Published:Updated:

மயில்சாமி, சிவன், வனிதா... சந்திரயான் உருவாக்கத்தில் விண்ணைத் தொட்ட தமிழர்கள்!

எம்.குமரேசன்

சந்திரயான் வெற்றிக்கு தமிழர்கள் மட்டுமல்ல; தமிழ் மண்ணும் கூட உதவியாக இருந்துள்ளது.

மயில்சாமி அண்ணாதுரைக்கு கட் அவுட்
மயில்சாமி அண்ணாதுரைக்கு கட் அவுட்

சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமே கட்-அவுட் வைக்கும் தமிழ்நாட்டில், திடீரென்று விஞ்ஞானி ஒருவருக்கு கட்அவுட் முளைத்தது. அதுவரை, அந்த விஞ்ஞானியின் பெயரைக்கூடப் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். கட்-அவுட் வைக்கப்பட்ட விஞ்ஞானி வேறு யாருமல்ல... 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவிய மயில்சாமி அண்ணாதுரைதான். சந்திரயான்-1 வெற்றி பெற்றதும், அவரின் சொந்த ஊரான கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள கோதவாடியில் அவரை வாழ்த்தி கட்அவுட் வைக்கப்பட்டது.

மயில்சாமி அண்ணாதுரைக்கு கட்- அவுட்
மயில்சாமி அண்ணாதுரைக்கு கட்- அவுட்

மயில்சாமி விதைத்த விதை இன்று சிவன் வழியாக சந்திரயான் - 2 என நிலவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. இருவருமே அரசுப் பள்ளியில் படித்து, இஸ்ரோவின் முக்கிய பதவிகளை எட்டியவர்கள். சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

சந்திரயான், சந்திரயான் என்று இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள். சந்திரயான் - 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார் என்றால், சந்திரயான்- 2 ஏவும் போது இஸ்ரோவுக்கே தமிழர் சிவன்தான் தலைவர். தற்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான் - 2 திட்ட இயக்குநராக இருந்தவர் ஒரு பெண். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். பெயர்... வனிதா முத்தையா. வனிதா சென்னையைச் சேர்ந்தவர்.

வனிதா முத்தையா
வனிதா முத்தையா

மயில்சாமி அண்ணாதுரைதான் வனிதாவுக்கு இன்ஸ்பிரேஷன். இஸ்ரோவில் திட்ட இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சந்திரயான்- 2 குழுவில் பணியாற்றியவர்களில் 30 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய ஏவப்பட்ட 'மங்கல்யான்' விண்கலத்தின் உருவாக்கத்திலும் வனிதாவின் பங்களிப்பு உண்டு. 2006-ம் ஆண்டு 'அஸ்ட்ரானாடிகல் சொஸைட்டி' என்ற அமைப்பு இவரை சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்வு செய்தது. இஸ்ரோவில் ஜூனியர் இன்ஜீனியராகச் சேர்ந்து இன்று இத்தகைய உயரத்தை எட்டியுள்ளார் வனிதா.

தமிழர்கள் மட்டுமல்ல; தமிழ் மண்ணும் கூட சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 'அனார்தஸைட்' (Anorthosite) என்ற மண் துகள்கள் நிரம்பியுள்ளன. சந்திரயான்-1 ஆய்வின் போது இத்தகவல் தெரிய வந்தது. நிலவில் உள்ள மண் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

இந்த கிராமங்களிலிருந்து 50 டன் அனார்தஸைட் மண் எடுக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மண் அனுப்பும் பணியை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் செய்தது. இஸ்ரோ தலைமையகத்தில் நிலவு போன்றே சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்பட்டு, சந்திரயான்- 2 தரையிறக்கப்பட்டு லேண்டர், ரோவர் கருவிகளை அனார்தஸைட் மண் பரப்பில் ஓட விட்டும் விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர்.

இத்தோடு தமிழகத்தின் பங்களிப்பு முடிந்து விடவில்லை. நிலாவுக்கு சந்திரயானை கொண்டுச்சென்ற ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 மிகவும் பிரமாண்டமான ராக்கெட். இதனால், பாகுபலி ராக்கெட் என்ற செல்லப் பெயரும் சூட்டப்பட்டது.

பாகுபலி ராக்கெட்
பாகுபலி ராக்கெட்

இந்த பாகுபலி ராக்கெட்டை உருவாக்க சேலம் இரும்பு உருக்காலைதான் ஸ்டெயின்லெஸ் இரும்பு சுருள்கள் தயாரித்து வழங்கியது. சந்திரயான்- 2 வெற்றியின் பின்புலத்தில் தமிழர்களும், தமிழ் மண்ணும் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே!