Published:Updated:

ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு| இஸ்ரோ ஹீரோ சிவன் – 3

`` `கையளவு கொடுத்தாலும் கலங்க மாட்டேன். கடல் அளவு வந்தாலும் கலங்க மாட்டேன்'. `மெல்ல மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தைக் கூட சாப்பிடலாம்’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் விக்ரம் சாராபாயைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் 1963-ம் ஆண்டு போட்டிபோட்டுக்கொண்டு விண்ணில் ராக்கெட்டுகளை ஏவி ராக்கெட் ரேஸ் நடத்திக்கொண்டிருந்தன. உலக வல்லரசுகள் பலவும் விண்வெளித்துறையில் ஏதாவது செய்து தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தவித்தன. இங்கிலாந்தும் பிரான்ஸும் எடுத்த முயற்சிகள் தோற்றுப்போயின.

அந்தச் சமயத்தில் இயற்பியல் விஞ்ஞானியான விக்ரம் சாராபாய், இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக்கமிட்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். குறைவான உயர வசதி கொண்ட, பூமித்தியரேகையின் காந்தப்புலனமைப்புப்படி ராக்கெட் ஏவ சரியான இடம் என்று திருவனந்தபுரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் `தும்பா’ என்ற ஊரைக் கண்டறிந்தார்.

விக்ரம் சாராபாய் தேர்வு செய்திருந்த இடத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அந்தத் தேவாலயத்துக்குப் பொறுப்பு ஏற்றிருந்த பிஷப் பெர்னார்டு பெரேராவைச் சந்தித்து இந்தியாவின் விண்வெளிக் கனவுகளைப் பற்றிச் சொன்னார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் இதுபற்றி எடுத்துரைத்தார். மக்களும் தேவாலய பிரதிநிதிகளும் இடத்தைத் தர முன்வந்தனர்.

`சித்தாரா’ – இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு! ஆடியோ வடிவில் கேட்க...

1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் `நைக் - அப்பச்சே' என்னும் சவுண்டிங் ராக்கெட்டை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது இந்தியா. அதுதான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கனவுத்திட்டம். அந்த ராக்கெட்டின் பாகங்கள் வரத் தாமதமானபோது சைக்கிள்களிலும் மாட்டு வண்டிகளிலும் அவற்றைக் கொண்டுவந்து ராக்கெட் ஏவுதளத்தில் சேர்த்தார் விக்ரம். அன்றைய கேரள கவர்னர், முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அணுவியல் விஞ்ஞானி டாக்டர் ஹோமிபாபா உள்ளிட்டவர்கள் முன்னிலையில், இந்தியாவின் முதல் ராக்கெட்டை மாலை 6.31 மணிக்கு ஏவி சரித்திர வெற்றியைப் பெற்றார். அந்த ஒற்றை ராக்கெட் தூக்கிச் சுமந்தது இந்தியாவின் கனவை மட்டுமல்ல… விக்ரமின் பெருமையையும்தான். உலகம் உற்றுநோக்கும் நபரானார் விக்ரம் சாராபாய்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் உட்புறம் ( பழைய புகைப்படம்)
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் உட்புறம் ( பழைய புகைப்படம்)

விக்ரம் ராக்கெட்டுகளை ஏவத் தேர்வு செய்த `தும்பா’ என்ற இடமே அவர் மறைந்த பின் `விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு கிட்டத்தட்ட 2,000 விஞ்ஞானிகள் உட்பட 5,000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு விக்ரம் சாரபாய் விதையிட்ட இடம் இன்று விண்நோக்கி வளர்ந்துகொண்டு இருக்கிறது.

