிறது. அது சேகரித்த படங்களால் நம்மை பல முறை பிரமிக்க வைத்திருக்கிறது.
இப்போது ஏவப்படவிருக்கும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் இன்னும் மேம்பட்டது. வித்தியாசமான செயல்பாடு கொண்டது. இதிலிருக்கும் ராட்சத தங்கக் கண்ணாடி (கோல்டன் மிரர்) மற்றும் அகச்சிவப்பு ஒளி கண்காணிப்பு கருவிகள் மூலம், ஹப்பிள் பார்ப்பதை விட 10 முதல் 100 மடங்கு தெளிவாக 'பார்க்க' முடியுமாம்.

பூமியின் கீழ் சுற்றுவட்டப்பாதையில் நமக்கு மிக அருகில் இருக்கிறது ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப். ஆனால், ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் பூமியிலிருந்து 930,000 மைல்கள் (1.5 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில், சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி 2 (L2) என அறியப்படும் ஈர்ப்புவிசை நிலையாக இருக்கும் புள்ளியில் நிலைகொள்ளும்.
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை இன்னும் தெளிவாக ஆய்வு செய்யமுடியும் என நம்புகிறார்கள் விஞ்ஞானிகள். வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் இந்த டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்யவுள்ளனர்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் முக்கியமாக நான்கு அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது. Near Infrared Camera (NIRCam), Near Infrared Spectrograph (NIRSpec), Mid Infrared Instrument (MIRI) மற்றும் Fine Guidance Sensor /Near Infrared Imager and Slitless Spectograph (FGS/NIRISS) ஆகியவை அடங்கும்.
இந்தக் கருவிகளைக் கொண்டு ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்னும் நமக்கு தெரியாத விண்வெளி அதிசயங்கள் பற்றியும், பிரபஞ்சத்தின் தன்மை பற்றியும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விட மிகத் தெளிவாக, அதாவது ஒவ்வொரு பிக்சலையும் எடுத்து ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வரும் டிசம்பர் 24-ம் தேதி இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ்கோப் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வானிலை உகந்ததாக இல்லாத பட்சத்தில் ஓரிரு நாள்கள் தாமதமாக 25, 26-ம் தேதியில் இது விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாரா மக்களே?!