Published:Updated:

`மங்கிய ஒளி, காணாமல்போன பறவைகள்'- அரிய வானியல் நிகழ்வை அதிசயித்துப் பார்த்த ஊட்டி மக்கள்!

முழு கிரகண நிகழ்வின்போது ஒளி மங்கலையும், குளிரையும் உணர முடிந்து. அதேபோல் அதுவரை உலவிக்கொண்டிருந்த பறவைகள் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

Annular Solar Eclipse
Annular Solar Eclipse ( Arun.K )

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தின் பல பகுதிகளில் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தப் பட்டியலில் நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய இடமாக இருந்தது.

பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரிய வானியல் நிகழ்வினைக் கண்டு ரசிப்பதற்காக ஊட்டியில் உள்ள வானியல் ஆய்வு மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சில அமைப்புகள் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும் வானியல் ஆய்வு மையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Annular Solar Eclipse
Annular Solar Eclipse

காலை 7 மணி முதல் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்கும் ஊட்டி வானியல் ஆய்வு மையத்திற்கும் பள்ளி மாணவ, மாணவிகள், உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளர்கள் எனப் பலரும் வரத்தொடங்கினர்.

வழக்கமாக நீலகிரியில் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். ஆனால், இன்று காலை முதல் மேகமூட்டமின்றித் தெளிவாகவே இருந்தது. அனைவரும் கையில் சிறப்புக் கண்ணாடியுடன் காத்திருந்தனர். சரியாக 8.5-க்கு லேசான மறைப்பு தொடங்கியது. மறைப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க ஒளியும் குறையத் தொடங்கியது. அதேசமயம் திடீரென குளிரையும் உணரத்தொடங்கினர்.

அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஓசைகளும் அடங்கின. சரியாக 9.26 மணி 58-வது விநாடியில் முழு மறைப்பு தொடங்கியது. தொடர்ந்து 3 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மறைப்புடன் காணப்பட்ட வளையக் கிரகணத்தை அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டும் ஆரவாரத்துடனும் கண்ணாடி மூலம் கண்டுவியந்தனர். பின்னர் மறைப்பு மெல்ல விலகி 11.9 மணிக்கு முழு மறைப்பு விலகி கிரகண நிகழ்வு முடிவு பெற்றது.

Annular Solar Eclipse
Annular Solar Eclipse

இந்த நிகழ்வு குறித்து இந்தி வானியல் ஆய்வாளர் அனிகெட் சூலேவிடம் பேசுகையில், "இந்த அரிய வானியல் நிகழ்வின் மூலம் பொது மக்களுக்கு அறிவியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தது. மேலும், சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சூரியனைப் பற்றி அறியப்படாத பல புதிர்களை அறிந்துகொள்ளவும் ஆய்வாளர்களுக்கு நல்வாய்ப்பாக இருந்தது. ஊட்டியில் 94 சதவிகிதம் கிரகணம் தென்பட்டது" என்றார்.

கிரகண நிகழ்வைக் காண வந்த சுற்றுலாப்பயணி ரோகிணி, ``முழு கிரகண நிகழ்வின்போது ஒளி மங்கலையும் குளிரையும் உணர முடிந்து. அதேபோல் அதுவரை உலவிக்கொண்டிருந்த பறவைகள் இருக்கும் இடம் தெரியாமல் போனது. சிறிது நேரத்திற்குப் பின்னரே பறப்பதைப் பார்க்க முடிந்து. இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது" என்றார்.

Annular Solar Eclipse
Annular Solar Eclipse

ஊட்டியில் உள்ள ரேடியோ வானியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் திவ்யா ஓப்ராய் கூறுகையில், ``சந்திரனை விடச் சூரியன் 400 மடங்கு பெரியது. ஆனால், ஒரே அளவு போல் கண்களுக்குத் தெரிய காரணம் சந்திரன் 400 மடங்கு நெருக்கமாக வருகிறது என்பதால்தான். ஊட்டியில் 94 சதவிகிதம் நெருப்பு வளையச் சூரிய கிரணம் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த நெருப்பு வளையச் சூரிய கிரணம் உத்திரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் 2020-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி தோன்றும். தமிழகத்தில் 2031-ம் ஆண்டு மே 21-ம் தேதி தென்படும்" என்றார்.