Published:Updated:

Lunar Eclipse: 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சந்திர கிரகணம்... இந்தியாவில் பார்க்க முடியுமா?

தற்போது நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியவில்லை என்றாலும், அடுத்ததாக இந்த ஆண்டு நவம்பர் 19-ல் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும்.

2019 ஜனவரி மாதத்திற்குப் பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து முழுமையான சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.

வரும் மே 26 அன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இது கடந்த ஆண்டு நிகழ்ந்ததைப் போலப் பகுதியாக இல்லாமல் முழுமையான சந்திர கிரகணமாக நிகழவிருக்கிறது. நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்படி நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது, அது முழுமையாகச் சூரியனில் இருந்து வரும் கதிர்களை நிலவின் மீது விழாமல் தடுத்து பூமியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும். இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவிருக்கின்றன. அதில் முதல் சந்திர கிரகணம் தற்போது நிகழவிருக்கிறது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்
svs.gsfc.nasa.gov

இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி காலை 2.17 மணிக்குத் தோன்றி இரவு 7.19 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா. இந்தியாவில் இருப்பவர்களால் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாது. கிழக்கு ஆசிய, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அமெரிக்காவில் இருப்பவர்களால் மட்டுமே இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணத்தின் போது தெரியும் நிலவு 'Super Blood Moon' எனவும் அழைக்கப்படுகிறது.

ஜூலை 5 சந்திர கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?
சந்திர கிரகணம் தென்படும் பகுதிகள் மற்றும் நேரம்
சந்திர கிரகணம் தென்படும் பகுதிகள் மற்றும் நேரம்
svs.gsfc.nasa.gov

சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் என்பதால் அது 'Blood Moon' என்று அழைக்கப்படுகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியை 'பெரிகீ' (Perigee) என்றழைக்கின்றனர். இந்தப் புள்ளியில் நிலவு வரும் போது அது வழக்கத்தை விடக் கொஞ்சம் பெரிதாகவும், வெளிச்சமாகவும் இருக்கும். இப்படி நிலவு தோன்றுவதை 'Super Moon' என்றழைக்கின்றனர். இந்தச் சந்திர கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் நிலவு பெரிகீ புள்ளியில் இருக்கும். இதனால் வழக்கத்தை விட 7.7 சதவிகிதம் பெரிதாகத் தெரியும். எனவே தான், இந்த சந்திர கிரகணத்தில் தோன்றும் நிலவை 'Super Blood Moon' என்றழைக்கின்றனர்.

தற்போது நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியவில்லை என்றாலும், அடுத்ததாக இந்த ஆண்டு நவம்பர் 19-ல் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும். ஆனால், அது முழுமையான சந்திர கிரகணம் இல்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு