Published:Updated:

Venus-ல் அரிய வாயு... தகிக்கும் வெப்பத்திலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா?! #Explainer

வெள்ளி | Venus
News
வெள்ளி | Venus

'இப்படியான கிரகம் ஒன்று அருகில் இருக்கையில் அதை விட்டுவிட்டு சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உயிர்கள் இருக்கிறதா என்று தேடியிருக்கிறோமே' என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

`இவ்வளவு பெரிய பேரண்டத்தில் `பூமியில் மட்டும்தான் உயிர்கள் இருக்கின்றன' என்ற கூற்றுக்கு வாய்ப்பே இல்லை!'

இந்த அடிப்படையில்தான்... படங்களில் காட்டுவது போல் இல்லையென்றாலும் ஒற்றை செல் வேற்றுக்கிரக உயிர்களாவது நிச்சயம் எங்காவது இருக்கும் எனத் தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் பிற கேலக்ஸி கோள்களை எல்லாம் தேடிய நாம் அருகில் இருக்கும் வெள்ளியை (Venus) கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

வெள்ளி | Venus
வெள்ளி | Venus

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நச்சு வாயுக்கள் நிறைந்த வெள்ளியின் வளிமண்டலத்தில் உயிர்கள் இருப்பதற்கான முதல் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளதாக நேற்று அறிவித்திருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு இன்னும் தெளிவுபட உறுதிசெய்யப்பட்டுவிட்டால் செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கொடுக்கும் கவனத்தையும் ஒதுக்கும் பணத்தையும் இனி வெள்ளிக்கும் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டாவது கோள் வெள்ளி. சில நூறு டிகிரியில் தகிக்கும் வெப்பம், நச்சு வாயுக்கள், கந்தக அமிலம் (sulfuric acid) நிறைந்த மேகங்கள் என உயிர்கள் வாழ வாய்ப்பே இல்லாத கிரகமாகக் கருதி பல காலமாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கிவைத்த கிரகம் வெள்ளி. மற்ற கிரகங்களில் இருக்கும் உயிர்களைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு பின்னிருக்கும் கோள்களில் குறிப்பாகச் செவ்வாய் மற்றும் அதன் நிலவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதே அளவிலான முயற்சிகள் நமக்கு முன்னால் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன், வெள்ளி கிரகங்களில் மேற்கொள்ளப்படவில்லை.

Venus, Earth
Venus, Earth

இப்போதும் யாரும் நேரடியாக வெள்ளியில் நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறியவோ அவற்றை இங்கிருந்து படமெடுக்கவோ இல்லை. ஆனால், சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் 'Phosphine 'என்னும் ரசாயன வாயு வெள்ளியின் வளிமண்டலத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தின் கார்ஃடிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேன் க்ரீவ்ஸ் மற்றும் குழுவினர் இந்தக் கண்டுபிடிப்பை வைத்துத்தான் வெள்ளியில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதென நேற்று ஒரு குட்டி ஆய்வறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றனர். சரி Phosphine-க்கும் உயிர்களுக்கும் என்ன தொடர்பு, இதை வைத்து வெள்ளியில் உயிர்கள் இருக்கிறதென எப்படிச் சொல்கிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனிதர்களுக்குத் தெரிந்த வரையில் இந்த ரசாயன வாயு, வாழும் உயிர்கள் இல்லாமல் இயற்கையாக உருவாகச் சாத்தியக்கூறுகளே இல்லை. அதனால் வெள்ளியில் நிச்சயம் எதோ ஒரு வடிவில் நுண்ணுயிர்களாவது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என இந்த ஆய்வின் முடிவின் மூலம் தெரிவிக்கின்றனர். இங்கு, Phosphine-ஐ நம்மைப் போன்ற உயிரினங்களின் குடல்களில் பார்க்கலாம், பென்குயின் மற்றும் சில உயிரினங்களின் கழிவுகளில் பார்க்கலாம், குடற்புழுக்களில் பார்க்கலாம். காற்றில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் பகுதிகளில் வாழும் உயிரினங்களிடத்தில் இதை அதிக அளவில் பார்க்கமுடியும். இது நச்சுத்தன்மை உடைய வாயுதான். இதைத் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்க முடியும். ராணுவங்கள் இதை வேதியியல் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

Phosphine (PH3)
Phosphine (PH3)
'Breaking Bad' தொடர் பார்த்தவர்களுக்கு 'Phosphine-ஆ, இத எங்கேயோ கேட்ருக்கோமே!' என்று தோன்றும். முதல் எபிசோடில் வால்டர் வைட் இந்த வாயு கொண்டுதான் இருவரைக் கொல்ல முயற்சி செய்வார்.

அதனால் இதைச் செயற்கையாக உருவாக்க முடியாது என்றெல்லாம் இல்லை. இதனால்தான் இந்த வாயு வெள்ளியின் இன்னும் பெரிதும் அறியப்படாத புவியியல் அமைப்பின் எதோ ஒரு விசித்திர தன்மையின் காரணமாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள். ஆனால், வெள்ளியில் இருக்கும் தட்பவெப்ப சூழலில் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு, அதுவும் இந்த அளவு அதிகமாக Phosphine இருக்கிறதென்றால் உயிர்களின் வேலையாகவே அது இருக்கக்கூடும் என்கின்றனர் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள்.

"இதை வைத்து உயிர்கள் இருக்கிறதெனச் சொல்வதை எங்களால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், இந்தக் கண்டுபிடிப்புக்கு வேறு எந்த விளக்கங்களும் தற்போது இல்லை!"
- பால் பிரியன், கோள் அறிவியல் விஞ்ஞானி, North Carolina State University

இந்நிலையில் வெள்ளியில் இந்த வாயு உருவாக வேறு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என அனைத்து கோணத்திலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த ஜேன் க்ரீவ்ஸ். "நாங்கள் தவறவிட்ட விஷயங்கள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். அதை ஊக்குவிப்பதற்கே எங்கள் ஆராய்ச்சியை மொத்தமாகப் பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது அவர் குழு. முதலில் ஹவாயில் இருக்கும் ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கி வழியாக வெள்ளியில் Phosphine இருப்பதைக் கண்டுபிடித்த இவரது குழு சிலியில் இருக்கும் ALMA ரேடியோ தொலைநோக்கி மூலம் இதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். வெள்ளியின் புவி மண்டலத்தில் 50-60 கிலோமீட்டர் உயரத்தில் இந்த Phosphine வாயுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இன்னும் சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தக் குழுவுக்கு கொரோனா சூழல் தடங்கலாக அமைந்திருக்கிறது.

ALMA ரேடியோ தொலைநோக்கிகள்
ALMA ரேடியோ தொலைநோக்கிகள்
Wikimedia Commons

என்னதான் இந்தக் கண்டுபிடிப்பு நேரடியாக வெள்ளியில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது ஒரு முக்கிய கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் இடையே எழுப்பியிருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பூமியில் இருப்பது போன்ற அதே தட்பவெப்ப சூழ்நிலைகளைக் கொண்டிருந்த ஒரு கிரகம் வெள்ளி. நீர் அதிக அளவில் வெள்ளியில் அப்போது இருந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. 70 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் கடல்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூமியும் வெள்ளியும் அளவிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கிரகங்கள்தான். 'இப்படியான கிரகம் ஒன்று அருகில் இருக்கையில் அதை விட்டுவிட்டு சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் கோள்களில் உயிர்கள் இருக்கிறதா என்று தேடியிருக்கிறோமே' என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நாசாவின் நிர்வாகத் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டீன் "வெள்ளிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது" என இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஆனால், வெள்ளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இப்போது Akatsuki என்ற ஜப்பானின் விண்கலம் ஒன்று மட்டும்தான் வெள்ளியைச் சுற்றிவந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நிலப்பரப்பில் தரையிறங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்வது என்பது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அடைய முடியாத இலக்காகவே இருந்துவருகிறது.

வெள்ளி (Representational Art)
வெள்ளி (Representational Art)
DETLEV VAN RAVENSWAAY/SPL

அதற்காக இதற்கு முன்பு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. சோவியத் ரஷ்யா 'Venera' என்ற தொடர் மிஷன்களில் வெள்ளிக்குப் பல விண்கலங்களை அனுப்ப முயற்சி செய்தது. ஆனால், அங்கு இருக்கும் வெட்பத்திலும், அமிலத் தன்மையிலும் உலோகங்கள் உருகிவிடும் என்பதால் எதுவுமே பெரிய வெற்றிகளைக் காணவில்லை. இரண்டு முறைதான் வெள்ளியின் நிலப்பரப்பைப் படம் பிடிக்க முடிந்திருக்கிறது. அதுவும் தரையிறங்கிய உடன் சில நொடிகளில் அனுப்பப்பட்டவை, அதன்பின் எப்படியும் அவை செயலிழந்துவிடும். வெள்ளியின் நிலப்பரப்பில் வெப்பம் என்பது 426 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அழுத்தம் என்பது பூமியில் இருப்பதை விட 90 மடங்கு அதிகம். அதாவது 3000 அடி நீரில் மூழ்கினால் எவ்வளவு அழுத்தம் இருக்குமா அவ்வளவு அழுத்தம் வெள்ளியின் நிலப்பரப்பிலேயே இருக்கும். இதனால்தான் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மிகவும் சவாலான கிரகமாக இருக்கிறது வெள்ளி. இதே காரணிகள்தாம் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பே இல்லை என்ற முன் முடிவுக்கு நாம் வர காரணமாகவும் இருக்கிறது.

ஆனால், நிலத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் உயரத்தில் இதே நிலை இல்லை. 30 டிகிரி செல்சியஸ் வெட்பம், கிட்டத்தட்டப் பூமியின் பரப்பில் இருக்கும் அதே அழுத்தம் என உயிர்கள் இருக்க ஏற்ற பகுதியாகவே இருக்கிறது. இதை வைத்து 53 வருடங்களுக்கு முன்பே சில விஞ்ஞானிகள் அங்கு உயிர்கள் இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றனர். கிட்டத்தட்ட இந்த உயரத்தில்தான் தற்போது Phosphine வாயு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் நிலை மோசமாக மோசமாக இந்த உயரத்திற்கு வந்திருக்கலாம் எனக் கணிக்கின்றனர். வெள்ளியின் வரலாறு பூமியின் வருங்காலத்தை எடுத்துக்கூற கூட வாய்ப்புகள் இருக்கின்றன.

செயலிழப்பதற்கு முன் Venera அனுப்பிய வெள்ளியின் படங்கள்
செயலிழப்பதற்கு முன் Venera அனுப்பிய வெள்ளியின் படங்கள்

இருந்தும் 75-95% கந்தக அமிலம் கொண்ட மேகங்களுக்கு நடுவில் உயிர்கள் இருக்க அவற்றுக்கென சிறப்பான குணாதிசயங்கள் இருக்க வேண்டும். பூமியில் அப்படி இருக்கும் நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இது முற்றிலும் சாத்தியமில்லை என நிராகரித்துவிட முடியாது.

ஆனால் ஒன்று, இந்தக் கண்டுபிடிப்பினால் விரைவில் வெள்ளிக்கு சில மிஷன்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இஸ்ரோ ஏற்கெனவே 2023-ல் வெள்ளியில் ஆராய்ச்சி செய்ய 'சுக்ரயான்' என்ற திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறது.