Published:Updated:

'யாருமில்லா செவ்வாயில் ஏழு வருடங்கள்!' - நாசாவின் ஹிட்மேன் 'கியூரியாசிட்டி ரோவர்'

சவால் நிறைந்த இடமான செவ்வாய்க்கிரகத்தில் ஏழு வருடங்களை நிறைவு செய்திருக்கிறது கியூரியாசிட்டி ரோவர்

கியூரியாசிட்டி ரோவர்
கியூரியாசிட்டி ரோவர் ( நாசா )

நமது சூரியக்குடும்பத்தில் நிலவுக்கு அடுத்தபடியாக அனைவரது பார்வையும் இருப்பது செவ்வாய்க்கிரகத்தின் மீதுதான். எதிர் காலத்தில் மனிதர்கள் அங்கே குடியேறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கியூரியாசிட்டி ரோவர்
கியூரியாசிட்டி ரோவர்
நாசா

அதற்கான முன்னோட்டமாக அங்கே தரையில் உலாவிக் கொண்டிருக்கின்றன பூமியிருந்து சென்ற ரோவர்கள். அதில் ஒன்றுதான் நாசாவின் கியூரியாசிட்டி.

செவ்வாயின் தரையை நோக்கி முதல் படியை எடுத்து வைத்தது சோவியத் யூனியன்தான். 1971-ம் ஆண்டில் Mars 2 என்ற விண்கலத்தைச் செவ்வாய்க்கு அனுப்பி வைத்தது. அது தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்ததாக அனுப்பி வைக்கப்பட்ட Mars 3 என்ற விண்கலமே முதல் முறையாகச் செவ்வாயின் தரையைத் தொட்டது. வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும்கூட அடுத்த 20 நொடிகளில் செயலிழந்து போனது. அதன் பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட Mars 6-ம் தோல்வியைத் தழுவியதால் செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்புவதிலிருந்து பின் வாங்கிக்கொண்டது சோவியத் யூனியன். அதன் பிறகு அமெரிக்காவின் முயற்சி தொடங்கியது.

தரையிறங்கும் கியூரியாசிட்டி ரோவர்
தரையிறங்கும் கியூரியாசிட்டி ரோவர்
நாசா

நாசா முதல் முறையாக அனுப்பி வைத்த வைகிங் 1976-ம் ஆண்டு செவ்வாயில் வெற்றிகரமாகக் கால்பதித்தது. அதன் பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட சில விண்கலங்கள் தோல்வியைச் சந்தித்தாலும் பெரும்பாலான விண்கலங்களை வெற்றிகரமாக தரையிறங்க வைத்து சாதனை படைத்தது. சில காலத்துக்குப் பின்னர் செவ்வாயின் மேற்பரப்பில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரோவர்களைத் தயார் செய்தது நாசா. அந்த வரிசையில் கடந்த 2011-ம் ஆண்டில் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் கியூரியாசிட்டி ரோவர். அதன் பின்னர், ஒரு வருடம் கழித்து 2012 ஆகஸ்ட் 6-ம் தேதி செவ்வாய்க்கிரகத்தில் கால் பதித்த கியூரியாசிட்டி இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் செவ்வாயில் ஏழு வருடங்களை நிறைவு செய்திருக்கிறது.

தற்சமயம் செவ்வாயில் உயிர்ப்போடு இருக்கும் இரண்டு ரோவர்களில் கியூரியாசிட்டியும் ஒன்றாக இருக்கிறது. யாருமே இல்லாத அந்தக் கிரகத்தில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலத்தைத் துளையிடுவதற்கான கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. ஏழு வருடத்தில் செவ்வாயின் தரைப்பகுதியில் சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவை கியூரியாசிட்டி கடந்திருக்கிறது. செவ்வாயில் உயிர்கள் வாழ முடியுமா, தண்ணீர் பற்றிய தகல்கள், செவ்வாயின் புவியியல் அமைப்பு மற்றும் காலநிலை ஆகியவை தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதுதான் கியூசியாசிட்டியின் நோக்கம். அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல மனிதன் தயாராகிவிட்ட நிலையில் கியூரியாசிட்டி ரோவர் தரும் தகவல்கள் பல வகைகளில் உதவிகரமாக இருக்கும்.

