Published:Updated:

விண்வெளியில் படமாக்கப்படவுள்ள முதல் திரைப்படம்... நாசாவுடன் இணையும் டாம் க்ரூஸ்!

டாம் க்ரூஸ்
டாம் க்ரூஸ்

இதற்கு முன்னர் விண்வெளியில் பல்வேறு ஆவணப் படங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முழு நீளத் திரைப்படமானது இப்போதுதான் முதன்முதலாக எடுக்கப்படவுள்ளது.

திரைப்படங்கள் பொதுவாக நிலத்திலும், கடலிலும் அல்லது ஆகாயத்திலும் படமாக்கப்படும். இந்த முறை சற்றே வித்தியாசமாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்று விண்வெளியில் படமாக்கப்படவுள்ளது.

ஆம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா டாம் க்ரூஸை வைத்து விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்தை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி நாசா நிர்வாகி ஜிம் ப்ரைடென்ஸ்டைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் "டாம் க்ரூஸுடன் இணைந்து விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட நாசா உற்சாகமாக உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கும் மக்களுக்கும் மீண்டும் விண்வெளி ஆராய்ச்சி மேல் ஈர்ப்பு ஏற்படும். நாசாவின் திட்டங்களை எதிர்காலத்தில் உண்மையாக்க அவர்களை இது ஊக்குவிக்கும் என நம்புகிறோம்" என்றார்.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம்
ESA

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிக்கும் இந்தத் திரைப்படமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டாம் க்ரூஸ் திரையில் தனது சாகசங்களுக்குப் பெயர் போனவர் இவர். 2015-ல் வெளிவந்த 'Mission impossible - Rogue Nation' திரைப்படத்தில் ஏர்பஸ் A400 ரக விமானத்தில் ஸ்டன்ட் செய்து அசத்தினார். அதனால் விண்வெளியில் எந்த மாதிரியான சாகசத்தில் ஈடுபடவுள்ளார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்னர் 1986-ல் வெளிவந்த இவரது 'Top Gun' திரைப்படத்திற்காக அமெரிக்கக் கப்பல் படை உதவி செய்தது. இதன் அடுத்த பாகமான 'Top Gun: Maverick' இந்த வருடம் வெளிவரவுள்ளது. இதற்கும் அமெரிக்கக் கப்பல் படை உதவி செய்துள்ளது. இதற்கு முன்னர் விண்வெளியில் பல்வேறு ஆவணப் படங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முழு நீளத் திரைப்படமானது இப்போதுதான் முதன் முதலாக எடுக்கப்படவுள்ளது.

`பூமியே சிறிய புள்ளியாகத் தெரியும் புகைப்படம்!' - 30 ஆண்டுகளுக்குப் பின் புதிப்பித்து வெளியிட்ட நாசா

இந்தத் திரைப்படத்திற்காக டாம் க்ரூஸ் Space X நிறுவனத்துடன் வேலை செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதைப்பற்றி இதுவரை Space X நிறுவனமும், நாசாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எலான் மாஸ்க்கின் இந்த விண்வெளி நிறுவனம் பிப்ரவரி மாதமே நான்கு தனியார் குடிமக்களைப் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தது. இது 2021 இறுதியிலோ அல்லது 2022 தொடக்கத்திலோ நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது. இந்தப் பயணிகள் ஸ்பேஸ் எஃக்ஸின் புதிய Crew Dragon spacecraft-ல் விண்வெளி செல்லவுள்ளனர். இதற்கு முன் இந்த விண்கலமானது மே மாத இறுதிக்குள் நாசாவின் விண்வெளி வீரர்களுடன் செல்லவுள்ளது.

இதோடு விண்வெளியில் எடுக்கப்படும் திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என நாசா அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் ஜிம் ப்ரைடென்ஸ்டைனின் பதிவிற்கு Space X முதன்மை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் ரிப்ளை செய்து இது செம கலாட்டாவாக இருக்கப்போகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு