Published:Updated:

'சந்திரயான் 2 தோல்வியடைந்தது இதனால்தான்!' மீண்டும் நிலவில் தரையிறங்கத் திட்டமா?!

கடைசி நிமிடத்தில், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது.

சந்திரயான் 2
சந்திரயான் 2

சந்திரயான் 2 விண்கலம், இந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிக்கொண்டிருக்கும்போது, பூமியுடனான தனது இணைப்பை இழந்தது. நிலவின் தென்துருவப் பகுதிக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், இலக்கிற்கு 500 மீட்டர் தூரத்தில் இருக்கும்போது, இஸ்ரோ கண்காணிப்பு மையத்துடனான தொடர்பை இழந்தது. சோதனையில் நல்ல முறையில் இயங்கிய விக்ரம் லேண்டரின் தொழில்நுட்பத்தில் திடீரெனப் பழுது ஏற்பட்டது, இஸ்ரோ விஞ்ஞானிகளே எதிர்பார்க்காத நிகழ்வாக அமைந்தது. இந்நிலையில், இந்தப் பழுதிற்கான காரணத்தைத் தற்போது இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திராயன் - 2
சந்திராயன் - 2

விக்ரம் லேண்டர், 30 கிலோமீட்டரிலிருந்து 5 கிலோமீட்டர் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் கீழிறங்கியது. இந்த ரஃப் பிரேக்கிங்கிற்குப் பிறகுதான், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், தரையிறங்குதலில் இறுதிக் கட்டமான 'ஃபைன் பிரேக்கிங்கில்' ஒரு த்ரஸ்டரை மட்டுமே கொண்டு இயங்கியுள்ளது. இதன் காரணமாக, லேண்டரின் வேகம் ஒரு மணித்துளிக்கு 146 மீட்டராகக் குறைந்துள்ளது . இதனால் திசைமாறிப்போன லேண்டர், குறிப்பிட்ட தரையிறங்கும் பகுதியிலிருந்து 750 மீட்டர் தள்ளிச் சென்று செயலிழந்திருக்கிறது. தரை இறங்குதலில் ஏற்பட்ட விபத்து காரணமாக, லேண்டரில் உள்ள இயந்திரம் பழுதடைந்து பூமியுடனான இணைப்பை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

`சந்திரயான் 2' தரையிறங்கும் முன்பு சைபர் தாக்குதலா?- எச்சரித்த சைபர் ஒருங்கிணைப்பு மையம்!

Liquid Propulsion System Centre இயக்குநர் வி.நாராயணன் தலைமையிலான இஸ்ரோவின் குழு, நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து இத்தகவல்களை அளித்துள்ளது. இதற்காக இக்குழு, நாசாவிடமிருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது . இந்தத் தவறுகளை எல்லாம் சரிசெய்து, அடுத்த ஆண்டு நவம்பருக்குள் சந்திரயான் 2- வை விண்ணில் செலுத்தும் முனைப்பில் இஸ்ரோ நிறுவனம் செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய லேண்டரையும் ரோவரையும் வடிவமைத்து, அவற்றை ஏற்கெனவே நிலவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டரோடு இணைக்க முடிவெடுத்துள்ளது இஸ்ரோ.

இதற்கிடையில், சந்திரயான் -2 விண்கலம் நிலவின் மேற்பரப்பை முப்பரிமாண வடிவில் (3D) படமெடுத்து அனுப்பியுள்ளது. இஸ்ரோ, கடந்த புதன் அன்று இந்த முப்பரிமாணப் படங்களை வெளியிட்டது. இதைப் பற்றி இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தது.