Published:Updated:

சூரியனில் ஓம் ஒலி... `நீங்க நம்புனாலும் அதெல்லாம் பொய்தான்'! #FactCheck

சூரியன்ல ஓம் ஒலி!
சூரியன்ல ஓம் ஒலி!

உண்மையில் நாசா சூரியனில் வெளிப்படும் ஒலியாக சொல்வது எதை?

``உலகம் தட்டையானதுதான்", ``இது சரிதான், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை", ``உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்" என போலிச் செய்திகளைப் பரப்புவதில் பட்டம் பெற்றவர்கள் நம்மூர் சமூக வலைதள ஸ்லீப்பர் செல்கள். வீடியோ, டெக்ஸ்ட், ஆடியோ எனக் கிடைக்கும் வடிவத்தில் இதைப் பரப்புகின்றனர். பல நேரங்களில் இவற்றை உண்மை என நம்ப வைப்பதற்கு ''ஐநா சபை சொல்லுகிறது, நாசா சொல்கிறது" என எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸையும் சேர்ப்பது வழக்கம். அப்போதுதான் அது காட்டுத்தீ போலப் பரவும். அப்படியான போலி வீடியோ ஒன்றைத்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சிக்கியுள்ளார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரான கிரண் பேடி.

நேற்று `நாசா பதிவுசெய்த சூரியனின் சத்தம் இதுதான்' என ஒரு வீடியோவை அவர் பகிர நேற்று சமூக வலைதளங்களில் டிரெண்டிங் டாபிக் அதுதான். சூரியனின் படத்துடன் `ஓம்' என்று பதிவுசெய்யப்பட்ட ஆடியோவும், அதற்கான ஆங்கில விளக்கமும் இருக்கும் அந்த வீடியோவை இதுவரை சுமார் 14 லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றனர். ஒரு ஆளுநரே இப்படி ஒரு ஆதாரம் இல்லாத வீடியோவைப் பகிர்ந்திருக்கிறாரே என்றுதான் அந்த வீடியோவை இத்தனை மக்களால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவினால் நெட்டிசன்கள் பலரது கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறார் கிரண் பேடி.

`சூரியன் ஓம் என்று உச்சரிக்கிறது!' - கிரண்பேடியின் `நாசா வீடியோ' சர்ச்சை; கொதித்த நெட்டிசன்கள்

உண்மையில் சூரியனில் கேட்கும் சத்தம் என்ன?

சூரியன்
சூரியன்

முதலில் விண்வெளியில் ஒலி பயணம் செய்யமுடியாது. ஒலி பயணம் செய்ய ஏதேனும் வடிவில் அணுக்களும் மூலக்கூறுகளும் இருக்கவேண்டியது அவசியம். ஆனால், விண்வெளியோ பெரும்பாலும் வெற்றிடத்தால் (Vaccum) ஆனது. ஆனால், நாம் சூரியனை அதன் வெளியிடும் ஒலியை வைத்தே ஆராய்ந்துவருகிறோம். இதை Helioseismography என்பர். 20 வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ESA-வும் அமெரிக்காவின் நாசாவும் கூட்டு முயற்சியாக Solar and Heliospheric Observatory (SOHO) என்னும் விண்கலம் மூலம் 20 வருடங்களுக்கும் மேலாகச் சூரியனை ஆராய்ந்து வருகின்றன. இது சூரியனின் உட்பகுதியில் நடக்கும் உராய்வுகளாலும் பிற நிகழ்வுகளாலும் வெளியிடும் அதிர்வுகளைக் கண்காணித்துவருகின்றன. சூரியனின் வெளிப்புறத்தில் இந்த அதிர்வுகள் தெளிவாகத் தெரியுமாம். நம் கண்கள் சென்சிடிவாக இல்லையென்றால் அவற்றை நம்மால் கூட பார்க்கமுடியும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

2018-ம் ஆண்டு, இப்படிப் பதிவுசெய்யப்பட்ட இந்த அதிர்வுகளை வைத்து சூரியனின் சத்தம் இப்படிதான் இருக்குமென ஒரு ஆடியோவை வெளியிட்டது. அதனுடன் வெளியிட்ட அறிக்கையில் சூரியனின் சத்தத்தை `குறைந்த வேகத்தில் துடிக்கும் ஒரு தொடர்ச்சியான சத்தம்' ('The low, pulsing hum of our star's heartbeat') எனக் குறிப்பிடுகிறது நாசா. இதுவும் ஒரு கணிப்புதானே தவிர சூரியன் அருகில் சென்றால் இந்த ஒலிதான் கேட்கும் என்று தீர்மானமாக சொல்லிவிடமுடியாது.

இந்த ஒலியை வைத்து நம்மால் சூரியனுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கணிக்கமுடியும். சொல்லப்போனால் சூரியனை ஆராய நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான யுக்தி இதுதான். சூரியனுக்குள் நோக்க நம்மிடம் மைக்ரோஸ்கோப்போ, சிறப்பு சாதனங்களோ கிடையாது. ``இந்தச் சத்தத்தின் மூலம்தான் சூரியனுக்குள் என்ன நடக்கிறது என்பது இறுதியாக எங்களுக்குப் புரியத்தொடங்கியிருக்கிறது. சூரியன் தொடர்பான மிகவும் சிக்கலான விஷயங்களையும் எங்களால் தற்போது கண்காணிக்க முடிகிறது" என அப்போது தெரிவித்திருந்தது நாசா. ஒலிதான் நமக்குச் சூரியனைப் பற்றிய பல தெரியாத விஷயங்களைத் தெரிவிக்கப்போகிறது.

இஸ்ரோவும் விரைவில் சூரியனை ஆராய `ஆதித்யா' (Aditya - L1) மிஷனை விண்ணில் செலுத்தவிருக்கிறது. இப்படி விஞ்ஞானம் பல தடைகளைக் கடந்து நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் இப்படியான வீடியோக்கள் பரப்பப்பட்டுவருகின்றன. இதற்கு கிரண் பேடி போன்ற அரசு பிரதிநிதிகளே துணைபோவது வருந்தத்தக்கது.

இந்த வீடியோவை ஷேர் செய்ததற்கு இன்று அவர் மேலும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். ``இதை நாம் ஒப்புக்கொள்ளலாம், ஒப்புக்கொள்ளாமல் போகலாம். இரண்டு கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று `ஓம்'மின் மகத்துவம் கூறும் படம் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் கிரண் பேடி.

அடுத்த கட்டுரைக்கு