Published:Updated:

`மர்மம் விலகாத விக்ரம் லேண்டர்!’ - ஏமாற்றம் கொடுத்த நாசா விண்கலம்

நேற்று முன்தினம், நாசாவின் விண்கலமான LRO (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது. அது மட்டுமின்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது.

Chandrayaan 2
Chandrayaan 2

நிலவின் தரையில் இறங்குவதற்கு முன் தொடர்பை இழந்த சந்திரயான் 2-வின் லேண்டர் நிலவில் தரை இறங்கி, வரும் 21-ம் தேதியோடு 14 - நாள்கள் ஆகப்போகிறது. திட்டமிட்டபடி கடந்த 7-ம் தேதி வெற்றிகரமாகத் தரையைத் தொட்டிருந்தால், நாளை வரை லேண்டரும், அதனுள்ளே இருந்த ரோவரும் செயல்பாட்டிலிருந்திருக்கும். ஆனால், திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. லேண்டர் வேகமாக நிலத்தில் சென்று மோதியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தாலும் லேண்டர் நொறுங்காமல் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

Vikram  Descent Trajectory
Vikram Descent Trajectory
DD News

நேற்று முன்தினம், நாசாவின் விண்கலமான LRO (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது. அது மட்டுமின்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை. நாசாவின் விண்கலம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடியாமல் போனதால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

21-ம் தேதி வரை மட்டுமே, விக்ரம் லேண்டர் தரையிறங்கியிருக்கும் தென் துருவத்தில் பகலாக இருக்கும். அதன் பின்னர், அந்தப் பகுதியில் வெளிச்சம் இருக்காது. மேலும் வெப்பநிலையும் மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸுக்குக் கீழே செல்லும். லேண்டரும், வரும் அந்த வெப்பநிலையில் இயங்கும்படி வடிவமைக்கப்படவில்லை. அதன் கருவிகளும் நிரந்தரமாகப் பாதிப்படையும். எனவே, வரும் 21-ம் தேதிக்குப் பிறகு லேண்டரைத் தொடர்புகொள்வது இயலாத காரியமாக இருக்கும்.

chandrayaan 2
chandrayaan 2

இரண்டு நாள்களுக்கு முன், எங்களோடு துணை நின்றதற்காக நன்றி எனத் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவுசெய்திருந்தது இஸ்ரோ. அதன் பின்னர், இன்று சந்திரயான் 2 தொடர்பான அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான ட்வீட்டில், ‘சந்திரயான் 2 ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், ஆர்பிட்டர் திட்டமிட்ட பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அது மட்டுமின்றி விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வுசெய்யப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`விக்ரம் லேண்டரைப் பார்த்தீங்களா?'- விண்வெளியில் இருக்கும் நாசா விஞ்ஞானியிடம் விசாரித்த பிராட் பிட்