Published:Updated:

Comet NEOWISE: `பூமிக்கு அருகில் வரும் நியோவைஸ் வால்நட்சத்திரம்!' - பார்க்க முடியுமா?

`தமிழகத்தின் அமைவிடம் காரணமாக இதனை காண்பது சற்று கடினமான ஒன்று. ஒடிசா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பார்க்க வாய்ப்புள்ளது. வடக்கில் அமைந்திருக்கும் பல நாடுகளில் நியோவைஸ் மிகவும் ரம்மியமாகக் காட்சியளிக்கும்.’

பூமிக்கு அருகில் வரும் நியோவைஸ் (neowise) என்ற வால் நட்சத்திரத்தை சாதாரண தொலைநோக்கிகளால் பார்க்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். டி.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் நியோவைஸ் சிறப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள். பூமிக்கு அருகே நீள் வட்டப்பாதையில் வருவதால் இதனை பொதுமக்களும் சாதாரணமாகவும், ஃபைனாகுலர் வழியாகவும் பார்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

நியோவைஸ்
நியோவைஸ்

கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தற்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நியோவைஸ் வால்நட்சத்திரம் குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் பேராசிரியரும் பயனுறு அறிவியல் துறைத் தலைவருமான ச.ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் கூறுகையில்,``C/2020 F3 என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த நியோவைஸ் வால் நட்சத்திரம் அதிசயமான ஒன்று. பொதுவாக நட்சத்திரம் தன் ஒளிர்வை ஏற்படுத்தும் வான்பொருளாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், தன் ஒளி இல்லாத நியோவைஸ் வால் நட்சத்திரம், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி நியோவைஸ் என்ற விண்கலம் மூலம் கண்டறியப்பட்டதால், அது பேச்சுவழக்கில் அந்த பெயராலேயே அழைக்கப்படுகிறது. நியோவைஸ் விண்கலம் நாசா மூலம் அனுப்பப்பட்டது. இந்த நியோவைஸ் வால் நட்சத்திரம், பல்வேறு சிறிய கற்களாலும், பனிப்பாறைகளாலும், வாயுக்களால் சேர்ந்திருக்கிறது. ஈர்ப்பு விசை காரணமாக சூரியனையும், பூமியையும் நோக்கி நீள்வட்ட பாதையில் வருகிறது. நியோவைஸ் சுழற்சி முறையில் வரக்கூடிய ஒன்று.

ஸ்டீபன் ராஜ்குமார்
ஸ்டீபன் ராஜ்குமார்

இதனை வரும் ஆகஸ்ட் மாதத்தின் முக்கால்வாசி நாள்களில் பார்க்க முடியும். தற்போது, பூமியை நெருங்குவதால் இந்த வாரத்தில் சற்று தெளிவாகப் பார்க்க முடியும். குறிப்பாக இன்று (ஜூலை 22ம் தேதி) மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆனால், தமிழகத்தின் அமைவிடம் காரணமாக இதனை காண்பது சற்று கடினமான ஒன்று. எனினும், நியோவைஸை தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் பைனாகுலர் உதவியால் மிக நுண்ணிய அளவில் பார்த்துள்ளனர். ஒடிசா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பார்க்க வாய்ப்புள்ளது. வடக்கில் அமைந்திருக்கும் பல நாடுகளில் நியோவைஸ் மிகவும் ரம்மியமாகக் காட்சியளிக்கும். மேகம் சூழ்தல், ஒளி மாசு உள்ள இடங்களிலும் இதனை பார்ப்பது சிரமம். இந்த நியோவைஸ் வடமேற்கு திசையில் தனது துல்லியமான காட்சியை வழங்கும். இந்த வால் நட்சத்திரம் இரண்டு வால்களைக் கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

ஒன்று பனி உருகி வாயுவாக மாறும் போது புகை போல தெரிவதாலும், மற்றொன்று வாயு அயனிகளாக மாறுவதாலும் வால்போல காட்சியளிக்கிறது. இந்த வால்நட்சத்திரம் பூமி சூரியனை சுற்றுவதை விட இரு மடங்கு வேகமாக சுற்றிவரக் கூடியது. இந்த நிகழ்வு காரணமாக பூமிக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. அதனால் அச்சப்பட தேவையில்லை. ஒரு விந்தையான விசயம்தான் இந்த நியோவைஸ். வானில் ஒரு திருவிழா காட்சி போல அமையும். சூரியனுக்கு அந்தப் பக்கத்தில் இருக்கும்போது கண்டறியப்பட்டுள்ளது. இனி மீண்டும் சுமார் 6,766 ஆண்டுகளுக்கு பின்னர்தான் காண முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த நியோவைஸ் ஆச்சர்யமும் அற்புதமும் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது" என்றார்.

நியோவைஸ் ( வால் நட்சத்திரம்)
நியோவைஸ் ( வால் நட்சத்திரம்)

மேலும், மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பெ.சிவராமன் கூறுகையில்,``வானில் நிகழும் விந்தைகள் குறித்து மதுரை பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்குகிறேன். அதற்கான பிரத்தியேக கருவியாலும் அவர்களை நேரில் பார்க்க வைப்பேன். ஆனால், இந்த நியோவைஸ் வால் நட்சத்திரம் தற்போது பார்க்க முடியவில்லை என்றாலும், இணையத்தில் வெளியான கண்கள் நம்ப முடியாத புகைப்படங்களை மாணவர்களுக்கு அனுப்பி, அதன் சிறப்புகளைச் சொல்கிறேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு