சீனாவில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் சுமார் 4,500 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து நாடுகளுமே இதை எதிர்கொள்ளவும் தற்காத்துக்கொள்ளவும் தயார் நிலையில் இருக்கின்றன.

நேற்று முன்தினம் சீன சுகாதாரத் துறை, கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் படத்தை முதன்முதலாக வெளியிட்டது. வுகான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரஸ் தற்போது சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. இதுவரை சீனாவைத் தவிர்த்து 15 நாடுகளைச் சேர்ந்த 47 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கும். ஆனால், இந்த வைரஸால் சீனாவுக்கு வெளியே இதுவரை எந்த இறப்புகளும் நிகழவில்லை.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகள் ஏற்கெனவே இதைச் செய்துவிட்டாலும், அவர்கள் அதன் மரபணு வரிசையை மட்டும்தான் (genome sequence) வெளியிட்டனர்.
மெல்பர்னில் இருக்கும் சிறப்பு ஆய்வுக் கூடத்தைச் (The Peter Doherty Institute for Infection and Immunity) சேர்ந்த விஞ்ஞானிகள், இதை ஒரு பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெற்றதாகத் தெரிவிக்கின்றனர். ``இதுபோன்ற சம்பவம் நடக்கலாம் எனப் பல வருடங்களாகத் தயார்நிலையில் இருப்பதால்தான் எங்களால் இவ்வளவு விரைவாக இதைச் செய்யமுடிந்தது" என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இதை ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கின்றனர் மருத்துவர்கள். இந்தக் கண்டுபிடிப்பை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிப்பதன் மூலம் கொரோனாவைக் கண்டறிவதும், அதற்குச் சிகிச்சை தருவதும் முன்பைவிட எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னே இதை வைத்து தொற்று இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துபார்த்துவிடலாம்.
இது ஏன் முக்கியம் என்றால், எந்த ஒரு ஃப்ளூ தாக்குதலைப் போல கொரோனாவும் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே (incubation period) ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடும் என்கிறது சீன சுகாதாரத் துறை. இதுபற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO).
மேலும் இந்தக் கண்டுபிடிப்பு இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த வைரஸ் தொற்று மிகவும் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் முதலில் உருவெடுத்த வுகான் நகரத்தை முற்றிலுமாக தனிமைப்படுத்தியிருக்கிறது சீன அரசு.