Published:Updated:

`சீனாவில் டிராகன்... ஏவப்படும் நெருப்பு அம்புகள்!’ - சூரிய கிரகணமும் உலக மக்களின் நம்பிக்கைகளும்

கிரகணம்
கிரகணம்

ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் சிலர், கிரகணத்தின்போது சூரியன் மெழுகுவத்தி அணைவதுபோல் அணைந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள். அதை மீண்டும் எரிய வைக்க, அம்புகளில் தீயை வைத்து சூரியனை நோக்கி ஏவுவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`வளைய சூரிய கிரகணம்’ என்னும் அரிதான நிகழ்வு உருவாகி இன்றைக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இந்த வளைய சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பான முறையில் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். அறிவியலின் இப்படியான அதிசயங்களை ஒரு தரப்பு மக்கள் ஆர்வமாகக் கண்டு ரசித்தாலும், பலரும் கிரகணம் என்றாலே ஏதோ அசம்பாவிதத்துக்கான அறிகுறி எனப் பதறிப் போகின்றனர். இத்தகைய கிரகணங்களின்போது வீட்டைவிட்டே வெளியே வரக்கூடாது என்று தவறான புரிதலில் இருக்கின்றனர்.

`சீனாவில் டிராகன்... ஏவப்படும் நெருப்பு அம்புகள்!’ - சூரிய கிரகணமும் உலக மக்களின் நம்பிக்கைகளும்

டிசம்பர் 26-ம் தேதி வளைய சூரிய கிரகணம் ஏற்படப்போகிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்ததிலிருந்து பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வளைதளங்களில் பரவ ஆரம்பித்தன. டிசம்பர் மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் பகல் இருளாகிவிடும்; சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் உருவாகும்; பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படும் எனப் பலரும் விஞ்ஞானிகளைப்போல வதந்திகளைப் பரப்பினர்.

இன்று நேற்றல்ல காலம் காலமாகக் கிரகணம் பற்றி பயத்துடன் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாது, சமைத்த சாப்பாடு விஷமாகிவிடும் என்பது போன்ற நம்பிக்கைகள் நம் மக்களிடம் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அறிவியல் ஆய்வாளர்களோ இப்படியான செய்திகளை மறுக்கின்றனர்.

`இன்று தவறவிட்டால் 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’- அரிய நிகழ்வு குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்

கிரகணம் குறித்து பரப்படும் வதந்திகள், மக்களுக்கு ஏற்படும் அச்சம் போன்றவை குறித்து விளக்கமறிய விக்யான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.

``ராகுவும் கேதுவும்தான் கிரகணங்கள் உண்டாகக் காரணம் என நாம் நினைக்கிறோம். டிராகன் எனும் பாம்பு சூரியனை விழுங்குவதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது என்று சீனர்கள் மத்தியில் ஒரு கதை இருக்கிறது. அதனால்தான் அவர்கள் மணிகளை அடித்து உரக்க ஒலி எழுப்பிப் பாம்புகளை விரட்டுகிறார்கள். இதேபோல எஸ்கிமோ மக்கள், சாதாரண மனிதர்களைப் போன்றே சூரியனும் சந்திரனும் நோய்வாய்ப்படுவதால்தான் கிரகணம் நிகழ்கிறது என்று நம்புகிறார்கள். அப்போது அவற்றிலிருந்து பிறக்கும் கதிர்கள் நோய்களை ஏற்படுத்தும் எனக் கருதுகிறார்கள். அதனால் கிரகணம் நிகழ்கிறபோது, நோய் பரப்பும் கதிர்கள் நமது பாத்திரங்களில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பாத்திரங்களை எல்லாம் கவிழ்த்து வைத்துவிடுவார்கள். இன்றும் கூட அந்த மக்கள் இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்

ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் சிலர், கிரகணத்தின்போது சூரியன் மெழுகுவத்தி அணைவதுபோல் அணைந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள். அதை மீண்டும் எரிய வைக்க, அம்புகளில் தீயை வைத்து சூரியனை நோக்கி ஏவுவார்கள். இப்படித் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க கிரகணங்கள் குறித்து மக்கள் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். கிரகணங்கள் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

வானில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான் அது. நிழல்கள் உண்டாக்கும் மேஜிக்தான் இந்தக் கிரகணங்கள். இவற்றால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்த வளைய சூரிய கிரகணத்தையொட்டி பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் சென்று விளக்கமாகப் பேசியிருக்கின்றனர். மக்களுக்கு அறிவியல் குறித்தான தெளிவான பார்வையை ஏற்படுத்திவிட்டால், இப்படியான கட்டுக்கதைகளுக்கும் பயத்துக்கும் வேலையிருக்காது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு