Published:Updated:

தாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா? #DoubtOfCommonMan

பூமியை நோக்கி வரும் விண்கல்
News
பூமியை நோக்கி வரும் விண்கல்

"ஒரு நாளைக்கு சிறியதும் பெரியதுமா பல டன் விண்கற்கள் பூமி மேல விழுந்துக்கிட்டுதான் இருக்கு. எல்லா விண்கற்களும் பூமியில் விழுவதில்லை. பூமியை நோக்கி வரும்போதே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும்."

Published:Updated:

தாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா? #DoubtOfCommonMan

"ஒரு நாளைக்கு சிறியதும் பெரியதுமா பல டன் விண்கற்கள் பூமி மேல விழுந்துக்கிட்டுதான் இருக்கு. எல்லா விண்கற்களும் பூமியில் விழுவதில்லை. பூமியை நோக்கி வரும்போதே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும்."

பூமியை நோக்கி வரும் விண்கல்
News
பூமியை நோக்கி வரும் விண்கல்

‘பெர்முடா முக்கோணத்தின் மேல் பறக்கும் விமானம் மாயமாகிவிடும்’, ‘இந்த தீவுக்குச் சென்றவர்கள் உயிரோடு திரும்பியதாக வரலாறே இல்லை’ என்பதுபோல பல விசித்திரமான, விடை தெரியாத சம்பவங்களைக் கேள்விப்பட்டு வியந்திருக்கிறோம். அப்படியொரு சம்பவம் நம் ஊரில் நடந்தால், அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

Doubt of common man
Doubt of common man

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் நியாஸ் அலி என்ற வாசகர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "கடந்த 26.09.2019 அன்று காலை 9.00 மணியளவில் தாராபுரம், மூலனூர், அலங்கியம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 50 கி.மீ சுற்றளவில் ஒரே நேரத்தில் அதிபயங்கர சத்தம் கேட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால், எதனால் இந்தச் சத்தம் வந்தது என்று இன்றுவரை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. அந்தச் சத்தம் ஏன் கேட்டது என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?" என்பதுதான் அவருடைய கேள்வி.

இரண்டு நிலாக்களுடன் உலா வரும் விண்கல்... “ஜஸ்ட் மிஸ்” ஆன பூமி..!
இரண்டு நிலாக்களுடன் உலா வரும் விண்கல்... “ஜஸ்ட் மிஸ்” ஆன பூமி..!

இந்தக் கேள்விக்கு விடைதேடி களத்தில் இறங்கினோம்.

முதலில் நமக்கு கேள்வி அனுப்பிய நியாஸ் அலியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

"என்னோட சொந்த ஊர் தாராபுரம். இப்போ நான் ஈராக்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தினமும் வீட்டுக்கு போன் பண்ணிப் பேசுவேன். அப்படி அன்னைக்கு வீட்ல பேசிக்கிட்டு இருக்கப்ப, வானத்துல ஏதோ வெடிச்சத்தம் கேட்டுச்சுன்னு சொன்னாங்க. வாட்ஸ் அப்லயும் இந்தச் செய்தியைப் பார்த்தேன். என்ன சத்தம்னு கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினேன். பதிலே வரலை. யாருக்கும் எந்தத் தகவலும் தெரியலை. அதிகாரிகளுக்கு அந்தச் சத்தத்துக்கான காரணம் என்னன்னு தெரியலே. சுனாமி, நிலநடுக்கம்னு மக்கள் பயத்துல இருக்காங்க. ஏதாவது அசம்பாவிதத்தோட அறிகுறியா இருக்குமோன்னு பயமாயிருக்கு. அது என்னன்னு நீங்களாவது விசாரிச்சு சொல்லுங்க” என்றார்.

நியாஸ் அலி
நியாஸ் அலி
Doubt of common man
Doubt of common man

சத்தம் கேட்டதாகச் சொல்லப்படும் தாராபுரம், காங்கேயம் பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணையில் இறங்கினோம். ‘வானத்துலருந்து 'டமார்'ன்னு சத்தம் கேட்டது’ எனப் பலரும் ஒரே டோனில் உறுதி செய்தனர்.

காங்கேயம் தாலுகா, ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவரிடம் பேசினோம். "வெடிச்சத்தம் கேட்டப்ப ஆட்டோ ஸ்டாண்ட்லதான் இருந்தேன். ஏதோ அசம்பாவிதம் நடந்தமாதிரி மிகப்பெரிய அதிர்வோட சத்தம் கேட்டுச்சு. எல்லாருமே மிரண்டுபோயிட்டோம்" என்றார்.

தாராபுரம் அருகேயுள்ள குள்ளாயிபாளையம் பகுதியில்தான் அந்த வெடிச்சத்தம் கேட்டது என்று சிலர் சொல்ல, அந்த ஊருக்குச் சென்றோம். குள்ளாயிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் கிட்டுச்சாமியிடம் விசாரித்தோம், "காலையில 10 மணி இருக்கும். திடீர்னு பெரிய வேட்டு வெடிச்ச மாதிரி சத்தம் கேட்டுச்சு. ஊருக்குள்ள எங்கேயோ விமானமோ, ஹெலிகாப்டரோ விழுந்துடுச்சின்னு ஆளுங்க எல்லாம் வண்டியில போயி தேடுனாங்க. எங்கயுமே எதுவுமே கிடைக்கலை. என் வாழ்க்கையில இதுவரைக்கும் அந்த மாதிரியான ஒரு சத்தத்தைக் கேட்டதில்லை" என மிரட்சியாகச் சொன்னார்.

குள்ளாயிபாளையத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் முருகேசன், ``பக்கத்து ஊர்ல பல நூறு ஏக்கரில் பவர் பிளான்ட் ஒண்ணு இருக்குங்க. அதுதான் வெடிச்சிடுச்சின்னு எல்லாரும் சொன்னாங்க. அங்க போய்ப் பார்த்தோம், ஒண்ணுமே நடக்கலை. பழநி, உடுமலை வரைக்கும் சத்தம் கேட்டதா அங்கிருந்து எனக்கு போன் பண்ணாங்க” என்றார்.

விண்கல்
விண்கல்
"தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26.09.2019 அன்று காலை 9.30 மணியளவில் வெடிச்சத்தத்துடன் கூடிய அதிர்வு உணரப்பட்டது உண்மைதான். விசாரணை செய்ததில் சத்தம் எங்கிருந்து வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன்

இந்தச் சத்தம் அரசுப் பதிவேடுகளில் பதிவாகியிருக்கிறதா?

தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

"தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26.09.2019 அன்று காலை 9.30 மணியளவில் வெடிச்சத்தத்துடன்கூடிய அதிர்வு உணரப்பட்டது உண்மைதான். விசாரணை செய்ததில் சத்தம் எங்கிருந்து வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதுபற்றி திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்திருக்கிறோம்" என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். “நான் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதற்கு முதல் நாள் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. நானே பத்திரிகைகளில் பார்த்துதான் அதுபற்றித் தெரிந்துகொண்டேன். அந்தச் சத்தத்தால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இருந்தாலும் அந்தச் சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். காரணம் தெரிந்ததும் தெரிவிக்கிறோம்” என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன்

"சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து சிறிய விமானங்களின் மூலம், தாராபுரம் அருகிலுள்ள உப்பாறு அணைக்கு வந்து ராணுவத்தினர் பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். அப்போது விமானத்தின் டீசல் டேங்க் ஏதாவது வெடித்துச் சிதறியிருக்கலாம்" என்று இப்பகுதியில் ஒரு பேச்சு நிலவுகிறது. "குவாரிகளுக்கு அதிகளவு வெடிகளைப் பயன்படுத்தியதால் சத்தம் எழுந்திருக்கலாம்" என்று சிலர் சொல்கிறார்கள். `சக்திவாய்ந்த இடி விழுந்திருக்கலாம்’ என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இதில் எது நடந்திருந்தாலும், 100 கி.மீ வரையெல்லாம் நிச்சயமாக சத்தம் கேட்டிருக்காது.

Doubt of common man
Doubt of common man

சரி, என்னதான் காரணமாக இருக்கும்?

வானியல் ஆய்வுகளில் ஆர்வமுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் பேசினோம்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

``26.9.2019 அன்று காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் வானம் தெளிவாக இருந்திருக்கிறது. சத்தம் கேட்டதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தப் பகுதிகளில் மழையோ, மழைக்கான மேகங்களோ இல்லை. கிட்டத்தட்ட 100 கி.மீ வரை அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது என்றால், அது வானத்தில் இருந்து வந்த விண்கல்லால்கூட ஏற்பட்டிருக்கலாம். எல்லா விண்கற்களும் பூமியில் விழுவது கிடையாது. பெரும்பாலானவை பூமியின் மேற்பரப்பிலேயே வெடித்துச் சிதறிவிடும். அந்தச் சத்தமாகத் தான் இருந்திருக்கும். சமீபத்தில் ரஷ்யாவில் விண்கல் விழுந்தபோதும், இதேபோல ஒரு பெரும் சத்தம் அங்கு கேட்டிருக்கிறது. இது வழக்கமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.

இதை உறுதி செய்ய கலிலியோ அறிவியல் மையத்தின் இயக்குநர் சத்திய மாணிக்கத்தைத் தொடர்புகொண்டோம்.

“இன்னைக்கு எல்லாத்தையுமே நாம செயற்கைக்கோள் மூலமாகக் கண்காணிச்சிக்கிட்டு இருக்கோம். அப்படியிருக்க, நம்முடைய கண்காணிப்புகளை மீறி, விண்கல் பூமியைத் தாக்கியிருக்க வாய்ப்பில்லை. 50 கி.மீ-க்கும் மேல் இந்தச் சத்தம் கேட்டிருக்குன்னு சொல்றப்ப, டன் கணக்கில் வேற்றுப்பொருள் வந்து பூமியைத் தாக்கியிருக்கணும். அப்படி ஒண்ணு வந்திருந்தா, நம்ம விஞ்ஞானிகளுக்கு அது தெரிஞ்சிருக்கும். அதுமட்டுமல்லாம, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

சத்திய மாணிக்கம்
சத்திய மாணிக்கம்

பூமித்தட்டின் நகர்வுகூட இப்படியான சத்தத்தை ஏற்படுத்தும். 1987-88 காலகட்டத்தில் கம்பம் பகுதியில் நில நடுக்கம் வந்தது. கிட்டத்தட்ட 40 கி.மீ பூமிக்கு அடியில் பெரிய சத்தம் கேட்டுருக்கு. பூமிக்கடியில் சில கி.மீ நீளமான பாறை லேசாக நகர்ந்ததால் அந்தச் சத்தம் கேட்டதாக ஆய்வில் தெரியவந்தது.