பெரும் வரலாறு கொண்ட புகழ்மிக்க இடத்தில், அவ்வளவு எளிதாக நுழைய முடியுமா என்ன? விஞ்ஞானி சிவனின் பின்னால் சென்ற என்னையும் ராஜசேகர் சாரையும் தடுத்து நிறுத்தி அறைக்குள் அழைத்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், எங்களை முழு சோதனை செய்தார்கள். இந்த வளாகத்தினுள் கேமராவைக் கொண்டு செல்ல முடியாது. நாங்கள் ஏற்கெனவே சிறப்பு அனுமதி வாங்கியிருந்ததால் கேமரா சீரியல் நம்பர் முதற்கொண்டு அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தார்கள். சிவனின் அலுவலக அறை அவர் மொத்த வீட்டைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. விசாலமான அறை. தங்க நிறத்தில், எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி எனப் பல ராக்கெட்களின் மினியேச்சர் மாடல்கள் ஒருபுறம் கம்பீரமாகக் காட்சியளித்தன. ஆங்காங்கே தொட்டியில் செடி, கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானமும் இயற்கையும் ஒருசேர இருப்பது ஆக்கம்தானே. சிவனின் நேர் எதிரில் அமர்ந்தேன். அவர் மேஜையை அலங்கரித்தது சிறிய பி.எஸ்.எல்.வி மினியேச்சர். சிவன் பணியில் சேர்ந்தபின் எடுத்துக்கொண்ட முதல் புராஜெக்ட் பி.எஸ்.எல்.வி. ``பி.எஸ்.எல்.வி புராஜெக்ட்தானே உங்களின் முதல் குழந்தை?” எனக் கேட்டேன். அந்தக் காலத்தின் ஞாபகத்துக்குள் சில நொடிகள் சஞ்சரித்தார்...

சிவன்
சிவன்

``இந்த பி.எஸ்.எல்.வி திட்டத்துக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. 1983-ம் ஆண்டுதான் முதன்முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. சரியாக அதற்கு ஓராண்டுக்கு முன் நான் வேலையில் சேர்ந்தேன். எனக்கும் இந்த விண்வெளித்துறை ஆராய்ச்சிகள் எல்லாம் புதிது. `அ'னா… `ஆ'வன்னா… கூட தெரியாது. விஞ்ஞானிகளுக்கும் இந்தத் திட்டம் புதிது. நாங்கள் ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் பிறந்தோம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு குழந்தை தத்தித் தவழ்ந்து கற்றுக்கொள்வதுபோல நானும் பி.எஸ்.எல்.வி-யும் ஒன்றாகச் சேர்ந்தே இந்தத் துறையைப் பற்றிக் கற்றுக்கொண்டோம்.” லேசாகப் புன்னகைத்தவர் தொடர்ந்து பேசினார்.

``முதன்முதலில் எனக்கு Mission Simulation Guidnece And Control சம்பந்தப்பட்ட துறையில் வேலை கொடுத்தார்கள். ஒரு ராக்கெட்டுக்கு என்ன மாதிரி மென்பொருள் பயன்படுத்த வேண்டும். ராக்கெட்டின் டிசைன் எப்படி இருக்க வேண்டும். அது எவ்வளவு உயரம். எவ்வளவு அகலம். எந்தப் பாதையில் அது போக வேண்டும் என்று எல்லா விவரங்களையும் தொகுத்து உருவாக்கும் வேலை அது. இந்த ராக்கெட்டில் ஒரு சின்ன ஆணி மாட்டினால்கூட அது என்ன அளவில் இருக்க வேண்டும். என்ன மெட்டீரியலில் உருவாக்க வேண்டும் என சின்னச் சின்ன விஷயங்களையும் கவனமாக வரையறுக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால், ராக்கெட்டின் ஹார்டுவேர் பகுதியைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளையும் உருவாக்குவது.

ஆணி தொடங்கி இன்ஜின் தயாரிப்பதுவரை அனைத்திலும் என் பங்களிப்பைச் செலுத்தினேன். அந்தச் சமயத்தில்தான் இந்திய விண்வெளித்துறையில் முக்கிய ஜாம்பவான்கள் பலருடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

டாக்டர் ஶ்ரீனிவாசன், மாதவ் நாயர், டாக்டர் சுதாகர ராவ், ஆர்.வி.பெருமாள் என இந்திய விண்வெளியில் பங்காற்றிய முக்கிய நபர்களுடன் சேர்ந்து வேலை செய்தது மகத்தான அனுபவம். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எப்போதும் கத்துக்குட்டியாகப் புது வேலையில் சேரும்போது நிறைய ஐடியாக்கள் நமக்குத் தோன்றும்… அந்த ஐடியாக்களை எல்லாம் வெளியே சொன்னால் இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். ஒன்று அந்த ஐடியா புதிதாக யாரும் யோசிக்காத புது கோணத்தில் இருப்பதாக வரவேற்கப்படும் அல்லது `இந்த ஐடியாவே இப்போதுதான் யோசிக்கிறீங்களா?’ என இகழப்படும். நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்?’’ எனக் கேட்டேன். ``ம்ம்… நாம் நிறையச் சொல்ல சொல்லத்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சில ஐடியாக்கள் எப்போதோ யாருக்கோ தோன்றி அது உயிர் பெற்று இருக்கும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நமக்குத் தோன்றியதும் அதை நம் சீனியர்களிடம் சொல்லிவிட வேண்டும். அதுதான் நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்லும். அவர்கள், `இந்த ஐடியா ஏற்கெனவே `ஒர்க் அவுட்' ஆகிவிட்டது அல்லது இல்லை என்பார்கள். இதனால் நம் சிந்தனைதான் மேம்படும். யாருக்கும் சொல்லாமல் நம் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை.

நான் நிறைய புதுப்புது ஐடியாக்களைத் தோன்றியதும் என் சீனியர்களிடம் சொல்லிவிடுவேன். அதை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னையே அந்த யோசனைக்கு உயிர்தரச் சொல்வார்கள். அப்படித்தான் ராக்கெட் தொழில்நுட்பம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வசப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பம் கவுன்டவுன் மாதிரிதான்… ஜீரோவில் தொடங்கி 1… 2… 3… எனப் படிப்படியாகத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

sivan working still
sivan working still

அன்று சிவன் எண்ணத்தில் வந்த ஒரு ஐடியாதான் அன்று முதல் இன்று வரை நாம் செலுத்தும் ராக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். நம் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் அதை ஒரு புரட்சி என்றே சொல்கிறார்கள். சிவனுக்கு அந்த எண்ணம் தோன்றக்காரணம் என்ன. அப்படி என்ன கண்டுபிடித்தார். அதன் பயன் என்ன?

`சித்தாரா'

ஒரு துறைக்கு நாம் புதிதாக வேலையில் சேர்ந்து ஓரிரு வருடம் சென்றபின், அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்துகொண்டிருக்கும்போது, `இந்த வேலையில் இந்த மாதிரி ஒன்று இருந்தால் சிக்கல் இல்லாமல் இன்னும் சுலபா முடிச்சுடலாமே… இன்னும் எளிமையா இருக்குமே’ எனச் சிலர் சிந்திப்பார்கள். ஆனால், அந்த மாதிரி ஒன்றை உருவாக்க சிலர் மட்டுமே யோசிப்பார்கள். சிவனைப் பொறுத்தவரை யோசனைக்கே இடமில்லாமல் களத்தில் குதித்து செய்துகாட்டினார்.

``ஒரு ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்த என்னென்ன தேவை என்பதை டெக்னிக்கலாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு ராக்கெட் பற்றிய முழு விவரங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி அப்போது எங்கும் இல்லை. அதை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். 1983-ம் ஆண்டிலிருந்து இரவு பகலாக வி.எஸ்.எஸ்.சி-யிலேயே இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு அப்ளிகேசனை 1984-ம் ஆண்டு இறுதியில் உருவாக்கினேன். அதுதான் 'சித்தாரா'. SITARA - Software for Integrated Trajectory Analysis with Real Time Application. ஒரு ராக்கெட் பற்றிய முழு விபரங்களையும் டிஜிட்டலாகச் சேகரித்து வைக்கும். அந்த விவரங்களின் அடிப்படையில் ராக்கெட் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை ராக்கெட் ஏவப்படும் முன்னரே கணித்துவிடலாம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கல்லை நாம் ஒரு குளத்தினுள் தூக்கி வீசுகிறோம். அந்தக் கல் எந்தத் திசையை நோக்கிப் போகிறது. எந்த டிகிரியில் செல்கிறது. எவ்வளவு நேரத்தில். எவ்வளவு அழுத்தத்தில் அந்தக் கல் விழுகிறது? என அனைத்தையும் சிமிலேசனாகப் பார்த்துவிடலாம்.

sivan working still
sivan working still

அப்படி ஒரு ராக்கெட்டின் முழு இயக்கத்தையும் சிமிலேசனாகத் சித்தாராவில் பார்த்துவிட முடியும். ராக்கெட்டில் எந்தப் பாகத்தில் என்ன தவறு நடந்தாலும் சித்தாரா காட்டிக்கொடுத்துவிடும். உடனே சரி செய்யலாம். இந்தச் சித்தாராவைப் பயன்படுத்தித்தான் அன்று பி.எஸ்.எல்.வி-யை அனுப்பினார்கள். அன்று முதல் இன்று வரை நம் நாட்டில் ஏவப்படும் எல்லா செயற்கைகோள் ராக்கெட்டுகளும் நான் உருவாக்கிய 'சித்தாரா' செயலியைப் பயன்படுத்தியே விண்ணுக்கு அனுப்புகிறார்கள்.

