Published:Updated:

Light Pollution: வானில் நட்சத்திரங்கள் ஏன் தெரிவதில்லை? தீபாவளிக்கு முன் ஒளி மாசு குறித்து அறிவோமா?!

ஒளி மாசு | நட்சத்திரங்கள்

வானியல், மனித ஆரோக்கியம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒளி மாசானது எதிர்காலத்தில் என்ன நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும்? இதன் ஆபத்துகள் என்னென்ன?

Light Pollution: வானில் நட்சத்திரங்கள் ஏன் தெரிவதில்லை? தீபாவளிக்கு முன் ஒளி மாசு குறித்து அறிவோமா?!

வானியல், மனித ஆரோக்கியம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒளி மாசானது எதிர்காலத்தில் என்ன நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும்? இதன் ஆபத்துகள் என்னென்ன?

Published:Updated:
ஒளி மாசு | நட்சத்திரங்கள்
எட்டா தொலைவில் இருக்கும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களை எண்ணி மகிழ்ந்த காலங்கள் இன்று கடந்த கால நினைவுகளாக மாறிவிட்டன. மொட்டை மாடியில் விட்டத்தைப் பார்த்து ஒவ்வொரு நட்சத்திரமாக எண்ணி எண்ணி இறுதியில் எண்ணிக்கை முடிவுறாமல் எண்ணிய களைப்பில் கண்கள் மூடி உறங்கிப்போன அனுபவங்கள் 80 மற்றும் 90-களின் குழந்தைகளுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால், இன்று?

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை அவசியமான ஒன்றே. இதனால் நம் வாழ்வியல் முறையில் பல மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் ஆரோக்கியமானவையும் உண்டு, நாம் விரும்பும் சிலவற்றை மாற்றியமைத்து நம்மை ஏங்கச்செய்பவையும் உண்டு. வளர்ச்சி என்ற ஒன்றைக் கருத்தில் கொண்டால் இது தவிர்க்க முடியாத மாற்றமே!

இரவில் ஒளிரும் விளக்குகள்
இரவில் ஒளிரும் விளக்குகள்
இன்று இரவே உங்கள் அருகில் வெட்டவெளிக்குச் சென்றால் அத்தகையதொரு மாற்றத்தை உணரலாம். ஆம், வானில் நம்மிடையே இருந்த நட்சத்திரங்கள் இன்று நம்முடன் இல்லை. அறிவியல்படி சொன்னால் அவை மறையவில்லை, மாறாக அவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இதற்குக் காரணம் என்ன?

1879-ம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் வெளிச்ச பல்புகளைக் கண்டுபிடித்த போது இருந்த மகிழ்வுணர்வு அதே வெளிச்ச பல்புகளால் இன்று நமக்குக் கிடைக்கிறதா என்றால், அது இல்லை என்ற நிலையே இப்பொழுது உருவாகியிருக்கிறது. வெளிச்சம் மனிதர்களின் வாழ்வில் படரத்தொடங்கிய நாள், பல நன்மைகளை நமக்கு ஏற்படுத்தித் தந்தாலும் அதீத படர்வு இன்று நமக்கே ஆபத்தாய் மாறியிருக்கிறது. இதைத்தான் 'ஒளி மாசு' (Light Pollution) என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். பள்ளிப் பருவத்தில் காற்று மாசு, நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு என அனைத்தும் நம் பாடப்பகுதியில் இடம்பெற, 'ஒளி' மாசிற்கான பகுதி மிகவும் அரிதாகவே தென்படும். வானியல் (Astronomy) பாடங்களில் மட்டுமே பெரும்பாலும் இதைப் பற்றிப் பேசப்படுவதாய் இருந்தது.

இந்த ஒளி மாசானது 3 பெரும் விளைவுகளை நம்மிடையே ஏற்படுத்துகிறது.

ஒன்று - நம்மிடையே இருந்த நட்சத்திரங்களை நாம் பார்க்கமுடியாது போனது. நட்சத்திரங்களைப் பார்ப்பது என்பது ஒரு காலத்தில் ஆதி மனிதனின் வாழ்வியலுக்கு உதவியாய் இருந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு ஆதி மனிதர்கள் முதலில் செய்த செயல் வானைப் பார்ப்பதுதான். நட்சத்திரங்களின் இருப்பைக் கணித்து அதனை வடிவங்களாக உணர்ந்து காலங்களை அறியவும் பயன்படுத்தினர். இடப்பெயர்வு நடத்தும் விலங்குகளை வேட்டையாட, நட்சத்திரங்களின் இருப்பை வைத்தே சரியான தருணத்தை அறிந்தனர்.

இரவு வானில் நட்சத்திரங்கள்
இரவு வானில் நட்சத்திரங்கள்

இரவு வானத்தைப் பார்ப்பது என்பது ஆதி மனிதர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்ந்தது. அதுவே நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் வாழ்வாதாரத்திற்காக அன்றி பிற்காலங்களில் பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்டது. மன நிம்மதியை ஏற்படுத்தும் ஒரு அழகிய பொழுதுபோக்காகக் கடந்த காலங்களிலிருந்த நட்சத்திரம் பார்ப்பது என்பது இந்த காலத்தில் வழக்கொழிந்து போன ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. மில்கி வே கேலக்ஸி என்று சொல்லப்படும் நாம் வாழும் கேலக்ஸியிலிருந்து நம்மால் சுமார் 1500லிருந்து 2000 நட்சத்திரங்கள் வரை காண முடியும் என்பது ஆய்வுகள் கூறும் உண்மை. ஆனால் இன்று மிகவும் இருட்டான பகுதியில் கூட நம்மால் 100 நட்சத்திரங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இதெல்லாமே ஒளி மாசின் விளைவுகள்தான்.

இரண்டு - மனிதர்களின் ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பது. ஒளி என்பது ஒரு நாளின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கு பெரும் அளவு உதவினாலும், இருட்டில் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் வேளையான இரவுப் பொழுதுகளிலும் வெளிச்சத்திலிருந்தால் அது நம் உடலின் சிர்கேடியன் ரிதம் (Circadian rhythm) எனப்படும் உயிரியல் கடிகாரத்தில் மாற்றங்களை விளைவித்து தேவையில்லாத மனச்சோர்வு, வெறுப்புணர்வு, தூக்கமின்மை, தலைவலி முதலிய கேடுகளை விளைவிக்கிறது. இது மட்டுமின்றி சமீபத்திய ஆய்வுகளில் இந்த அதீத ஒளி மாசு மனிதர்களில் கேன்சர் செற்களை வளரச் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இரவு வானில் நட்சத்திரங்கள்
இரவு வானில் நட்சத்திரங்கள்

மூன்று - தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடத்தைகளில் மாற்றங்களை விளைவிப்பது. சில மரங்கள் மற்றும் செடிகள் காலநிலைக்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும். ஆனால் அதீத ஒளியானது இரவு பகல் வித்தியாசத்தை உணரச் செய்யவிடாமல் தடுத்து அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலங்குகளை எடுத்துக் கொண்டால் பூச்சிகள், பறவைகள், ஊருண்ணிகள், இரவாடிகள் என அனைத்து வகை விலங்குகளிலும் ஒரு வித நடத்தை மாற்றத்தை நிகழ்த்துகிறது இந்த ஒளி மாசு. உதாரணத்திற்குக் கடல் ஆமைகள் கடலோரங்களில் குஞ்சு பொரிக்கும் பழக்கம் உள்ளவை, ஆனால் அதீத வெளிச்சம் அவற்றைக் கடற்கரையிலிருந்து திசை மாற்றி வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிடும். அப்புதிய இடமானது அவற்றின் இயற்கை வாழ்விடமாக இல்லாத பட்சத்தில் அவை மிக விரைவில் இறந்து போகக்கூடும்.

இவ்வாறு வானியல், மனித ஆரோக்கியம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒளி மாசானது எதிர்காலத்தில் என்ன நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் என்பதைப் பற்றி வானியல் ஆர்வலர் மற்றும் வானியல் புகைப்படக்காரரான பிரபாகரன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"நட்சத்திரங்களைப் பார்க்கும் ஆர்வம் இருந்ததால்தான் நான் வானியல் துறைக்குள்ளேயே வந்தேன். ஆனால் இன்று அவை தென்படாத போது என்னைப் போல இத்துறையில் ஆர்வம் பெற்று உள்வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்ற சிந்தனை மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது" என்று வருத்தப்பட்டவர்...

