Published:Updated:

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?

யாருமே இதுவரை செய்யாத ஒரு சாதனையை நோக்கி, யாருமே இதுவரை செல்லாத ஒரு இடத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்குகிறது சந்திரயான். இந்தப் பயணம் எவ்வளவு சவாலானது? விரிவாகக் காண்போம்.

சந்திரயான் 2
"இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு இதுபோன்ற விண்வெளித் திட்டங்களெல்லாம் தேவைதானா? இந்தக் கேள்வி என்னிடம் மட்டுமல்ல; 50 ஆண்டுகளுக்கும் முன்பு விக்ரம் சாராபாயிடமும் கேட்கப்பட்டது. அன்று நம்முடைய விண்வெளி விஞ்ஞானிகள் செய்த விண்வெளி ஆராய்ச்சிகளின் பயனைத்தான் இன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அறுவடை செய்துகொண்டிருக் கிறோம். இதுதான் அந்தக் கேள்விக்கான விடை. இதேபோல நம் எதிர்கால தலைமுறையினர் பயனடைவதற்கான பணிகளைத்தான் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்."
சந்திரயான் 2 குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சிவன்

இதற்கு முன்பு விகடனுக்கான ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்ட இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன்.

"இன்று பெரும்பாலானோர் நினைப்பதுபோல, வெறும் சாதனைகளுக்காக மட்டுமே செயற்கைகோள்கள் ஏவப்படுவதில்லை. எங்களோட நோக்கமெல்லாம் வெறும் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விடுவதோ செயற்கைக்கோள்களை அனுப்புவதோ அல்ல; அதன்மூலமாகப் பூமியில் இருக்கும் மக்களுக்கு உதவுவதுதான் உண்மையான நோக்கம். ஆனால், செய்திகளில் ராக்கெட் வெற்றியடைந்த விஷயத்தை மட்டுமே மக்கள் கவனிப்பதால், இவற்றை மறந்துடுறாங்க. இன்று விண்ணில் நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் நம்முடைய அன்றாடப் பயன்பாட்டில் ஏதோ ஒரு விஷயத்துடன் தொடர்புகொண்டதாகத்தான் இருக்கும். நேவிகேஷன், பேரிடர் முன்னறிவிப்பு, இயற்கை வளங்களைக் கண்டறிதல் என எத்தனையோ பணிகளை அவை மேற்கொள்கின்றன. இவற்றுக்காக நம் நாடு இதுவரை செலவு செய்ததைவிடவும், இவற்றின்மூலம் தேசம் அடைந்த நன்மைகள் அதிகம். செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல; சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்களும்; எல்லாமே எதிர்காலத் தேவையை மனதில் வைத்துதான் ஏவப்படுகின்றன. உதாரணமாக, நம்முடைய பூமியில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்கள் அனைத்தும் மிக வேகமாகத் தீர்ந்துவருகின்றன. இன்னும் சில நூறு ஆண்டுகள் போனால் இந்த எரிபொருள்கள் மொத்தமும் முழுமையாகத் தீர்ந்துபோகலாம்; அதற்காக மாற்று என்ன செய்யலாம் என ஆராய்ச்சிகள் நடந்துவருது. இதற்காக நிலவில் இருந்து ஹீலியம் 3-ஐ எடுத்து வந்து பயன்படுத்த முடியுமா என்று பார்ப்பதற்காகத்தான் சந்திரயான் 2-வையும் அனுப்புகிறோம். இப்படி நம்முடைய எல்லா திட்டங்களும் எதிர்காலத் தேவைகளோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதுதான்."
Vikatan

'இந்தியா அனுப்பும் செயற்கைக்கோள்களால் சாமானியனுக்கு என்ன நன்மை?' என்பதற்கான விடை இது. ஆம், இந்தியா இந்தக் கேள்விகளையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்லும் நிலைக்கே வந்துவிட்டது. இனிமேல் தகவல் தொடர்புக்காகவும் கண்காணிப்புக்காகவும் மட்டும் நம் செயற்கைக்கோள்கள் பாயப்போவதில்லை. விண்வெளி அறிவியலில் அடுத்தகட்டத்தை எட்டும் நோக்கிலும் விண்ணில் பாயவிருக்கின்றன.

