2023-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யம் ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. நம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கண்டு கழிக்கும், நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. C/2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம், மார்ச் 1, 2022 அன்று நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வால் நட்சத்திரம் வரும் ஜனவரி 12-ம் தேதி, சூரியனை நெருங்கி வரும், பிப்ரவரி 1 - 2 க்குள் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும். இந்நிகழ்வை நாம் வெறும் கண்களிலேயே பார்க்க முடியும் என்று நாசா கூறியுள்ளது.

நாசாவின் கூற்றின்படி, ``C/2022 E3 (ZTF) வால் நட்சத்திரம் வட மேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் ஜனவரி மாதத்தில், காலை நேரத்தில் பார்வைக்கு தென்படும். பின்னர், தெற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி மாதத்தில் பூமியை நெருங்கி வரும். வால் நட்சத்திரம் தற்போது சூரிய குடும்பத்தின் உட்பகுதியில் பயணித்து வருகிறது. வால் நட்சத்திரத்தின் தற்போதைய நிலை நீடித்தால், பூமியை நெருங்கி வரும்போது நன்கு பிரகாசமாகக் காட்சியளிக்கும். அதை வெறும் கண்களாலே பார்க்கலாம்.
திறனுடைய கேமராக்களால் இந்நிகழ்வை துல்லியமாக படம் பிடிக்கவும் முடியும். இனிவரும் நாள்களில் ஏற்படும் மாற்றங்களால், வால்நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கினாலும், தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். சந்திரன் மங்கலாக இருக்கும் பட்சத்தில், வால் நட்சத்திரம் சற்று பிரகாசமாகக் காட்சியளிக்ககூடும். சிறந்த தொலைநோக்கியின் மூலம், C/2022 E3 (ZTF) வால் நட்சத்திரத்தைப் பார்த்தால், அதன் நகர்வுகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

C/2022 E3 (ZTF) வால் நட்சத்திரம், உருவாகி 50,000 ஆண்டுகள் இருக்கலாம். கடைசியாக, வால் நட்சத்திரத்தைப் பார்த்த மனிதர்கள் பனியுகத்தைச் சேர்ந்த ஹோமோ ஹேப்பியன்ஸ் ஆகவே இருப்பனர். நியண்டர்தால் மனிதர்கள், இந்நிகழ்வை பார்த்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து 2-ம் தேதிக்குள், காட்சியளிக்கும்போது மண்டலத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.