வானியல் ஆர்வலர் மற்றும் வானியல் புகைப்படக்காரரான பிரபாகரன்
வானியல் ஆர்வலர் மற்றும் வானியல் புகைப்படக்காரரான பிரபாகரன்

"வெளிச்சத்திற்காகப் பல வழிகளை உருவாக்கத் தொடங்கிய நாம் அதனை முழுமையாக நிராகரிக்க முடியாது, இருந்தாலும் தேவையில்லாத ஒளியினை முடிந்தளவு துண்டிக்க வேண்டும். லோ பிரஷர் சோடியம் விளக்குகள் (Low pressure Sodium light) எனப்படும் விளக்குகளை அதிக அளவு பயன்படுத்துதல் நல்லது. ஒளி மாசானது நாம் அன்றாட பயன்படுத்தும் தெருவிளக்குகளிலிருந்தும் வீட்டு விளக்குகளிலிருந்தும் மட்டும் வருவதில்லை, பெரிய பெரிய கட்டடங்களைப் பிரகாசமாகத் தெரியச் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஒளிரும் விளக்குகளும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. முடிந்த அளவு தேவையில்லாத இடங்களில் இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது‌" என்றார்.

அவரிடம் இந்த ஒளி மாசின் தீவிரத்தைக் கண்டறிவது எப்படி எனக் கேட்டபோது, "நீங்கள் வாழும் இடத்தில் உள்ள வான் எவ்வளவு மாசு அடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சர்வதேச டார்க் ஸ்கை அசோசியேசன் எனப்படும் நிறுவனமானது வானில் இருண்ட தன்மையைக் கண்டறிய பார்ட்டில் ஸ்கேல் (Bortle Scale) முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று முதல் 9 வரை இருக்கும் இந்த அளவுகோலால் நாம் இருக்கும் இடத்தின் வானின் மாசுத் தன்மையை அறிந்து கொள்ளலாம். 1-ம் எண் மாசற்ற வானைக் குறிப்பிட 9-ம் எண் அதீத மாசைக் குறிப்பிடும்படி அமைந்திருக்கிறது" என்றார்.

இது மட்டுமில்லாமல், "ஒளி மாசைத் தவிர்ப்பதற்காக உலகில் 20 டார்க் ஸ்கை பூங்கா எனப்படும் இருள் சூழ்ந்த பகுதிகள் நிறுவப்பட்டு இருக்கின்றன. இதில் ஒன்று இந்தியாவிலும் லடாக் பகுதியில் அமையப்போவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் நம்மிலிருந்தே தொடங்கட்டும்" என்று நம்பிக்கை ஊட்டினார்.

தீபாவளி கொண்டாட்டங்கள்
தீபாவளி கொண்டாட்டங்கள்

மிகவும் இருளான ஒரு பகுதியிலிருந்து மில்கி வே கேலக்ஸியின் வெளிச்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரால் ஒரு நாளிதழை முழுவதும் படித்துவிட முடியும். இப்படிப்பட்ட ஒளித்தன்மையை நம் கேலக்ஸி கொண்டிருக்க, வெளிப்புற விளக்குகளின் தேவையை நாம் அதிகரிப்பது ஏன்? விளம்பரங்கள், ஆடம்பர நிகழ்வுகள், இரவு வாழ்க்கை கொண்டாட்டங்கள் போன்றவை தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், ஒளி மாசு என்பது ஒரு தீவிரமான பிரச்னையே என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நாம் இழந்த நட்சத்திரங்களின் வசீகர புன்னகையை நாம் மீண்டும் பெற முடியும்.

இந்த `ஒளி மாசு' என்ற விஷயத்தை முக்கியமாக வரும் தீபாவளியன்றும் நினைவில் கொள்வோம். பட்டாசு வெடிக்க, அரசு நிர்ணயித்துள்ள நேரம் தவிர்த்து, பிற நேரங்களில் அவற்றை வெடிக்காமல் இருப்பது ஒளி, ஒலி மாசு இரண்டையுமே கட்டுப்படுத்தும்.