சந்திரயான் 2  லேண்டர் மற்றும் ரோவர்
சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்
ISRO

தற்போது இஸ்ரோ தயாராக வைத்திருக்கும் சந்திரயான், அடுத்து சூரியனை நோக்கி செல்லவிருக்கும் ஆதித்யா, வெள்ளியை நோக்கிப் புறப்படும் புதிய செயற்கைக்கோள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான், இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் என அடுத்தடுத்து பிரமாண்ட இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது இஸ்ரோ. அடுத்து வரவிருக்கும்

5 ஆண்டுகள் விண்வெளி அறிவியலில் இந்தியா உண்மையிலேயே பெருமைப்படத்தக்க தருணம். அத்தனை புதிய மைல்கல்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இதில் முதலாவது வரும் ஜூலை மாதம் விண்ணில் பாயவிருக்கும் சந்திரயான் 2. எதற்காக இந்த சந்திரயான் 2?

இஸ்ரோவின் குறிக்கோள்களில் முக்கியமானது விண்வெளித் தொழில்நுட்பத்தின் மூலம் சாமானியர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது போன்றவைதாம். "இத்தனை வருட பயணத்தில் இந்த இரண்டையும் இஸ்ரோ பூர்த்தி செய்துவிட்டது" என்கிறார் சிவன். இதுவரைக்கும் நாம் அனுப்பிய கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள், நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் ஆகியவை இந்தத் தேவையை பூர்த்திசெய்துவிட்டன. இனி இஸ்ரோ செய்ய வேண்டியது என்ன? இங்குதான் 'Deep Space Mission'-களின் பயணம் தொடங்குகிறது.

சந்திரயான் திட்டத்தின் டைம்லைன்
சந்திரயான் திட்டத்தின் டைம்லைன்
Vikatan Infographics

இதுவரைக்கும் நாம் அனுப்பிய INSAT, GSAT, IRS, IRNSS செயற்கைக்கோள்கள் எல்லாமே விண்வெளித் தொழில்நுட்பத்தின் (Space Technology) வெளிப்பாடு. இவை ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் நமக்கு வெவ்வேறு விதங்களில் உதவுமே தவிர, புதிதாக எதுவும் செய்யாது. ஆனால், சந்திரயான் 1, மங்கள்யான் போன்ற இரண்டும் விண்வெளி அறிவியலுக்கானவை (Space Science). இதுதான் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளை நமக்கு கொடுக்கும். எதிர்காலத்தில் விண்வெளிக்குச் சென்று வாழ வேண்டுமென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இவைதாம் நமக்குக் கற்றுக்கொடுக்கும். வேறு கோள்களிலிருந்து பூமிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்கு இவைதாம் நமக்கு வழிகாட்டும்.

அப்படித்தான் சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது. மங்கள்யான், செவ்வாயின் குணங்களை நமக்கு படம்பிடித்துக்காட்டியது. இதன் அடுத்தகட்டம்தான் சந்திராயன் 2. நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்ததோடு சந்திரயான் தன் பயணத்தை முடித்துக்கொண்டது. ஆனால், அதைத் தாண்டியும் இன்னும் நாம் அங்கே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? தெரியாது. நிலவில் எங்கே நீர் அதிகம் இருக்கிறது? தெரியாது. நிலவிலிருக்கும் கால்சியம், மக்னீசியம், ஹீலியம் போன்ற தனிமங்களின் அளவு என்ன? தெரியாது. இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடைகாணத்தான் இங்கிருந்து சந்திரயான் 2 கிளம்புகிறது.

சந்திரயான் 2 திட்ட விவரங்கள் - Vikatan Infographics
சந்திரயான் 2 திட்ட விவரங்கள் - Vikatan Infographics
Vikatan Infographics

ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டதைப் பார்ப்பதோடும், அந்தச் செய்தியை மட்டும் படிப்பதோடும் நாம் நின்றுவிடுவோம். அதற்குப் பிறகு அவை என்னாகின்றன, எப்படிப் பயணம் செய்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், சந்திரயான் 2 அப்படி நாம் நின்றுவிடக்கூடியதல்ல.

