Published:Updated:

`இவ்வளவு க்ளோஸப்ல சூரியனை பார்த்திருக்க மாட்டீங்க!' - சாத்தியப்படுத்திய DKIST தொலைநோக்கி

சூரியனின் மேற்பரப்பு
சூரியனின் மேற்பரப்பு

ஹவாயில் இருக்கும் The Daniel K Inouye Solar Telescope எனப்படும் DKIST தொலைநோக்கி மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் மிகத் துல்லியமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தேசிய அறிவியல் அமைப்பு (National Science Foundation, NSF). உருகிய தங்கம்போலக் காட்சியளிக்கும் இதில் தெரியும் ஒவ்வொரு செதில்களும் இரண்டு மூன்று இந்திய மாநிலங்களை உள்ளடக்கும் அளவுக்கு பெரியது. ஒரு கோணத்தில் பார்த்தல் நம்ம ஊர் கடலைமிட்டாய் போலத்தான் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு கடலையும் அளவில் அத்தனை பெரியதாக இருக்கும்.

ஹவாயில் இருக்கும் The Daniel K Inouye Solar Telescope எனப்படும் DKIST தொலைநோக்கி மூலம் இது சாத்தியமாகியுள்ளது. சூரியனைப் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தப் புதிய தொலைநோக்கி Haleakalā என்னும் 3,000 அடி உயர எரிமலையின் மீது நிறுவப்பட்டது. தற்போது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி இதுதான். இதற்கு முன்பு பெரியதாக இருந்த சூரிய தொலைநோக்கியைவிட அளவில் இரண்டு மடங்கு பெரியது இது.

இந்தப் படங்களின் மூலம் சூரியனின் பரப்பில் 30 கிலோமீட்டர் வரை ஆராய முடியும் எனத் தெரிகிறது. அதாவது, கூகுள் மேப்பில் பூமியை ஜூம் செய்துபார்ப்பதைப்போலச் சூரியனை 30 கிலோமீட்டர் பரப்புவரை ஜூம் செய்து பார்க்க முடியும். இதுவே மிகப்பெரிய சாதனைதான். சூரியன், இங்கிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் சுற்றளவு 14 லட்சம் கிலோமீட்டர். அப்படியிருந்தும் பூமியிலிருந்துகொண்டே அதில் 30 கிலோமீட்டர் பரப்புவரை நம்மால் பார்க்க முடியும் என்பது அறிவியலில் மற்றுமொரு மைல்கல்.

சூரியனின் மேற்பரப்பு
சூரியனின் மேற்பரப்பு

இதனால் என்ன பயன் என்றுதானே கேட்கிறீர்கள்? இன்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு நம்மால் பூமியின் வானிலையை ஓரளவு சரிவரக் கணித்துவிட முடியும். ஆனால், விண்வெளி வானிலையைப் பொறுத்தவரையில் நிலைமை அப்படியில்லை.

`விண்வெளி நம்மை ஒன்றிணைக்கிறது!' - முதல் இரான் - அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஜாஸ்மின்
"விண்வெளி வானிலை கணிப்பில் நாம் 50 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம். அதை ஈடுகட்ட அதற்குப் பின்னிருக்கும் இயற்பியல் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் தொடக்கமாகச் சூரியனை DKIST தொலைநோக்கி அடுத்த சில தசாப்தங்களுக்கு ஆராயும்."
மேட் மவுன்டைன், தலைவர், Association of Universities for Research in Astronomy.
The Daniel K Inouye Solar Telescope
The Daniel K Inouye Solar Telescope
NSF

விண்வெளி வானிலை கணிப்பு ஏன் முக்கியமென்றால் அது நேரடியாக நம்மைப் பாதிக்கக்கூடும். சூரியனில் ஏற்படும் காந்த புயல்களின் சூரிய கிளரொளி (Solar Flare) ஏற்படலாம். அது நம் பூமியை அடைந்தால் மொத்தமாக நமது மின்சார இணைப்புகளைத் துண்டிக்கவும், செயற்கைக்கோள்கள் செயலிழக்க வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தப் புதிய ஆய்வுகள் மூலம் இப்படியான காந்தப் புயல்களை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். சூரிய கிளரொளி எப்போது ஏற்படும் என்பதையும் கணிக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு