Published:Updated:

`லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்.. இருந்தாலும்..'- இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சி செய்தி! #ISRO

மலையரசு
சத்யா கோபாலன்

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

sivan
sivan

சந்திரயான்-2 விண்கலனுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் ஜூலை 22 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கக் காரணம் இதுவரை யாரும் தடம் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்கவிருந்தது தான். நேற்றுமுன்தினம் இரவு 1.30 மணியளவில் இந்தச் சாதனை நிகழ்த்தப்படவிருந்த நிலையில் `சந்திரயான் 2' நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

isro
isro

நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரம்வரை எதிர்பார்த்ததைப்போலவே லேண்டர் பயணித்திருக்கிறது. அதற்குபின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னடைவால் இஸ்ரோ விஞ்ஞானிகள் துவண்டிருக்க அவர்களின் கடும் உழைப்பை பிரபலங்கள் உட்பட சாதாரண மக்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் - `நிலவை நிச்சயம் தொடுவோம்’ என ஆறுதல் சொன்ன மோடி

தொடர்ந்து விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டானது எப்படி என்பது குறித்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ அதிகாரிகள், ``விக்ரம் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5 சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டோம்.

isro
isro

விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுவட்ட பாதையில் மிகவும் பாதுகாப்பாகச் சுற்றிவருகிறது. சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும். இந்த ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும். இதைக்கொண்டு தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும்'' எனப் பிடிஐ நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

`இதுதான் உண்மையில் சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்!'- வைரல் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

இதன்பின் நேற்று பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ``30 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்றோம். கடைசி கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. இதை 95 சதவீத வெற்றி எனலாம். மொத்தத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை எட்டிவிட்டோம். சந்திரயான் 2 சிக்கலால் பணிகள் பாதிக்கப்படவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் முயற்சிப்போம். இணைப்பு கிடைத்தால் அதன் பிறகு வழக்கமான ஆய்வுப் பணிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

Modi - ISRO sivan
Modi - ISRO sivan

இந்நிலையில் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் சரியான இருப்பிடத்தை ஆர்பிட்டர் உதவியுடன் இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. மேலும் ஆர்பிட்டர் லேண்டரின் படத்தைக் கிளிக் செய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சிவனும் சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ளார்.

``தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி சந்திரனின் மேற்பரப்பில் ஆர்பிட்டரின் உதவியுடன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் வெப்பப்படத்தை ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ளது. இருந்தாலும் அதிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. நாங்கள் சிக்னலை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம். விரைவில் சிக்னல் சரிசெய்யப்படும்’' என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

`விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ சிறந்த இடத்தை பிடித்துள்ளது'- நாசா வீரர் பாராட்டு!