வெற்றிகரமாக ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்வதோடு சந்திரயான் வெற்றியடைந்து விடுவதில்லை. அது வெறும் தொடக்கம்தான். அதற்கடுத்து விண்ணில் பயணம் செய்யவிருக்கும் அடுத்த 52 நாள்கள்தான் மிக முக்கியமான தருணங்கள்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவு வரை சந்திரயானின் பயணம்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவு வரை சந்திரயானின் பயணம்
Vikatan Infographics

ஆனால், இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. எண்ணற்ற சவால்கள் இஸ்ரோவுக்கும் சந்திரயானுக்கும் காத்திருக்கின்றன. இது எப்படி நடைபெறும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

GSLV Mk-III ராக்கெட்தான் சந்திரயானின் டெலிவரி பார்ட்னர். இதில்தான் விண்வெளிக்கு விசிட் அடிக்கவிருக்கிறது சந்திரயான் 2. முதலில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் இந்த GSLV பூமியிலிருந்து வெளியேறி, அடுத்த 15 நிமிடங்களில் சந்திரயானின் Composite Body-ஐ Earth Parking Orbit எனப்படும் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்.

சந்திரயான் 2-வை சுமந்துசெல்லும் GSLV Mk-III
சந்திரயான் 2-வை சுமந்துசெல்லும் GSLV Mk-III
Youtube / ISRO

இதில் Composite Body என்பது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்றும் அடங்கிய சந்திரயான் 2. GSLV தரையிலிருந்து கிளம்பியதும் மூன்று கட்ட Propulsion Burn-களைத் தாண்டி பின்னர் சந்திரயான் 2-வை சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தும். இங்கே சுற்றுவட்டப்பாதையில் எதற்காக நிலைநிறுத்தப்படுகிறது, இங்கிருந்து எப்படி நிலவிற்கு பயணம் செய்யவிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விண்வெளி அறிவியலின் ' Orbital mechanics' ஓரளவு தெரிந்துகொள்வது அவசியம்.

பூமியை விண்ணில் சுற்றிவந்துகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் ஏன் எப்போதும் பூமியில் வந்து விழுவதில்லை என யோசித்ததுண்டா. இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொண்டால், சந்திரயானின் பயணமும் எளிதில் புரியும். உண்மையில் நாம் அனுப்பும் அனைத்து செயற்கைக்கோள்களும் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு கீழே விழுகின்றன. ஆனால், நம் தரையில் விழுவதில்லை. அவ்வளவுதான். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு உயரமான கட்டடத்தின் மேல் நின்றுகொண்டு, ஒரு பந்தை தூக்கி எறிந்தால் என்ன நடக்கும்? சில மீட்டர் தொலைவு அந்தப் பந்து பறந்துசென்று பின்னர் தரையில் விழும். இதுவே அந்தப் பந்தை இன்னும் கொஞ்சம் விசையுடன் தூக்கியெறிந்தால் என்ன நடக்கும்? இன்னும் கொஞ்சம் தொலைவு அதிகம் பயணித்து மீண்டும் கீழே விழும். அதைவிட இன்னும் கூடுதல் விசை கொடுத்து வீசினால்? அதே கதைதான்; கூடுதல் தொலைவு, பின்னர் தரையில் விழும்.

இஸ்ரோவில் தயாராகும் சந்திரயான் 2
இஸ்ரோவில் தயாராகும் சந்திரயான் 2
ISRO

இந்த மூன்று சம்பவங்களிலும் இரண்டு ஒற்றுமையைப் பார்க்கலாம். ஒன்று, மூன்று முறையும் அந்தப் பந்து ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கிறது. இரண்டு, மூன்று முறையும் அந்தப் பந்து பரவளைய வடிவில் கீழே விழுந்திருக்கிறது. இதைவைத்து ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது எவ்வளவு தூரம் வீசினாலும் அந்தப் பந்து பரவளைய பாதையில் பயணித்து, கீழே விழத்தான் போகிறது. எனவே புவியின் சுற்றுவட்டப்பாதையில் அந்தப் பந்தை போதுமான அளவு வேகத்தோடு வீசினால் அது புவியின் சுற்றுவட்டப்பாதையிலேயே சுற்றி வருமல்லவா? இப்படித்தான் செயற்கைக்கோள்கள் புவியைச் சுற்றிவருகின்றன.