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு என்னுடைய மிகப்பெரிய பங்களிப்பு என்று இதைத்தான் சொல்வேன். என் செல்லம் 'சித்தாரா.' சித்தாராவை உருவாக்கிய பின் என் முழு கவனத்தையும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் செலுத்தினேன். கிட்டத்தட்ட 1000-த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சேர்ந்து அதை உருவாக்கினோம்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒவ்வொரு ஸ்டேஜும் எப்படி இருக்க வேண்டும். முதல் ஸ்டேஜில் எந்தப் பாகம் விழ வேண்டும். அதற்கு அடுத்த பாகம் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும். இறுதியாக செயற்கைக்கோளை மட்டும் நிலையான பாதையில் எப்படி நிறுத்துவது? என எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இதை 'Sequence' என்று சொல்வார்கள். இதை எல்லாம் நாங்கள் திட்டமிட்டோம். இதை நான் மிகச் சுருக்கமாகச் சொல்லிட்டேன். ஆனால், இதையெல்லாம் சாத்தியப்படுத்த 12 வருடங்கள் ஆகின.

இறுதியாக 1993-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி விண்வெளியில் பாய்ந்து தோல்வி அடைந்தது.

எங்கு தவறு நடந்தது என ஆராய்ந்தோம். மிகச் சிறிய தவறால்தான் அது தோல்வியைத் தழுவியது என்பதை நம்ப முடியாததாக இருந்தது. நம் கணிதத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு ஃபார்முலா வைத்திருப்போம். அப்படி ஒரு ஃபார்முலாவில் ஒரே ஒரு இடத்தில் ப்ளஸ்க்குப் பதில் மைனஸ் என இருந்திருக்கிறது.

இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால்தான் அந்த ராக்கெட் தோல்வியடைந்தது. இதை 'Software Over Flow' என்று சொல்வார்கள். அடுத்து இதை எல்லாம் சரி செய்தோம். அதன்பிறகு ஏவப்பட்ட அனைத்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளும் வெற்றிதான்” என்கிறார். ஒரு சிறிய தவறினாலோ, சின்ன நெகட்டிவ் விஷயத்தாலோ, நம் மீது வைக்கப்பட்டிருக்கும் மொத்த மதிப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகும் அல்லவா? அப்படித்தான் ராக்கெட்டிலும்போல! ஒரு மைனசால் மொத்த கனவும் தகர்கிறது. என்பதுபோல எனக்குத் தோன்றியது.

sivan
sivan

விஞ்ஞானத்தில் நாம் முன்னேறியிருந்தாலும், இயற்கையைக் கணிக்க முடியுமா? காற்றின் வீச்சுதான் சில ராக்கெட்டின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறது எனப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி சிவனிடம் கேட்டேன்.

``யெஸ்… இது மிகப்பெரிய பிரச்னைதான். வெகுசில சமயங்களில் ராக்கெட்டின் வெற்றி தோல்விகளைக் காற்றுதான் அதன் பக்கங்களில் காற்றைக்கொண்டே எழுதுகிறது. இங்கே 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய காற்று மேலே போகப்போக 70 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் அடிக்கும். அவ்வளவு வேகத்தை, அவ்வளவு அழுத்தத்தை ராக்கெட் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடும். இதற்குத் தீர்வு காண ஒரு ஆராய்ச்சி செய்தேன். `Day of Launch Wind Bias’ என்ற புதிய மென்பொருளை உருவாக்கினேன். தற்போது நாம் ராக்கெட்டை எந்தத் தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் ஏவலாம். நம்மால் காற்றைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நாம் உருவாக்கிய ராக்கெட்டை கட்டுப்படுத்த முடியும். ராக்கெட் பாயும்போதே அந்தக் காற்றின் வேகத்தை அறிந்துகொண்டு அதனுடன் இசைந்து கொடுத்துப் பறந்துபோகும். இப்போது நாம் எந்த நாளிலும், எவ்வளவு காற்று அடித்தாலும் ராக்கெட்டை ஏவமுடியும். இந்த `Day of Launch Wind Bias’ என்ற மென்பொருள் இன்றுவரை இந்திய விண்வெளித் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருளை நம் விஞ்ஞானிகள் ஒரு பெஞ்ச் மார்க் என்றே சொல்கிறார்கள். இதை நான் உருவாக்கியதால் எனக்குக் கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும்கூட” எனப் புன்னகைக்கிறார்.

