
விண்வெளியில் இருந்து செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் நண்பர்களை கடுபெத்த முடியாதோ என கவலை ஏற்படுவதனை தடுப்பதற்காக சுற்றிலும் 16 புகைப்படக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பால்யத்தில் வானம் பார்த்து நட்சத்திரம் எண்ணிய ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதிற்குள்ளும் விண்வெளியில் பயணம் செய்வதற்கான ஆசை இருக்கும். அது அடுத்த ஆண்டிற்குள் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.
ரிச்சர்ட் பிராசன் என்னும் இங்கிலாந்து தொழிலதிபரின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளி பயணத்திற்கு (Space tour) மக்களை 90 நிமிட சுற்றுலாவாக அழைத்து செல்ல முயற்சி செய்துவருகிறது. சமீபத்தில் அந்நிறுவனம் விண்வெளி பயணத்துக்காகத் தயாராகிவரும் ஆகாய கப்பல் 'விஎஸ்எஸ் யூனிட்டியின்' (VSS unity) பயணிகள் அமரும் இருக்கை மற்றும் அறையின் வடிவத்தை இணையத்தில் வெளியிட்டது.

இதில் ஆறு பயணிகள் மற்றும் இரண்டு குழு உறுப்பினர்கள் அமரலாம். பயணிகளின் எடை மற்றும் உயரத்திற்கு தகுந்தாற்போல வசதியாக அமரும் இருக்கைகளை கொண்டுள்ளது. பயணிகள் அனைவரும் தங்களுக்குள்ளும் இரண்டு விமானிகளிடமும் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. புவியிலிருந்து 97 கிலோமீட்டர்வரை அழைத்துச் செல்லும் ஆகாய கப்பலில் இருந்து பரந்த நம் பூமியின் அழகைக் காண பெரிய வட்டவடிவ ஜன்னல்கள் உள்ளன.
ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஆகாய கப்பலினுள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது ஆபத்தை ஏற்படுத்தகூடும். விண்வெளியில் இருந்து செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் நண்பர்களை கடுபேத்த முடியாதோ எனக் கவலை ஏற்படுவதனைத் தடுப்பதற்காக சுற்றிலும் 16 புகைப்படக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு வீடியோ கருவிகளும் இருக்கும் என ஜார்ஜ் வயிட்சைட்ஸ் என்னும் விர்ஜின் கேலக்டிக்கின் முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் வைட்ஸ், "விண்வெளியில் மிதக்க விரும்பும் பயணிகள் பாதுகாப்பு கருவிகளை கழற்றிவிட்டு மிதக்கலாம்" எனத் தெரிவித்தார். காயம் ஏற்படுவதை தடுக்க இந்த விண்கலத்தின் உள்பக்கம் முழுவதும் மென்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கைப்பிடியும் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி சுற்றுலா செல்ல இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளனர். விர்ஜின் நிறுவனத்தின் தலைமையிடமான மெக்ஸிக்கோவில் இருந்து விண்வெளிக்குப் புறப்படும் பயணத்திற்கான ஒரு விண்வெளி டிக்கெட் 250,000 டாலர்களுக்கு விற்பனை ஆகிறது. இந்திய மதிப்பில் இது 1,82,54,375 ரூபாய்!
எப்படியோ விண்வெளி சுற்றுலாவிற்கு முதல் படி வைத்தாயிற்று. விலையிறங்குவாயா விண்வெளியே எனக் காத்திருப்போம்!