Published:Updated:

நாமக்கல் மண்ணும் சேலம் ஸ்டீலும் சேர்ந்து செஞ்ச சந்திரயான்-2!

Chandrayaan 2 Launch
Chandrayaan 2 Launch

இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்றான சந்திரயான்- 2 மிஷன், 90 சதவிகிதம் வெற்றியடைந்த நிலையில், நூலிழையில் சாதனை வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 23-ம் தேதி, ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 திட்டத்திற்கு இஸ்ரோ ஒதுக்கியது சுமார் 1,000 கோடி ரூபாய்தான். இது, அமெரிக்காவின் நாசா ஒதுக்கும் பட்ஜெட்டைவிட 20 மடங்கு குறைவு.

`சவாலான இறுதி நொடிகளுக்குத் தயாராகும் சந்திரயான் 2' - இன்று இரவு நிலவில் தரையிறங்குகிறது!
நாமக்கல்லில் இருந்து அனார்த்தோசைட் பாறைகளை (Anorthosite rock) வெட்டி, அவற்றை பவுடர் போல, 25 மைக்ரான் அளவுக்கு அரைத்து, இஸ்ரோ-வுக்கு வழங்கினோம்.
அறிவியலாளர்கள்

நாமக்கல் மண்

சந்திரயான் -2 மிஷன் வடிவமைப்பில், தமிழகத்தின் பங்களிப்பு அதிகம். நிலவின் மேற்பரப்பைப் போலவே மண்ணைக்கொண்ட செயற்கையான தரைதளத்தை பூமியில் ஏற்படுத்தி, அதில் லேண்டரை இறக்கி, பின்னர் அந்த மண் பரப்பில் ரோவரை இயக்கி ஆராய்ச்சி செய்வதற்கு இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக, நிலவின் மண்ணில் உள்ள தாது உப்புகள், ஆக்சைடுகள் போன்றவற்றின் ரசாயன குணம்கொண்ட மண், டன் கணக்கில் இஸ்ரோவுக்கு தேவைப்பட்டது. அமெரிக்காவில் நிலவின் மண் மாதிரியை வாங்கியபோது, அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.

சந்திரயான-2: இறுதி நிமிடங்களில் லேண்டருடனான தொடர்பு அறுந்தது!#LiveUpdates

அதனால், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியல் மைய இயக்குநர், பேராசிரியர் எஸ்.அன்பழகன் தலைமையில், பேராசிரியர்கள் அறிவழகன், பரமசிவம், சின்னமுத்து ஆகியோரைக்கொண்ட குழுவினர், இஸ்ரோ ஆராய்ச்சி மைய பேராசிரியர் வேணுகோபால் தலைமையிலான குழுவினருடன் இணைந்து, சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரியை சந்திரயான்-2 ஆராய்ச்சிக்காக தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியல் மைய இயக்குநர், பேராசிரியர் எஸ்.அன்பழகன், "இஸ்ரோ-வுக்கு சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரி தேவைப்பட்டது. இதை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு சுமார் ரூ.25 கோடி வரை தேவைப்படும் என்ற நிலை இருந்தது.

நாமக்கல் அருகே மண் மாதிரியை ஆராய்ந்தபோது
நாமக்கல் அருகே மண் மாதிரியை ஆராய்ந்தபோது

சேலம் பெரியார் பல்கலைக்கழகம், நிலவின் மண் மாதிரி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து, இஸ்ரோ எங்களை அணுகியது. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் தானே, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த சித்தம்பூண்டி, கந்தம்பாளையம் ஆகிய இடங்களில் நிலவில் இருப்பது போன்ற அனார்த்தோசைட் வகை பாறைகள் இருக்கின்றன. எனவே, நாமக்கல்லில் இருந்து அனார்த்தோசைட் பாறைகளை வெட்டி, அவற்றை பவுடர் போல 25 மைக்ரான் அளவு பொடியாக அரைத்து, இஸ்ரோ-வுக்கு வழங்கினோம். 6 மாத காலத்துக்குள் இதை எங்கள் குழு வழங்கியதற்கு, இஸ்ரோவிடம் பாராட்டு கிடைத்தது. நாமக்கல்லில் எடுக்கப்பட்ட மண் பரப்பின் மீது, சந்திரயான் விண்கலத்தில் லேண்டர் ரோவர், பூமியிலேயே மாதிரி ஆராய்ச்சியில் ஈடுபட்டது, தமிழகத்துக்கு பெருமையளிக்கக்கூடியது" என்றார்.

அதுமட்டுமில்லாமல், சந்திரயான்-2 விண்கலத்தின் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்புக்கு கடுங்குளிரையும் தாங்கக்கூடிய, நிலைப்படுத்தப்பட்ட (ஆஸ்டெனிக் வகை) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தேவைப்பட்டன. இந்தத் தகடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து, சேலம் உருக் காலை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரித்துக் கொடுத்தது.

மயில்சாமி, சிவன், வனிதா... சந்திரயான் உருவாக்கத்தில் விண்ணைத் தொட்ட தமிழர்கள்!

இதுவரை 38 முறை சந்திரனுக்கு உலக நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அவற்றில் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. வெற்றிபெற்ற சில முயற்சிகளும்கூட நிலவின் வடதுருவத்தைத்தான் இலக்கு வைத்தன. முதன்முறையாக நிலவின் தென் துருவத்தை கிட்டதட்ட தொட்டதே இந்தியாவின் மிகப்பெரிய சாதனைதான். இந்தச் சாதனைக்காக தேசம் பெருமைப்படலாம்!

அடுத்த கட்டுரைக்கு