அதாவது அந்தப் பந்து போதுமான வேகத்தோடு புவியின் சுற்றுவட்டப் பாதையில் நேராகப் பயணிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் புவியின் ஈர்ப்பு விசை அதன்மீது செயல்பட்டு மீண்டும் அதை கீழிறக்கிவிடுகிறது. இப்படி கீழிறங்கி, கீழிறங்கி புவியின் சுற்றுவட்டப்பாதையில் சரியாகப் பயணிக்கிறது. ஒரு நூலில் கல்லைக் கட்டி சுற்றினால், அதன் மையத்தை நோக்கியே சுற்றுமே அப்படி. இப்படி புவிக்கு நெருக்கமாக, வளிமண்டலத்தைத் தாண்டி முதன்முதலில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும் இடம்தான் Earth Parking Orbit. இப்போது புவியின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இனி அடுத்து என்ன? Earth Burns.

Earth Burns-க்கு முன்பு சந்திரயான் 2
Earth Burns-க்கு முன்பு சந்திரயான் 2
Youtube/ISRO

சந்திரயான் 2 விண்ணுக்குச் சென்றதும் உடனே நேரடியாகவெல்லாம் நிலவை நோக்கி அனுப்பிவிட முடியாது. காரணம், புவியின் ஒட்டுமொத்த ஈர்ப்புவிசையிலிருந்தும் விலகி, நிலவுக்குச் செல்ல அதிகளவிலான உந்துவிசை தேவை. மேலும், பூமியைப் போலவே நிலவும் தன் சுற்றுவட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது. எனவே, அதை நோக்கி துல்லியமாக அனுப்புவதை விடவும், நிலவு புவிக்கு சரியான இடத்தில் வரும்போது சந்திரயானை அனுப்புவதுதான் சரியாக இருக்கும். எரிபொருளும் நிறைய மிச்சமாகும். இதுதான் இஸ்ரோவின் லாஜிக். சந்திரயான் 2 பயணிக்கப்போகும் இதே ரூட்டில்தான் சந்திரயான் 1-ம் பயணம் செய்தது.

சரி, மீண்டும் கதைக்கு வருவோம். இப்போது புவியைச் சுற்றிவந்துகொண்டிருக்கிற சந்திரயான் 2 தனது Propulsion System மூலமாக பூமியை வட்டப்பாதையியில் சுற்றிவந்துகொண்டிருக்கும். புவிக்கு மிக நெருக்கமாக சுற்றிவந்துகொண்டிருப்பதால் வேகமும் அதிகமாக இருக்கும். தற்போது இந்த வட்டப்பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக நீள்வட்டமாக மாற்ற வேண்டும். எப்படி? பூமியை சீராக சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் 2, தனது Propulsion System மூலமாகக் கூடுதல் விசையைக் கொடுத்து சுற்றுவட்டப் பாதையிலிருந்து சிறிதளவு விலகும். இதன்மூலம் வட்டப்பாதை கொஞ்சம் மாறும்.

சுற்றுவட்டப்பாதையை மாற்றும் சந்திரயான் 2
சுற்றுவட்டப்பாதையை மாற்றும் சந்திரயான் 2
youtube/ISRO

இப்போது மொத்த சுற்றுவட்டப்பாதையில் ஒரு முனையில் பூமி அருகில் இருப்பதால் ஈர்ப்பு விசை அதிகமாகவும் மறுமுனையில் பூமி தொலைவில் இருப்பதால் ஈர்ப்புவிசை குறைவாகவும் இருக்கும். இதேபோல ஐந்துமுறை சந்திரயான் 2 தனது பாதையை மாற்றிக்கொண்டே இருக்கும். தற்போது முழு நீள்வட்டப்பாதையாக மாறியிருக்கும் இந்தப் பாதையில், பூமிக்கு அருகே இருக்கிற முனைக்கு சந்திரயான் 2 வரும்போது ஈர்ப்புவிசை காரணமாக அதிகமாக ஈர்க்கப்படும். பின்னர் அதே அளவு வேகமாக விடுவிக்கப்படும்.