clay-bearing unit
clay-bearing unit
நாசா

ஏழாவது வருடக் கொண்டாட்டத்தைச் செவ்வாயில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் பகுதியை ஆய்வு செய்யத் தொடங்கியதன் மூலமாக ஆரம்பித்திருக்கிறது கியூரியாசிட்டி. கேல் கிரேட்டர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஷார்ப் என்ற சிகரத்தில் ‘clay-bearing unit’ என்ற பகுதி இருக்கிறது. களிமன் நிறைந்த பகுதியாக இருக்கும் அந்த இடத்தில்தான் தற்போது ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. கேல் பள்ளத்தாக்குப் பகுதியில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஊற்றுகள், ஏரிகள் போன்றவை இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் தற்போது இருக்கும் களிமண்ணைப் பரிசோதிப்பதன் மூலமாக அது தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ரோவரின் கட்டுப்பாடு மனிதர்களின் கையிலிருந்தாலும் அங்கேயும் இயற்கை வைத்ததுதான் சட்டம். அதுவும் செவ்வாயில் வீசும் மிகப் பெரிய புயல்களுக்கு நாசா பயப்படத்தான் செய்யும்.

செவ்வாயில் ஒரு ரோவர் இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்துச் செயல்படுவதை மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கிறது நாசா. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதைக் கணிக்கவே முடியாத ஒரு இடம் செவ்வாய். பூமியிலிருந்து 54 மில்லியன் தொலைவில் இருக்கிறது செவ்வாய்க் கிரகம். அங்கே இருக்கும் ரோவருக்கு ஒரு கட்டளையை அனுப்பி வைத்தால்கூட அது அங்கே போய்ச் சேர்வதற்கு சில நிமிடங்கள் ஆகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு தவறான கட்டளை ரோவரின் செயல்பாட்டை நிறுத்திவிடும் வாய்ப்புகள் உண்டு. ரோவரின் கட்டுப்பாடு மனிதர்களின் கையிலிருந்தாலும் அங்கேயும் இயற்கை வைத்ததுதான் சட்டம். அதுவும் செவ்வாயில் வீசும் மிகப் பெரிய புயல்களுக்கு நாசா கொஞ்சம் பயப்படத்தான் செய்யும்.

செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகம்
நாசா

செவ்வாயில் மணற்பரப்பு இருப்பதால் புயல் வீசும்போது அது மணலையும் சேர்த்துக்கொண்டு புழுதிப்புயலாகவே வீசும். மணற்துகள்கள், சிறிய கற்கள், தூசு எனக் கலந்துகட்டி வீசும் அந்தப் புயலைச் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அண்மையில்தான் அப்படி ஒரு புயல் நாசா ரோவர் ஒன்றின் கதையை முடித்து வைத்தது. 2004-ம் ஆண்டு முதல் செவ்வாயில் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது Opportunity விண்கலம். செவ்வாயில் தரையிறங்கிய பின்னர், மூன்று மாதம் மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைத் தாண்டியும் செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கடந்த ஜூன் மாதம் வீசிய ஒரு புழுதிப்புயலால் Opportunity-யின் சோலார் தகடுகளில் தூசி படிந்தது. சூரிய ஒளி மூலமாகவே அதற்குத் தேவையான ஆற்றல் கிடைத்து வந்தது. புயலின் காரணமாகத் தூசி படிந்ததால் ஆற்றல் கிடைக்காமல் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. இது போன்ற சம்பவங்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கியூரியாசிட்டி ரோவரின் ஆற்றல் மூலத்தை வடிவமைத்திருந்தது நாசா. இதற்கு ஆற்றல் கொடுப்பது அணு மின்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பல வருடங்களுக்கு எந்த வித சிக்கலும் இல்லாமல் செயல்படும். ஒரு வேளை இன்னும் சில வருடங்களுக்குள் மனிதன் செவ்வாயில் போய் இறங்கினால் அந்த முதல் மனிதனுக்கு கியூரியாசிட்டி ஹாய் சொல்லக் காத்துக்கொண்டிருக்கும்.