எனவே, சத்தத்தை வைத்து மட்டுமே, இதுதான் காரணமென சொல்லிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மையப்புள்ளி ஒன்று இருக்கும். எனவே, எந்த இடத்தில் அதிக சத்தம் கேட்டது என்பது குறித்த தகவலை வைத்து ஆய்வு நடத்தினால், இதற்கான விடை நிச்சயமாகக் கிடைக்கும்.

பாதுகாப்புத்துறை அமைப்புகள் ஆய்வுக்காக ஒருசிலவற்றை விண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதில்கூட ஏதாவது தவறு நடந்திருக்கலாம். மக்களுக்கு அதனால் ஏதும் பாதிப்பில்லை என்கிற பட்சத்தில் அதை வெளியே சொல்லாமல் விட்டுவிடுவார்கள். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க அரசு பதில் சொல்லித்தான் ஆகணும். பாதிப்பில்லைன்னாவது அரசு சொல்லியிருக்கலாம்” என்றார்.

Doubt of common man
Doubt of common man
"அந்தச் சத்தம் நிச்சயமாக வானில் இருந்து வந்த விண்கல்லால்தான் ஏற்பட்டிருக்கும்."
டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்

மத்திய அரசின் விக்யான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம்.

``வானத்தில் உயரமான இடத்தில் ஏதாவது ஒரு வேதியியல் நிகழ்வு நடந்திருந்தால்தான் இப்படியான சத்தங்கள் கேட்கும். 50 கி.மீ தூரத்துக்கு சத்தம் கேக்குற அளவுக்கு தரையில் ஒரு நிகழ்வு நடந்திருந்தால், அது நிச்சயமாக ஒருபெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே, அந்தச் சத்தம் நிச்சயமாக வானில் இருந்து வந்த விண்கல்லால்தான் ஏற்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு சிறியதும் பெரியதுமா பல டன் விண்கற்கள் பூமி மேல விழுந்துக்கிட்டுதான் இருக்கு. எல்லா விண்கற்களும் பூமியில் விழுவதில்லை. பூமியை நோக்கி வரும்போதே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட சைஸைவிட பெருசா இருந்தா, அந்த விண்கல் முழுசா எரிஞ்சிடாது. அப்படியானது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பூமியில் விழும்போது கண்டிப்பாக சத்தத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், எந்த ஒரு பொருளும் செங்குத்தாக கீழே விழுவதைவிட, பக்கவாட்டிலிருந்து விழும்போது அதன் வேகமும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

Doubt of common man
Doubt of common man
பூமியை நெருங்கும் விண்கல்
பூமியை நெருங்கும் விண்கல்

பல ஆயிரம் கி.மீ பயணித்து வரும் விண்கல்லானது, பூமிக்கு மேலே உள்ள அடர்த்தியான காற்றுப் பகுதிக்குள் நுழையும் போது இப்படியான சத்தங்கள் ஏற்படும். ஒலியின் வேகத்தைவிட ஒரு பொருள் செல்லும்போது இப்படியான ஒரு உறுமல் சத்தத்தை ஏற்படுத்தும். அதை 'சோனிக் சவுண்ட்' என்று சொல்லுவார்கள். உலகத்தின் பல இடங்களிலும் இப்படி விண்கல் விழுந்தபோது சத்தங்கள் எழுந்திருக்கின்றன.

சூரியனைச் சுற்றி வரும் விண்கற்களில் ஒரு மீட்டருக்கும் மேல் அளவுள்ள அனைத்து விண்கற்களையும் கணக்கெடுத்து அதை நுண்ணோக்கியால் நம்முடைய விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். எனவே, ஒரு மீட்டருக்கும் குறைவான அளவுள்ள சிறிய விண்கல்தான் பூமிப்பரப்பில் நுழைந்திருக்கிறது. அதுவும் காற்றின் அழுத்தத்தாலும் உராய்வாலும் விரிசல் ஏற்பட்டு சுக்குநூறாக கீழே விழுந்திருக்கும். இரவு நேரங்களில் நடந்திருந்தால் அது வானில் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். பகலில் சத்தம் கேட்டதால், அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எனவே, தாராபுரத்தில் நடந்த நிகழ்வையும், உலகில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, விண்கல்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அச்சம் கொள்கின்ற அளவுக்கு இதில் வேறு எதுவும் இல்லை” என்றார்.

Doubt of Common Man
Doubt of Common Man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!