Published:Updated:

ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு! - நிறுத்திவைக்கப்பட்ட சந்திரயான்- 2

ஞா.சுதாகர்
மு.ராஜேஷ்

ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சந்திரயான்- 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டத்தை நிறுத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

கவுண்டவுன் நிறுத்தம்
கவுண்டவுன் நிறுத்தம்

2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலமானது, நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு சந்திரயான் 2 திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது அன்றைய காங்கிரஸ் அரசு. அன்று முதல் கடந்த பத்து ஆண்டுகளாக சந்திரயான் 2 விண்கலனைத் தயாரிப்பதற்கும், அதை விண்ணில் செலுத்துவதற்கும் பல்வேறு சவால்களைக் கடந்து இயங்கிக்கொண்டிருந்தது இஸ்ரோ.

சந்திரயான் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர்.
சந்திரயான் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர்.
ISRO / Twitter

அதன் பலனாக சந்திரயான் 2 பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன், கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி இன்று அதிகாலை சரியாக 2:51 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம், GSLV MK III ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்திரயான்-2 விண்கலம், புறப்படுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் ஜூலை 14ம் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில் ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரோவின் ட்வீட்
இஸ்ரோவின் ட்வீட்

இதுவரைக்கும் நிலவில் கால்பதித்த எந்த நாடுமே, அதன் தென்துருவத்திற்கு சென்றதில்லை. ஆனால், இந்தியா சந்திரயான்- 2 மூலம் இந்தியா அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில் தண்ணீர் இருந்ததை ஏற்கெனவே சந்திரயான் 1 உறுதிசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து மேலும் விரிவாக ஆராய்ச்சி செய்யவிருக்கிறது சந்திரயான் 2. இதற்காக பிரக்யான் என்னும் ரோவர் மற்றும் விக்ரம் என்னும் லேண்டர் இரண்டும் சந்திரயான் 2-வில் இடம்பெற்றுள்ளன. இதுவரைக்கும் இந்தியா செய்திடாத ஒரு முயற்சி என்பதாலும், விண்வெளித் துறையில் மிகவும் சவாலான முயற்சி என்பதாலும் சந்திரயான் 2 மீது அதிக அளவு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?