Published:Updated:

`வெப்பநிலையை அறியலாம்!'- ராக்கெட்டை தயாரித்து விண்ணில் செலுத்திய சேலம் அரசுப் பள்ளி மாணவர்கள்

100 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள், வளிமண்டலத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்து ரேடியோ அதிர்வெண் (Radio Frequency) மூலமாக நமது மொபைலுக்கு அனுப்புகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

ஏவுகணை நாயகன் என்றும், மக்களின் குடியரசுத் தலைவர் என்றும், அனைவராலும் போற்றப்பட்டவர், A.P.J. அப்துல் கலாம். அவர் இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் இருந்துவருகிறார். அத்தகையவரின் 88-வது பிறந்தநாளை மாணவர்கள், இளைஞர்கள் எனத் தொடங்கி அரசியல்வாதிகள் என அனைவரும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாடினர்.

சேலம் அரசுப் பள்ளி மாணவர்கள்!
சேலம் அரசுப் பள்ளி மாணவர்கள்!

இந்த நிலையில், கலாமின் பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் பண்டிகையை வித்தியாசமான முறையில் ஆக்கபூர்வமாக கொண்டாடியிருக்கிறார்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மு.மதன், செ.நந்தினி, சீ.யுவஸ்ரீ, சீ.இந்திரேஷ், சே.மோகனப்பிரியா ஆகியோர், டார்வின் அறிவியல் மன்றம் செயலாளரும், ஆசிரியருமான தினேஷின் பயிற்சியின் மூலம் 500 மீட்டர் உயரம் செல்லக்கூடிய SOLID PROPELLANT ROCKET ஒன்றை சிறிய செயற்கைக்கோளோடு வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ராக்கெட் மூலமாக நம் பகுதியில் உள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றை அறிய முடியும்.

`தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்!’ - நிலம் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

அந்த ராக்கெட்டை தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு, எடப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் விஜயா தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலையில் வெற்றிகரமாக ஏவியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் ஷேக்தாவுத், வட்டார மேற்பார்வையாளர் வீரப்பன் மற்றும் பெற்றோர்கள், கிராம கல்விக் குழுவினர், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராக்கெட்
ராக்கெட்
வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம்
வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம்

இதுகுறித்து ஆசிரியர் தினேஷ் கூறுகையில்,``அரசுப் பள்ளி மாணவர்களிடையே விண்வெளி மற்றும் ராக்கெட் பற்றின ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களால் solid propellant rocket உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தியிருக்கிறோம். இது சுமார் 800 கிராம் எடையுடன் 100 மீட்டர் உயரம் வரை பயணித்தது. இதில் திட எரிபொருள் ராக்கெட்டின் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 100 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள், வளிமண்டலத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்து ரேடியோ அதிர்வெண் (Radio Frequency) மூலமாக நமது மொபைலுக்கு அனுப்புகிறது. மேலும், அறிவியல் கொள்கைகள் விளக்கும் அறிவியல் கண்காட்சி, அறிவியல் விந்தைகள் தலைப்பினில் சுவாரஸ்யமான அறிவியல் சோதனைகள் எனப் பல நிகழ்வுகள் நிகழ்த்த உள்ளோம்" என்றார்.