இந்த நொடியில்தான் சந்திரயான் 2 மீண்டும் ஒருமுறை தன்னுடைய எரிபொருளைப் பயன்படுத்தி உந்தம் கொடுத்து சந்திரனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும். இப்படி ஐந்துமுறை பூமியைச் சுற்றிவந்து வேகத்தை அதிகரிப்பதற்குத்தான் Earth Burn எனப் பெயர். இங்கிருந்து நிலவுக்குக் கிளம்புகிறதே, அதற்குப் பெயர் Trans Lunar Injection எனப் பெயர். இது மொத்தம் 16 நாள்கள் நடக்கும்.

நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கும் சந்திரயான் 2
நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கும் சந்திரயான் 2
Youtube / ISRO

இனி இங்கிருந்து ஐந்து நாள்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியதும் மீண்டுமொரு சவால் காத்திருக்கிறது. பூமியைப் போலவே நிலவின் ஈர்ப்புவிசையும் சந்திரயானை பாதித்துவிடலாம். எனவே, இப்படி பூமியிலிருந்து ஐந்துமுறை மெதுவாக சுற்றி சுற்றி வேகத்தை அதிகரித்ததோ, அதேபோல அங்கேயும் மெதுவாக தன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்காக நடப்பதுதான் Retro Burn.

அதாவது, எதிர்திசையில் செயல்பட்டு செயற்கைக்கோளின் வேகத்தைக் குறைப்பது. இதன்படி முதலில் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் எதிர்கொள்ளும் சந்திராயன் 2, இந்த Retro Burn மூலம் அதைத் எதிர்திசையில் நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். இதன்மூலம் நிலவின் ஈர்ப்புவிசையால் சரியாக ஈர்க்கப்பட்டு துல்லியமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்துவிடும். இதற்கு Lunar Orbiter Injection எனப் பெயர். முதலில் நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கும் சந்திரயான் மெதுவாகத் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, சரியான வட்டப்பாதையில் சுற்றும். இதற்கே 27 நாள்கள் ஆகிவிடும்.

நிலவில களமிறங்கத் தயாராகும் சந்திரயான் 2
நிலவில களமிறங்கத் தயாராகும் சந்திரயான் 2
Youtube / ISRO

இங்குதான் இனி ட்விஸ்ட்டே. இதுவரைக்கும் சந்திரயான் 2-வாக ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்த அந்த Composite Body இப்போது இரண்டாகப் பிரியத் தொடங்கும். இந்தப் புள்ளியிலிருந்து இனி ஆர்பிட்டர் தனி, லேண்டர் (விக்ரம்) தனி. ஆர்பிட்டர் இதே வட்டப்பாதையில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவந்து நமக்காகத் தகவல்களைச் சேகரிக்கும். அடுத்து லேண்டர் என்னாகிறது என்பது க்ளைமாக்ஸ்.

பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் லேண்டர்
பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் லேண்டர்
Youtube / ISRO

ஆர்பிட்டரிலிந்து பிரிந்ததற்குப் பிறகு நான்கு நாள்களுக்கு விக்ரம் சந்திரனை மெதுவாகச் சுற்றிவந்து வேகத்தைக் குறைத்துக்கொண்டே வரும். இறுதியில் சரியான சமயம் பார்த்து நிலவில் விக்ரம் கால்பதிக்கும். இதற்கு விக்ரம் எடுத்துக்கொள்ளும் நேரம் 15 நிமிடங்கள். இந்த இறுதி 15 நிமிடங்கள்தான் இஸ்ரோவின் மிக மிக முக்கியமான தருணம். இறங்குமிடம் பள்ளமா, பாறையா என்பதையெல்லாம் சரியாகக் கணக்கிட்டு, நிலவின் தென்துருவத்தில் ஒரு நல்லநேரத்தில் நிலாவில் வலதுகால் எடுத்துவைத்துவிடும் இந்த விக்ரம். இதற்குப் பெயர்தான் Soft Landing. இதோடு விக்ரமின் மிஷன் முடிந்தது.

நிலவில் களமிறங்கும் விக்ரம்
நிலவில் களமிறங்கும் விக்ரம்
Youtube / ISRO

இனி அடுத்தது ரோவர், பிரக்யான். சுமார் 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணத்திலும் சமர்த்தாக உள்ளே உட்கார்ந்துகொண்டிருந்த பிரக்யான், இனிதான் மெல்ல தலைகாட்டும். விக்ரம் தரையிறங்கிய நான்கு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வரும். அதன் ஆறு சக்கரங்களும் நிலவில் பதிந்துவிட்டால் இந்த மிஷன் மொத்தமும் வெற்றிதான். பிரக்யானின் வேகம் ஒரு நொடிக்கு ஒரு செ.மீட்டர்தான். அதனிடம் உள்ள எரிபொருளைக் கொண்டு அதிகபட்சம் அதனால் பயணம் செய்யமுடியக் கூடிய தூரமே 500 மீட்டர்தான். அதற்குள்தான் நிலவில் உலவி தன்னுடைய அறிவியல் சோதனைகளைத் தொடங்கவேண்டும். அடுத்த 14 நாள்களுக்கு பிரக்யான் அங்கு சோதனை செய்யும். அடுத்ததென்ன? அங்கேயே சமாதிதான். தன் பணியை முடித்துக்கொண்டு சத்தமில்லாமல் விடைபெற்றுவிடும் பிரக்யான்.

நிலவில் என்ன செய்யவிருக்கிறது சந்திரயான் 2?
நிலவில் என்ன செய்யவிருக்கிறது சந்திரயான் 2?
Vikatan Infographics

நிலவில் என்ன மாதிரியான தனிமங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது மேலே சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் பணி. நிலவின் நிலப்பரப்பில் இருக்கும் நீரை மற்றும் வேதிப்பொருள்களைக் கண்டறிவது பிரக்யானின் பணி. இந்த பிரக்யான் கண்டறிந்து சொல்லும் விஷயங்களை நம் பூமியிலிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குச் சொல்வது விக்ரமின் பணி. ஆர்பிட்டராலும் விக்ரமாலும் பூமியை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும். பிரக்யானால் முடியாது. அங்கிருந்து இங்கு தகவல் வந்துசேர ஆகும் சராசரி கால அளவு 2 விநாடிகள். நிலவிலிருந்து நமக்கான புகைப்படங்களை அனுப்பப் போவது பிரக்யான்தான். இந்த விக்ரமும் பிரக்யானும் கால்பதிக்கவிருக்கும் நிலவின் தென்துருவம் இதுவரை உலகில் எந்த நாடுமே செல்லாத மற்றும் காணாத ஒரு இடம். ஏன் இஸ்ரோ இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறது இஸ்ரோ.

சந்திரயான் 2 முன்னிருக்கும் சவால்கள்
சந்திரயான் 2 முன்னிருக்கும் சவால்கள்
Vikatan Infographics
முதலாவது, விக்ரம் இயங்குவதற்கு போதுமான சூரிய ஒளி தேவை என்பதால், அதற்கு இந்த இடம் மிகச் சரியாக இருக்குமாம். அடுத்தது, இங்கு பெரியளவில் பள்ளங்களோ, பாறைகளோ இல்லாததால் விக்ரம் இங்கே இறங்குவதும் கொஞ்சம் எளிதாக இருக்கும். இரண்டாவது, இந்தப் பகுதியில் தண்ணீர் வளம் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதை உறுதிசெய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையலாம்.
சந்திரயான் 2 இறங்கும் தென்துருவம்
சந்திரயான் 2 இறங்கும் தென்துருவம்
Youtube / ISRO
சந்திரயான் 2-வில் இந்தியாவின் 620 தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கிறது. இதற்கான மொத்த பட்ஜெட் 978 கோடி ரூபாய்.
Vikatan

முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளாலேயே உருவாக்கப்பட்ட சந்திரயான் 2-வில் இந்தியாவின் 620 தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கிறது. இதற்கான மொத்த பட்ஜெட்டான 978 கோடி ரூபாய் மொத்தமும் இந்தியாவுடையதல்ல. எதிர்காலத்தில் நாம் பிறநாடுகளுக்கு வழங்கப்போகும் சேவைகளுக்காக அந்நாடுகள் அளித்த பணமும் கூட.

இந்த மொத்த பயணமும் முழு வெற்றியடைந்துவிட்டால் அது இந்தியாவின் விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல; மொத்த அறிவியல் உலகுக்கும் அது ஒரு மைல்கல்லாக இருக்கும். சாதிக்குமா சந்திரயான்? செப்டம்பர் 6-ல் தெரியும்.