Published:Updated:

``ஆறு மாதம்தான் பிளான், ஆனா இன்னும் இயங்கிகிட்டு இருக்கு!" - மயில்சாமி அண்ணாதுரை #6yearsofMangalyaan

மயில்சாமி அண்ணாதுரை
News
மயில்சாமி அண்ணாதுரை

மங்கள்யான் திட்டத்தின்போது இஸ்ரோ தலைவராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை மங்கள்யான் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய்க்கிரகத்துக்குத் தனது மங்கள்யான் செயற்கைக்கோளை 2013-ம் ஆண்டு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பியது. வளர்ந்து வரும் நாடுகளான சீனாவும் ஜப்பானும் செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் தோல்வியுற்றிருந்தாலும் இந்தியா வெற்றிகரமாக மங்கள்யானை விண்ணில் செலுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து அப்போதைய இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையைத் தொடர்புகொண்டு பேசினோம்.

மங்கள்யான்
மங்கள்யான்

"சவாலான ஒரு காலகட்டத்தில்தான் மங்கள்யானை விண்ணில் செலுத்தினோம். இந்த முயற்சி வெற்றி அடையுமா என்பது உறுதியாகத் தெரியாமல் ஒரு சோதனை முயற்சியாக ஆர்பிட்டர் மிஷனை ஆறு மாத காலத்துக்குத்தான் திட்டமிட்டோம். ஆனால், தற்போது ஆறு ஆண்டுகளைக் கடந்து ஆராய்ச்சி செய்துவருகிறது மங்கள்யான். இதற்குமுன் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-1 பெற்ற வெற்றி ஒருபுறம் நம்பிக்கை அளித்திருந்தாலும் மறுபுறம் அது அடுத்த திட்டமான மங்கள்யான் மீது அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அதனால் நிச்சயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன்தான் உழைத்தோம். இறுதியாகச் செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய, ஆசியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் செயற்கோள் என்னும் பெருமையை மங்கள்யான் பெற்றது. இந்த ஆராய்ச்சியில் முக்கிய அம்சமாகச் செவ்வாயின் நீள் வட்டப்பாதையில் பயணித்து, அதில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தது மங்கள்யான். தற்போது ஆறு ஆண்டுகளில் அங்கு நிலவும் வானிலை மாற்றங்கள், மழைக்கான வாய்ப்பு எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்துவருகிறது. மேலும், செவ்வாய்க்கிரகத்தில் அவ்வப்போது தூசிப்படலங்கள் தென்படுகின்றன. அங்கு ஸ்லைடிங்க் ஸ்பிரிங்க் (sliding spring) என்னும் விண்கற்கள் மோதினாலும் மங்கள்யானில் இருக்கும் தேவையான எரிபொருள் காரணமாகச் செயற்கைக்கோளுக்கு ஒன்றும் ஆகாது. இதற்கு முக்கிய காரணம் ஒன்பது மாதங்களில் துல்லியமாக செயற்கைக்கோளைச் சேவைக்கு அனுப்பியதுதான். இதனால் நிறைய எரிபொருளை எங்களால் சேமிக்க முடிந்தது” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும் அவர் கூறுகையில், "சூரியன் மற்றும் செவ்வாய்க்கிரகம் பூமிக்கு நேர்கோட்டில் வரும்போது நம்மால் மங்கள்யானை தொடர்புகொள்ள முடியாது. அந்தக் குறிப்பிட்ட 10, 15 நாள்களில் தானியங்கி முறை மூலம் செயற்கோள் தானே இயங்கும் வண்ணம் மங்கள்யானை வடிவமைத்துள்ளோம். இந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் தானியங்கி முறை ஆகிய இரண்டு காரணங்களால்தான் ஆறு ஆண்டுக் காலம் செயற்கைக்கோளால் நீடித்து ஆராய்ச்சி செய்ய முடிகிறது. அப்போது சந்திராயன்-2 திட்டம் பல்வேறு காரணங்களால் தடைபட்டதால் அதன் செயற்கைக்கோள் பாகங்களை வைத்தே மங்கள்யானை தயார் செய்தோம். இதனால் எங்களால் 15 மாதங்களில் மங்கள்யானை குறைந்த செலவில் தயார் செய்ய முடிந்தது. இதில் கிடைத்த வெற்றி எங்கள் தொழில்நுட்பத்தின் வெற்றியாக அமைந்தது.

இதன் பிறகு, 36 மாதங்களில் 30 செயற்கைக் கோள்களை அனுப்பினோம். பல இளம் பொறியாளர்கள் மற்ற செயற்கைக்கோள் உதிரி பாகங்களைக்கொண்டே மங்கள்யானுக்கான பேலோடை (payload) உயர்ந்த தரத்தில் சிக்கனமாகத் தயார்செய்து கொடுத்தனர். இதனால் நாசாவின் மேவன் (maven) பேலோடைவிடக் குறைந்த செலவில் நம்மால் இதைத் தயாரிக்க முடிந்தது. சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் ஆகியவற்றின் செயற்பாடுகளை அதற்கென உள்ள பிரேத்யேக அணிகள் கண்காணித்து வருகின்றன. செவ்வாயில் மனிதன் வாழ வாய்ப்பிருக்கிறதா என்று வருங்கால ஆராய்ச்சிகளில் கண்டிப்பாக உறுதிப்படுத்திவிடுவோம்" என்றார்.

மங்கள்யான் பற்றிய திரைப்படமான மிஷன் மங்கள்யான் குறித்து கேட்டபோது, "படம் பார்க்கும்போது மங்கள்யானுக்காக நாங்கள் உழைத்த நினைவுகள் வந்து சென்றன. அதுவொரு நெகிழ்ச்சியான தருணமாகவே அமைந்தது" என்றார்.