Published:Updated:

வானவில் பார்த்திருப்பீங்க... `Fire Rainbow' பார்த்திருக்கீங்களா?

பா.கவின்

இந்த ஒளியியல் நிகழ்வு, வழக்கமான வானவில்லைவிடவும் அபூர்வம்.

Fire Rainbow / Ravenna, Michigan
Fire Rainbow / Ravenna, Michigan ( Dehk / Wikipedia )

அபூர்வமாகக் காணக்கிடைக்கும் விஷயங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அது, பல ஆண்டுகள் கழித்து வானில் நடக்கும் சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, காஞ்சியில் தோன்றி தரிசனம் தரும் அத்திவரதராக இருந்தாலும் சரி, மழைக்காலங்களில் வந்துசெல்லும் வானவில்லும்கூட அப்படித்தான். அபூர்வமாக என்றேனும் வந்துசெல்லும். ஆனால், இதைவிடவும் அபூர்வமாக வந்துசெல்லும் வானவில் ஒன்று உண்டு. அது, 'Fire Rainbow'. தமிழில் இதை 'தீ வானவில்' என மொழி பெயர்க்கலாம்தான். ஆனால், தீக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வானவில்லுக்கும் இதற்குமே எந்த சம்பந்தமும் இல்லை. வானவில் போலவே தோற்றமளிக்கும். ஆனால், அதிலிருந்து முற்றிலும் வேறான ஒரு வானியல் மற்றும் ஒளியியல் நிகழ்வு இது.

வானவில்
வானவில்

இந்த Fire Rainbow-வுக்கு விஞ்ஞானிகள் அளித்திருக்கும் பெயர், Circumhorizontal Arc (CHA). இது, மிக மிக அபூர்வமாக நடக்கும் ஒளியியல் நிகழ்வு. இதைக் காண வேண்டுமென்றால், சரியான நேரத்தில் சரியான இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்வு நடைபெறுவதற்கும் வானில் பல்வேறு அம்சங்கள் கூடிவர வேண்டும். அப்போதுதான் இந்த CHA தரிசனம் கிடைக்கும்.

இது, வானில் பார்க்க லேசான தீப்பிழம்பு போல தெரிந்தாலும், இதிலேயே நிறைய வகைகள் உண்டு. வானவில் போலவே தலைகீழாகத் தோன்றுவது, இடையே நேர்கோடாகக் காட்சியளிப்பது என CHA பல வகையாகத் தோன்றும்.

இது எப்படி உருவாகிறது?

வழக்கமான ஒளிவிலகல் விஷயம்தான். ஆனால், அது சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்க வேண்டும். அதாவது, சூரியனிலிருந்து வரும் ஒளி, மிக உயரத்திலிருந்து சிர்ரஸ் மேகங்களின்மீது பட்டு, அதனுள் இருக்கும் அறுங்கோண வடிவிலான பனிப்படலங்களின் வழியாக வெளிவர வேண்டும். இப்படி வரும்பட்சத்தில், சூரியனின் ஒளி வேகம் குறைந்து, விலகல் அடையும். அப்போதுதான் இந்த CHA தோன்றும். இந்த நிகழ்வு சிர்ரஸ் வகை மேகங்கள் என்றால் மட்டுமே நடக்கும். இவை, வழக்கமான மேகக் கூட்டங்கள் போல இல்லாமல், கீற்றுகள் போலத் தோற்றமளிக்கும். அதிக வெண்மைத் தன்மையுடனும் இருக்கும்.

Circumhorizon arc
Circumhorizon arc
Baccara / Wikipedia

சிர்ரஸ் மேகம் மெல்லியதாகவும், அடர்த்தியற்றும் ஒழுங்காக வாரப்படாத தலைமுடி போன்ற தோற்றத்துடனும் இருக்கும். இந்த மேகக்கூட்டம், அறிமுகமும் முடிவும் இன்றி வானில் பரவியிருக்கும். இந்த மேகங்களில், வழக்கமான மேகங்களைவிடவும் ஈரத்தன்மை குறைவாக இருக்கும். இதனால்தான் ஒளி விலகல் ஏற்படுகிறது.

வானவில்லைப் போல இதை அடிக்கடி காணமுடியாததற்கு காரணம், இதற்கான எல்லா அமைப்புகளும் அடிக்கடி சரியாக அமையாததுதான். இது உருவாக, சூரியன் அடிவானத்திலிருந்து 58 டிகிரி உயரம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதேபோல சிர்ரஸ் மேகங்களும் சரியாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த 58 டிகிரியில் கொஞ்சம்கூட குறைந்தாலும் CHA உதயமாகாது. சிர்ரஸ் மேகங்களில் உள்ள பனிப்படலங்கள் சரியாக அமைந்திருந்தால், ஒளி சரியாகச் சிதறி, வானில் மிக நீளமாக CHA காட்சியளிக்கும். இல்லையெனில், அதன் அமைப்புகளுக்கேற்ப வேறு வடிவங்களில் தோற்றமளிக்கும்.

Fire Rainbow
Fire Rainbow
Image by Jan Haerer from Pixabay

இந்த CHA-வானது வழக்கமான வானவில்களோடு அல்லது Iridescent clouds எனப்படும் வண்ண மேகக் கூட்டங்களோடு சேர்த்து பலரும் குழப்பிக்கொள்வர். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான ஒளியியல் நிகழ்வு. இந்த CHA-வுக்கும் Iridescent cloud-களுக்குமே நிறைய வித்தியாசங்கள் உண்டு. CHA ஒரே கோணத்தில் மட்டுமே தெரியும். ஆனால், Iridescent cloud எல்லா கோணங்களிலும் தெரியும். வானவில் போலவே CHA-விலும் சிவப்பு நிறம்தான் மேல்புறம் இருக்கும். ஆனால், Iridescent cloud-ல் அந்தந்த சமயத்திற்கு ஏற்ப வண்ணங்கள் மாறும்.

என்றேனும் வானில் வானவில் போல் அன்றி, வித்தியாசமான வடிவில் வண்ணங்கள் தென்பட்டால், கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். இதுபோன்ற வித்தியாசமான ஒளியியல் அம்சங்களாகவும் இருக்கலாம்.