Published:Updated:

101 வயதில் மரணித்த `மனிதக் கணினி!' - நாசாவின் இந்தக் கணிதப் புலி யார் என்று தெரியுமா?

இனப் பாலின வேறுபாடுகள் கடந்து சாதித்தவர். இவர் இல்லையென்றால் நாசாவின் ஆரம்பகட்ட சாதனைகள் இல்லை.

நாசாவின் கணித நிபுணரான கத்தரீன் ஜான்சன் நேற்று முன்தினம் மரணமடைந்தார். 101-வது வயதில் இயற்கை எய்திருக்கும் இவருடைய கணக்கீட்டின்படிதான் நாசாவால் முதன்முதலாக விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்ப முடிந்தது. இவருடைய பல்வேறு சாதனைகளில் முதன்மையானது, ஆலன் செபர்டினுடைய 1961 சப்-ஆர்பிட்டல் விமானத்துக்கு (sub-orbital flight) பாதையைப் பகுப்பாய்வு செய்தது.

அமெரிக்க விண்வெளி வீரர், முதன்முதலாக இதில்தான் விண்வெளிக்குச் சென்றார். கத்தரீனின் 33 வருட அனுபவத்தில் இன்னும் பலமுறை விண்வெளியில் அமெரிக்காவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். இதில் நிலவில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் சாதனையும் அடங்கும். இவருடைய சாதனைகள் எதுவும் உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை.

நாசாவில் சேர்வதற்குமுன் 1953-ல் இவர் NACA-வின்(National Advisory Committee for Aeronautics) தனிப்பிரிவில் சக கறுப்பினப் பெண் கணித நிபுணர்களுடன் பணிபுரிந்தார். இதனால் இவர் நாசாவில் சேர்வதற்கு முன்னரே இவருடைய வேலை அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. பூமியின் சுற்று வட்டப்பாதைக்குச் சென்ற முதல் அமெரிக்க விண்வெளி வீரரான ஜான் க்ளென், விமானம் ஏறுவதற்கு முன் கணினியின் கணக்கையே இரண்டு முறை ஜான்சனை வைத்துதான் சரிபார்த்தார்.

1961 சப்-ஆர்பிடல் விமானம்
1961 சப்-ஆர்பிடல் விமானம்
NASA

கத்தரீன் ஜான்சனின் மரணத்தைப் பற்றி நாசாவின் நிர்வாகி ஜிம் ப்ரைட்ஸ்டைன் கூறுகையில் ``அமெரிக்கத் தேசத்துக்கு கத்தரீன் செய்த உதவி மிகப்பெரியது. இவரது சாதனைகளால் அனைத்து நிறப் பெண்களுக்கும் வாய்ப்புக் கதவுகள் திறந்தன. இவருடைய அர்ப்பணிப்பும் திறமையும்தான் மனிதன் நிலவில் கால் வைக்கப் பெரிதும் உதவியாக இருந்தது. விரைவில் செவ்வாய் வரை நாம் பயணிக்கவிருக்கிறோம். ஆனால், முதன்முதலாக விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கால்தடம் பதிக்க கத்தரீன்தான் முக்கியக் காரணமாக இருந்தார்" என்று புகழ்ந்தார்.

கத்தரீனின் பங்கு 2015-ல்தான் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது இருந்த அதிபர் ஒபாமாவிடமிருந்து உயரிய சிவில் விருதான `Presidential medal of freedom' விருதை அவர் பெற்றார். இவரது கதையை மையமாகக் கொண்டு 2016-ல் `Hidden Figures' என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. பின்னர் அது ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இவரைக் கவுரவிக்கும் வகையில் 2017-ம் ஆண்டு ஒரு கட்டடத்துக்கு இவரது பெயரைச் சூட்டியது நாசா. ``உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யுங்கள். ஆனால், விரும்பிச் செய்யுங்கள். உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அது வெட்கத்துக்குரியது" என்று அந்தக் கட்டடத்தில் பணிபுரியவிருந்த இளம் பொறியாளர்களுக்கு அறிவுரை சொன்னார் கத்ரீன். இது அவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இளைஞர்களும் கேட்டுக்கொள்ளவேண்டிய அறிவுரை.

'Hidden Figures' திரைப்படம்
'Hidden Figures' திரைப்படம்

கத்தரீன் ஜான்சனுக்கு விருது அளிக்கும்போது ஒபாமா ``உங்களுடைய வேலை மிகவும் அழுத்தம் நிறைந்ததாக இருப்பதாக எண்ணினால் கத்தரீன் ஜான்சனின் வேலையை நினைத்துப் பாருங்கள். ஒற்றை எண்ணைத் தவறவிட்டால் சூரியக் குடும்பத்தில் எங்கோ ஒருவர் மிதக்கக்கூடும். கத்தரீன், இன மற்றும் பாலினப் பாகுபாடுகளைத் தாண்டி ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். கணிதத்திலும் அறிவியலிலும் சாதிக்க முடியும் என இன்றைய இளம் தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர் இவர்" என்று கத்தரீனின் பெருமை பாடினார்.

Katherine Johnson
Katherine Johnson
NASA
இப்போது அவர் மறைந்துவிட்டாலும், அவரது உழைப்பால் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்றும் இந்த உலகில் இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு