Published:Updated:

`தூர கிரகத்தில் நீர் கண்டுபிடிப்பு'- மனிதர்கள் குடியேற முடியுமா?!

பூ. நந்தினி
ம.காசி விஸ்வநாதன்

மனிதன் வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்டால் மாற்றுக் கிரகங்களுக்குக் குடிபெயர்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

k2-18b
k2-18b

இந்தியா நிலவில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் இதே வேளையில் உலகில் வானியல் ஆராய்ச்சிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டுகொண்டே இருக்கின்றன. பூமியைப் போன்று வாழ்வதற்கேற்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்டால் மாற்றுக் கிரகங்களுக்குக் குடிபெயர்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பூமியைப் போன்ற `சூப்பர் எர்த்' எக்ஸோ பிளானட் ஒன்றைச் சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

k2-18b
k2-18b
Inverse

பிளானட் K2 - 18b என்பது நம் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அந்தக் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அந்தக் கிரகத்தில் மனிதன் வாழ ஏதுவாக நீரும் காற்றும் இருப்பதாகத் தெரிவித்திருப்பது, வேற்றுக்கிரகத்தில் குடிபெயர்வதற்கான முயற்சியின் வித்தாக தென்படுகிறது. 2016, 2017 ஆண்டுகளில் நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, சூப்பர் எர்த் கிரகத்தின் காற்று மண்டலத்திலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் ஒளிக்கதிர்களையும் அளவில் கொண்டு தண்ணீரைக் கண்டறிந்தது. மற்ற சில வாழ்வியல் சாத்தியக்கூறுகளை அறிய நாசா புதிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமி போன்ற நீர் ஆதாரத்துடன் கூடிய மற்றொரு கிரகத்தைக் கண்டறிவது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பெரும் வியப்பாகவும் உள்ளது.
லண்டன் பல்கலைக்கழக முனைவர் அங்களோஸ் டீஸிஅரஸ்.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே தண்ணீர் திரவ நிலையில் இருக்கச் சரியான தட்ப வெப்பநிலை கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரே கிரகம், சூப்பர் எர்த் மட்டுமே. முதலில் நாசாவின் கெப்லர் தொலைநோக்கி மூலம் 2015-ம் ஆண்டு இந்தக் கிரகம் கண்டறியப்பட்டது. பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல் இந்த சூப்பர் எர்த் செந்நிற நட்சத்திரம் ஒன்றை 35 நாள்களில் ஒரு முறை சுற்றிவருகிறது. பாறைகள் நிறைந்த இந்தக் கிரகம் பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாகவும் எட்டு மடங்கு அதிக கனமானதாகவும் உள்ளது, பூமியைவிட குளிர்ச்சி நிறைந்ததாகக் காணப்படுகிறது. பூமியின் ஒரு மாத காலம் அங்கு ஒரு வருடமாகக் இருக்கும்.

k2-18b Distance
k2-18b Distance
Source: The Telegraph

நீர் இருப்பதாக அறியப்பட்டாலும் சூப்பர் எர்த்தில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், அந்தப் பகுதியில் நம்மைப் போன்ற மனிதர்கள் நடப்பதே பெரும்பாடாக இருக்கும். புற ஊதாக் கதிர்கள் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் தாக்குதல் கூட ஏற்படலாம். மேலும், 660 டிரில்லியன் மைல்கள் தொலைவிலுள்ள இந்தக் கிரகத்துக்குப் பயணிக்க 3.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம்.

துல்லியமாக அந்தக் கிரகத்தின் தன்மையை ஆராய லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு புதிய மென்பொருளைக் கண்டறிந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. ``சூப்பர் எர்த் கண்டுபிடிப்பு அறிவியல் உலகத்தின் அரிய கண்டுபிடிப்பு. சூரியக் குடும்பத்தைக் கடந்து வானியல் ரகசியங்களை வெளிக்கொணரும் முயற்சிகளின் தொடக்கம். இனிவரும் புதிய கண்டுபிடிப்பு நாள்களுக்கான மைல்கல்" என்கின்றனர், வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

அந்த 0.006 சதவீதத்தை விடுங்கள்... இன்னமும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது சிவன்! #Chandrayaan2