Published:Updated:

வரலாற்றில் இது முதல்முறை..!- ஆணின் உதவியில்லாமல் விண்ணில் சாதித்த சிங்கப் பெண்கள் #NASA

நாசா தலைவர்கள் மற்றும் உலக மக்கள் பலரின் ஆதரவோடும் இவர்கள் விண்ணில் அடியெடுத்துவைக்கும் தருணத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்தது நாசா

ஸ்பேஸ் வாக் வாக் பெண்கள்
ஸ்பேஸ் வாக் வாக் பெண்கள் ( NASA )

இன்று விண்வெளி தொழில்நுட்பங்கள் பெருமளவில் மேம்பட்டுவிட்டன. செவ்வாய்க்கு கலன் அனுப்புகிறோம், தூரக் கிரகங்களைக் கண்காணிக்கிறோம். ஆனால் இன்று வரை ஒன்று மட்டும் நடக்காமலேயே இருந்தது. வெறும் பெண்களை உள்ளடக்கிய குழு விண்ணில் மிதந்ததில்லை (Space Walk) என்பதுதான் அது. விண்ணில் கலன்களைப் பழுதுபார்ப்பது, பேட்டரிகள் மாற்றுவது போன்றவற்றைச் செய்ய விண்கலத்தைவிட்டு வெளியே வரவேண்டியது இருக்கும். இப்படி வெளியே வருவதைத்தான் 'ஸ்பேஸ் வாக்' என்று அழைப்பர். ஆம் 1965-ல் முதல் மனிதராக அலெக்ஸி லியோனோவ் விண்ணில் மிதந்ததிலிருந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு ஆண் துணை இல்லாமல் விண்ணில் பெண் எவரும் இந்த Space Walk-ஐ செய்ததில்லை. இந்த வரலாறு இன்று மாறியிருக்கிறது.

கிறிஸ்டினா கோச், ஜெஸ்ஸிகா மேயர்
கிறிஸ்டினா கோச், ஜெஸ்ஸிகா மேயர்
NASA

கிறிஸ்டினா கோச், ஜெஸ்ஸிகா மேயர் ஆகிய இரு விண்வெளி வீராங்கனைகள் கொண்ட குழு இன்று இதை உடைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஸ்பேஸ் வாக்' சற்றுமுன் தொடங்கியது. இரு வீராங்கனைகளும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அகண்ட விண்வெளியில் அடியெடுத்து வைத்தனர். பல வருடங்களாக நாசா இதைச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டுவந்தாலும் இன்றுதான் அந்த நாள் கைகூடி வந்திருக்கிறது. இதுவும் ஒரு சிறிய கோளாறின் காரணமாக பேட்டரி சார்ஜர் ஒன்றை மாற்றவேண்டும் என்பதால்தான் இது இன்று நடந்திருக்கிறது, இல்லையென்றால் ஒரு வாரம் இதற்காகக் காத்திருக்கவேண்டியதாக இருந்திருக்கும்.

விண்ணில் நடந்த முதல் வீரர் அலெக்ஸி லியோனோவ் மறைந்தார்!

இதில் ஜெஸ்ஸிகா மேயருக்கு இது முதல் 'ஸ்பேஸ் வாக்'. இதன்மூலம் விண்ணில் மிதந்த 228-வது மனிதரானர் இவர், இதைச் செய்த 15-வது பெண் இவர். கிறிஸ்டினா கோச்சுக்கு இது 4-வது ஸ்பேஸ் வாக். இவர் தற்போது 11-மாத மிஷன் ஒன்றில் இருக்கிறார். இதற்கு முன்பு எந்தப் பெண்ணும் இவ்வளவு காலம் ஒரு மிஷனில் இருந்ததில்லை.

Tune in to watch the first #AllWomanSpacewalk! Starting at approximately 7:50 a.m. EDT on Friday, Oct. 18, NASA...

Posted by NASA - National Aeronautics and Space Administration on Friday, October 18, 2019

நாசா தலைவர்கள் மற்றும் உலக மக்கள் பலரின் ஆதரவோடும் இவர்கள் விண்ணில் மிதக்கும் இந்த நிகழ்வை முழுவதுமாக லைவ் ஸ்ட்ரீம் செய்துவருகிறது நாசா. விண்வெளி என்றில்லாமல் ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்குமே இது ஒரு மாபெரும் மைல்கல்லாகக் கருதப்படுகிறது.