என் ஒவ்வொரு கேள்விக்கும் ஆச்சர்யமான பதிலைத் தந்துகொண்டிருந்தார் சிவன்.

``ஜி.எஸ்.எல்.வி-யில் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?’’ எனக் கேட்டேன் இன்னும் அந்தக் காற்றைக் கணிக்கும் மென்பொருள் பிரமிப்பிலிருந்து மீளாததால் சுருக்கமாக என் கேள்வியை முடித்துக்கொண்டேன்.

``அது ஜி.எஸ்.எல்.வி (Geosynchronous Satellite Launch Vehicle) தொடர் தோல்வி அடைந்த சமயம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இனி வேலைக்காது என விஞ்ஞானிகள் வெறுத்துப்போய்விட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் நான் அந்த புராஜெக்ட்டில் சேர்ந்தேன்.

(எதையோ யோசித்தவர்) ``நீங்கள் பழைய சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா? சிவாஜி நடித்த `சரஸ்வதி சபதம்’ பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டார். சம்பந்தமே இல்லாமல் சினிமா பக்கம் ஏன் தாவுகிறார் என்ற யோசனையிலேயே…

90-ஸ் கிட்ஸ் ஆகிய நான். அந்தப் படத்தை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். `பார்த்திருக்கேன் சார். அதுல சிவாஜி நடிப்பு பிரமாதமா இருக்கும்’’ எனச் சொன்னேன்.

``சிவாஜி நடிப்பு எப்போதுமே பிரமாதமாகத்தான் இருக்கும். சரி, இந்தப் படத்தில் ஒரு காட்சி வரும். `வீரமே இல்லாத ஒருவனை வீரனாக மாற்றிக்காட்டுவேன்’ எனச் சபதம் எடுத்த தேவி அப்படி ஒருவனை மாற்றியும் காட்டுவார்.

ஒரு மல்யுத்தம் நடக்கும்போது ஒரு நோஞ்சானை திடீரென உள்ளே அனுப்பி சண்டைபோட வைப்பார். இறுதியில் அவன் தேவியின் ஆசி பெற்று வீரம் பெற்று வெற்றி பெறுவான். அப்படித்தான் நோஞ்சானாக இருந்த என்னை ஜி.எஸ்.எல்.வி புராஜெக்ட்டில் இணைத்தார்கள். நானும் எப்படியோ ஆரம்பத்திலிருந்து அரிச்சுவடி படித்து நீந்தி மேலே வந்துவிடுவேன்” எனச் சிரிக்கிறார்.

sivan
sivan

சிவனிடம் இதுவரை பேசியதில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. அவர் கடின உழைப்பால் தன் தகுதியையும் திறனையும் வளர்த்துக்கொண்டவர். அதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. நாமும் பின்பற்ற வேண்டிய குணாதிசயம்.

`ஜி.எஸ்.எல்.வி புராஜெக்ட் மீண்டும் தொடங்கிய சமயம். என்னை இந்த ராக்கெட்டுக்கு கான்பிகரேசன் (configuration) எழுதச் சொன்னார்கள். நாம் ஒரு செல்போன் வாங்கும்போது அது எவ்வளவு ரேம், எவ்வளவு மெமரி, கேமரா எவ்வளவு மெகா பிக்ஸல்? என மொபைலின் மொத்த கான்பிகரேசனையும்தான் முதலில் கவனிப்போம். அப்படி ஜி.எஸ்.எல்.வி-க்கு முதன்முதலில் கான்ஃபிகரேசன் எழுதியது நான்தான். அதன்படிதான்

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் இப்போதும் இயக்கப்படுகின்றன.

பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள்… பரிசோதனைகளுக்குப் பிறகு, ஜி.எஸ்.எல்.வி 2001-ம் ஆண்டு முதன்முதலில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் கீழே உள்ள பாகம் மட்டும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதற்கு மேல் உள்ள பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டது. இந்த ராக்கெட் முதல்முறை ஏவப்பட்டபோது வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே கிடைத்தது.” என்றவர் என்னை சந்தேகப்பார்வையில் ``உங்களுக்கு புரியலைதானே?” எனக் கேட்டார்.

``புரிஞ்சுடுச்சு சார். வெற்றிகரமான தோல்வினு சொல்ல வர்றீங்க. சரிதானே?” என்றேன். சிரித்துக்கொண்டே தலையசைத்து ஆமோதித்தார்.

``நீங்க நல்ல தரமான வாகனத்தைத் தயாரித்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்கிறீர்கள். ஆனால், விழுப்புரம் போகும் வழியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிட்டது. அடுத்து என்ன ஆகும்? பாதி வழியிலேயே வண்டி நின்றுவிடும்தானே. அப்படித்தான் போதுமான எரிபொருள் இல்லாதததால் மேலே சென்றுகொண்டிருந்த ராக்கெட் பாதியிலேயே கீழே விழுந்துவிட்டது.

அடுத்து வருடமே இதை எல்லாம் சரி செய்து ஏவப்பட்ட ஜி.எல்.எல்.வி டி-2 சக்சஸ். அதன்பின் 2004-ம் ஆண்டு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி F02 தோல்வி அடைந்தது. காரணம் என்னவென்றால், ராக்கெட்டின் அடிப்பகுதியில் நான்கு பெரிய உருண்டையான என்ஜின் இருக்கும். அது நான்கும் ஒரே மாதிரி விசையுடன் ஏவுதளத்திலிருந்து கிளம்ப வேண்டும். ஆனால், அதில் ஒரு என்ஜின் ஏதோ கோளாறினால் இயங்கவில்லை. பறக்கத்தயாரான 55-வது விநாடியிலேயே அது தோல்வி அடைந்தது.

ஏன் அந்தக் கோளாறு ஏற்பட்டது என ஆராய்ந்தோம். ராக்கெட்டின் அடிப்பகுதியில் உள்ள அந்த நான்கு என்ஜினையும் `Engine Gym Ball Control Sysytem’ என்று சொல்வார்கள். அது சில டிகிரி திரும்பியிருந்திருக்கிறது. அதை `Angle of Attack’ என்று சொல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குச் சென்ற பிறகு அதனுடைய திசை வேறுபடுகிறது. நான்கு ஜிம் பால்தான், இந்த ராக்கெட்டின் தோல்விக்கு முக்கியமான காரணம் எனக் கண்டுபிடிக்கிறோம். இந்த `Engine Gym Ball Control System’ எட்டு டிகிரி திருப்பி ஆராய்ச்சி செய்யலாம் என நான் முடிவெடுத்தேன். சில விஞ்ஞானிகள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், ஆய்வின் முடிவில் 8 டிகிரி திருப்புவதாக அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். நான் செய்த சின்ன மாற்றத்தால் அடுத்து ஏவப்பட்ட 700 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாகப் பாய்ந்தது. இதுவும் என் கரியரில் பெஸ்ட் எனச் சொல்வேன். இது வெற்றி பெற்றதும் என்னை வேறு புராஜெக்ட்டுக்கு மாற்றினார்கள்” என்றவரிடம், ``நீங்கள் ஒரு விஷயத்தில் சாதனை செய்தபின், உடனே அடுத்த புராஜெக்டுக்கு உங்களை மாற்றுவதால் உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறதா?’’ எனக் கேட்டதும் சிரித்தார்.

விகடன் விருது பெற்றபோது
விகடன் விருது பெற்றபோது

```கையளவு கொடுத்தாலும் கலங்க மாட்டேன். கடல் அளவு வந்தாலும் கலங்க மாட்டேன்'. `மெல்ல மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தைக் கூட சாப்பிடலாம்’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படி எதுக்கொடுத்தாலும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வேலை செய்யும் மனப்பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் என்னிடம் இருக்கிறது. ஒரு சாதனை செய்துவிட்டு அதை நினைத்தே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால் இன்னொரு சாதனையைச் செய்யவே முடியாது. பூஜ்ஜியத்திலிருந்து நூறை அடைந்து பின்னர், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து நூறைத் தொட்டுப்பாருங்கள். அதன் ருசி தனி. அதுதான் உண்மையான வளர்ச்சி” என்று சொன்னவர்.

எங்களை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் பார்த்திராத ஒன்றை அங்கு பார்த்தோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு