Published:Updated:

Ingenuity: செவ்வாயில் பறந்த குட்டி ஹெலிகாப்டர்... நாசாவின் மற்றுமொரு மகத்தான சாதனை!

வெறும் 30 விநாடிகள் பறந்ததற்கு இத்தனை கொண்டாட்டமா என நீங்கள் கேட்கலாம்? விண்வெளி ஆராய்ச்சி உலகு இதைக் கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிரோன்கள்... ஒரு காலத்தில் அதிநவீன தொழில்நுட்பமாகப் பார்க்கப்பட்ட இவை இன்று சர்வ சாதாரண விஷயமாகிவிட்டன. சின்ன பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட குட்டியாக டிரோன் கேமரா ஒன்று பறப்பதைப் பார்க்கமுடிகிறது. அமேசான் நேரடியாக டிரோனில் டெலிவரி செய்யும் முயற்சியில் தீவிரமாக களம் கண்டுள்ளது. இந்த ஒற்றை தொழில்நுட்பத்தால் இன்று அத்தனை பயன்களைப் பூமியில் அறுவடை செய்துகொண்டிருக்கிறான் மனிதன். இப்போது மற்ற கோள்களிலும் டிரோன்களின் பயன்களை செயல்படுத்தத் தயாராகிவிட்டான். ஆம், முதல்முறையாக இங்கிருந்து செவ்வாயில் ஒரு குட்டி ஹெலிகாப்டரை பறக்க விட்ட சாதனை படைத்திருக்கிறது நாசா.

செவ்வாய்க் கிரகத்தில் இப்போது இல்லையென்றாலும் முன்னொரு காலத்தில் ஏதோ ஒரு வடிவில் உயிர்கள் இருந்திருக்கலாம் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். பல நாடுகளும் போட்டிப்போட்டு செவ்வாய்க்கு விண்கலங்கள் அனுப்ப இதுதான் காரணம். பூமிக்கு வெளியே எந்த ஒரு வடிவிலாவது உயிர்கள் வாழ்வதோ, வாழ்ந்ததோ அறியப்பட்டால், விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக அது அமையும். அந்தக் குறிக்கோளுடன்தான் செவ்வாயில் பிப்ரவரி மாதம் தடம் பதித்தது நாசாவின் ‘பெர்ஸிவியரன்ஸ்’ ரோவர்.

பெர்ஸிவியரன்ஸ்
பெர்ஸிவியரன்ஸ்
NASA

சுமார் 293 மில்லியன் மைல்கள் பயணத்திற்குப் பிறகு ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) பிப்ரவரி 18-ம் தேதி பெர்ஸிவியரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. ஒரு ஸ்பெஷல் குட்டி ஹெலிகாப்டரையும் பாதுகாப்பாக தன்னுள் தாங்கி செவ்வாய்க்கு எடுத்து சென்றிருந்தது. ‘இன்ஜெனுவிட்டி’ (Ingenuity) என அழைக்கப்படும் இந்த குட்டி ஹெலிகாப்டர் செவ்வாயின் அழுத்தம் குறைந்த வளிமண்டலத்தில் பார்ப்பதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. அந்த வளிமண்டலத்தில் பறப்பது எப்படி இருக்கும், அதில் என்னென்ன சவால்கள் இருக்கும் என்பதை ஆராய்ச்சி செய்வதே இதன் நோக்கம். பெர்ஸிவியரன்ஸின் மிஷனுக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமே கிடையாது.

0.49 மீட்டர் உயரம் கொண்ட இது சராசரி டிரோன் போலச் சுழலும் 1.2 மீட்டர் நீள ப்ளேட்களின் உதவியுடன் பறக்கும். இந்த ப்ளேட்கள் சுமார் 2400 rpm, அதாவது நிமிடத்திற்கு 2400 முறை சூழலும். இதில் ஒரு வயர்லெஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் இருக்கும். நவிகேஷன் சென்சார்களும், இரண்டு கேமராக்களும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். சூரிய ஆற்றலில் இயங்கும் டிரோன் இது என்பதால் தானாகவே ரீசார்ஜ் ஆகிவிடும்.

பறக்கும் போது அதன் நிழலை புகைப்படம் எடுத்த இன்ஜெனுவிட்டி
பறக்கும் போது அதன் நிழலை புகைப்படம் எடுத்த இன்ஜெனுவிட்டி

இன்ஜெனுவிட்டியின் முதன்மை பொறியாளர் ஜெ.பலராமன். இவர் ஒரு இந்தியர், ஐஐடி மெட்ராஸில் படித்தவர். மொத்தமாக 30 விநாடிகளே பறக்கும் வகையில்தான் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பே செவ்வாயில் இது பறந்திருக்க வேண்டும். ஆனால், மென்பொருளில் சிறிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இது சற்றே தள்ளிப்போனது. இப்போது அனைத்தும் சரிசெய்யப்பட்டு செவ்வாய் மண்டலத்தில் நேற்று பறந்து சாதனை படைத்திருக்கிறது இன்ஜெனுவிட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெறும் 30 விநாடிகள் பறந்ததற்கு இத்தனை கொண்டாட்டமா என நீங்கள் கேட்கலாம்? விண்வெளி ஆராய்ச்சி உலகு இதைக் கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் உண்டு. பூமியுடன் ஒப்பிடுகையில் செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. பார்ப்பதற்குத் தேவையான போதிய காற்றழுத்தம் அங்கு இருக்காது. ஈர்ப்பு விசை குறைவு என்பது மட்டுமே ஒரே சாதகமான அம்சம். மேலும் இப்படி மற்றொரு கிரகத்தில், இங்கிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பொருள் பறப்பது இதுவே முதல்முறை. அதனாலேயே விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய மைல்கல்லாகிறது இந்த நிகழ்வு. அடுத்த 30 நாள்களுக்குள் இன்னும் நான்கு முறை பறக்கவிருக்கிறது இன்ஜெனுவிட்டி. இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் கொண்டுதான் வருங்கால மிஷன்களில் இன்னும் மேம்பட்ட டிரோன்களை செவ்வாய்க்கு அனுப்பமுடியும். செவ்வாயில் இதுவரை செல்லாத இடங்களுக்குச் சென்று அவை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அதுவும் செவ்வாய் போன்ற கரடுமுரடான பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த ஒரு கிரகத்தில் ரோவர் மட்டும் வைத்து அனைத்து இடத்திற்கும் சென்று விட முடியாது. அதனால்தான் நேற்று நாசா செய்திருக்கும் இந்த சாதனை விண்வெளி ஆராய்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நாசா முதல்முறையாக மனிதன் பறந்ததற்கு இணையான சாதனையாக இதைக் கூறுகிறது. இதைக் குறிப்பிடும் வண்ணம் பெர்ஸிவியரன்ஸ் ரோவர், இன்ஜெனுவிட்டியை சோதனைக்காக இறக்கிவிட்ட இடத்தை 'ரைட் பிரதர்ஸ் ஃபீல்ட்' எனப் பெயர் சூட்டியிருக்கிறது. ரைட் பிரதர்ஸ் வடிவமைத்த விமானம் முதலில் வெறும் 12 விநாடிகள் மட்டுமே பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 12 விநாடிகள்தான் இன்று மொத்த உலகையும் தலைகீழாய் திருப்பி போட்டிருக்கிறது. அதையேதான் இந்த 30 விநாடிகளும் செய்யப்போகின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு