Published:Updated:

`9 ஆண்டுகளுக்கு பிறகு..!’ - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள்

ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் ( John Raoux )

அமெரிக்க வீரர்களை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு அனுப்புவதுதான் எங்களது தலையாய குறிக்கோளாகும்

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் இரண்டு அமெரிக்கர்களுடன் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சனிக்கிழமையன்று விண்வெளிக்குப் புறப்பட்டது. இதன் மூலம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு சென்றுள்ளனர். இந்த ராக்கெட்டில் நாசாவை சேர்ந்த டாக் ஹூர்லே மற்றும் பாப் பெஹ்ன்கன் 19 மணி நேர பயணமாக க்ரூ ட்ராகன் காப்ச்யூலில் விண்வெளிக்குப் பயணமாகியுள்ளனர். கடந்த 2011-ல் கடைசியாகச் செலுத்தப்பட்ட விண்கலத்தின் அதே லான்சிங்க் பாடில்தான் இந்த ராக்கெட்டும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ்
John Raoux

இந்த ஃபால்கான் 9 ராக்கெட் கடந்த புதன்கிழமை அன்றே விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாகக் கவுண்டவுனுக்கு 17 நிமிடங்களே இருந்த நிலையில் கைவிடப்பட்டது. பிறகு, சனிக்கிழமை அன்று சிறிது மோசமான வானிலை நிலவினாலும் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான் முதன்முதலாக அமெரிக்க வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அந்நிறுவனம் முதல் முறையாக வீரர்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த இரண்டு வீரர்களும் நான்கு மாத காலத்துக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க உள்ளனர். தற்போது விண்வெளி வீரர்களுடன் சென்றுள்ள இந்தச் சோதனை ஓட்டம்தான் ஸ்பேஸ் எஃக்ஸ நிறுவனத்துக்கு இறுதியான சோதனை ஆகும். இதன் பிறகு நாசாவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டால் இவர்களே விண்வெளி நிலையத்துக்கு நேரடியாகச் செல்லலாம். இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் குறைந்த விலையில் திரும்ப பயன்படுத்தப்படும் ராக்கெட்டை ஸ்பேஸ் எஃக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ்

இந்த நிகழ்வைக் கண்டு களித்த அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "இதன் சக்தியும் தொழில்நுட்பமும் நம்பமுடியாத ஒன்றுதான். இதனால் செவ்வாய்க் கிரகத்துக்கும் கூடிய விரைவில் பறக்க முடியும்போல" என்றார். மேலும், இதுபற்றி நாசாவின் முதன்மை நிர்வாகி ஜிம் பாரைடென்ஸ்டைன் கூறுகையில், ``அமெரிக்க வீரர்களை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு அனுப்புவதுதான் எங்களது முதன்மையான குறிக்கோளாகும்" என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ்
Alex Brandon

ஸ்பேஸ் எஃக்ஸின் போட்டி நிறுவனமான போயிங்க் கோ அடுத்த ஆண்டு தனது சிஎஸ்டி 100 ஸ்டார்லைனர் மூலம் வீரர்களை விண்ணில் செலுத்தவுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங்க் கோ ஆகிய இரண்டு நிறுவனத்துக்கும் சேர்த்து தலா $8 பில்லியன் தொகையை ராக்கெட் தயாரிப்பதற்காக நாசா நிறுவனம் வழங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு