கார்ஸ்
Published:Updated:

40 ரூபாய்க்கு 200 கிமீ போகும் என் ஜீப்! – ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய கீழடி கெளதம்!

எலெக்ட்ரிக் ஜீப் கீழடி கெளதம்
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரிக் ஜீப் கீழடி கெளதம்

கண்டுபிடிப்பு: எலெக்ட்ரிக் ஜீப்

எலெக்ட்ரிக் ஜீப் கீழடி கெளதம்
எலெக்ட்ரிக் ஜீப் கீழடி கெளதம்

நாட்டின் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டும் அளவுக்குத் தமிழகத்தின் பெருமைகூறும் அடையாளமான கீழடிக்கு மற்றொரு பெருமையைத் தேடித் தந்துள்ளார் கௌதம்.

இப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ட்ரெண்ட். வரும் காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பழைய டீசல் வாகனத்தை பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்தும், குறைந்த செலவில் பேட்டரி சைக்கிளை உருவாக்கியும் சாதனை படைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த அருணகிரி-கவிதா தம்பதியின் மகன் கௌதம்.

இவருடைய கண்டுபிடிப்பையும் திறமையையும் சமூக ஊடகம் மூலம் அறிந்த மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல், கௌதமைத் தொடர்பு கொள்ள தன் நிறுவனத்தின் தமிழக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். தொடர்ந்து மஹிந்திரா நிறுவனத்தினர், கௌதமுடன் பேசி வருகிறார்கள்.

40 ரூபாய்க்கு 200 கிமீ போகும் என் ஜீப்!  – ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய கீழடி கெளதம்!
40 ரூபாய்க்கு 200 கிமீ போகும் என் ஜீப்!  – ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய கீழடி கெளதம்!
40 ரூபாய்க்கு 200 கிமீ போகும் என் ஜீப்!  – ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய கீழடி கெளதம்!

சிறிய கிராமத்தில் பிறந்து, தன் கண்டுபிடிப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ள கௌதமைக் கீழடியில் சந்தித்துப் பேசினேன்.

"மதுரை சாக்ஸ் கல்லூரியில் 2019-ல் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடித்தேன். எங்க அப்பா எலெக்ட்ரிக்கல், மெக்கானிக், வெல்டிங் வேலை எல்லாம் பார்ப்பார். சின்ன வயசுலேருந்து அதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் ஆர்வமாயிடுச்சு. ஏதாவது செய்து பார்த்துட்டே இருப்பேன். ஸ்கூல் படிக்கும்போது சயின்ஸ் எக்ஸ்பிஷன்ல பரிசு வாங்கியிருக்கேன். காலேஜ் முடிச்சுட்டு வேலை தேடிக்கிட்டே ஊருல கிடைக்கிற எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் வேலைகளையும் பார்த்துட்டு வர்றேன். அப்பத்தான் பெட்ரோல் டீசல்ல ஓடுற கார், ஜீப்களை மாற்றி பேட்டரியில ஓட வைத்தால் என்னன்னு தோணுச்சு. அப்பா–அம்மா தந்த பணத்தோடு, நான் வேலை பார்த்து வச்சிருந்த பணத்தையும் சேர்த்து கடந்த வருடம் மேட்டுப்பாளையத்துலருந்து 50 வருடத்துக்கு முன்னால வந்த ஜீப்பை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து என் வேலைகளை ஆரம்பிச்சேன்.

டீசல் இன்ஜினை எடுத்துட்டு, பேட்டரியில் இயங்குற மாதிரி வடிவமைச்சேன். வண்டியோட பாடியைக் கொஞ்சம் கொஞ்சமா மாற்றினேன். சாதா பேட்டரி செட் பண்ணினா வண்டியோட எடை அதிகமாகும், பாதுகாப்பும் இல்லை. அதனால் கூடுதலா கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லைன்னு லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்தினேன். ஜீப்புக்கான உதிரிபாகங்கள் மதுரையில கிடைக்கல. சென்னை, கோவையில போய் வாங்கி வரணும். பாடியை ஆல்ட்டர் பண்ற வேலைகளை மதுரையிலயே பண்ணிட்டேன்.

பேட்டரியை ஒருமுறை சார்ஜ் ஏற்ற, 40 ரூபாய் அளவுக்குத்தான் மின்சாரம் செலவாகும். அதன் மூலம் 200 கிமீ தூரம் வரை செல்லலாம். மணிக்கு 60 கிமீ வேகத்துல இது போகும். இதிலிருந்து சத்தம், புகை வராது. சாதா பேட்டரி நான்கு வைக்க வேண்டிய இடத்துல லித்தியம் பேட்டரி ஒன்னு வெச்சா போதும். அதன் சக்தி அதிகம். வண்டியின் எடையும் குறையும். ஒரு நாளுக்கு 200 கிமீ ஓட்டினாலும், 9 வருடத்துக்கு பேட்டரியை மாற்றத் தேவையில்லை.

இதை இப்ப ரோட்டுல ஓட்ட முடியாது. சோதனை முறையில கிராமத்துல வயல் வேலைகளுக்குப் பயன்படுத்திட்டு வர்றேன். இரண்டு பேட்டரி இருந்தால் மாற்றி மாற்றி ஓட்டலாம். ரன்னிங்லயே ரீசார்ஜ் ஆகுற மாதிரி 60 வோல்ட் கெப்பாசிட்டி உள்ள டைனோமா தயாரிச்சுட்டு வர்றேன். அதை ஃபிட் பண்ணிட்டா பேட்டரி சார்ஜ் பண்ற வேலையும் மிச்சமாகிடும். இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம். இதுபோல் பல வாகனங்களை லித்தியம் பேட்டரிக்கு மாற்ற ஐடியா இருக்கு. ஆனால், அதற்கு அரசாங்கம் அல்லது மோட்டார் கம்பெனிகளின் ஆதரவு வேணும்.

40 ரூபாய்க்கு 200 கிமீ போகும் என் ஜீப்!  – ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய கீழடி கெளதம்!
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

அடுத்த முயற்சியா பேட்டரியில ஓடுற சைக்கிள் கண்டுபிடித்தேன். மற்ற எலெக்ட்ரிக் சைக்கிளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்னதுன்னா, 3 பேட்டரிகளில் உள்ள சக்தியை இந்த சைக்கிளில் உள்ள கம்ப்ரஸர் இழுத்து ஒரே பேட்டரிக்குக் கொடுக்கும். இதன் மூலம் 20 முதல் 30 கிமீ வேகத்தில் செல்லலாம். சைக்கிள் என்பதால் அதைவிட வேகம் அதிகரிக்க முடியாது. இதை தயார் பண்ண ரூ 35,000 செலவானது. இதே மாடலை பெரிய கம்பெனிகள் தயாரித்தால் விலை குறைவாகக் கொடுக்க முடியும்.

என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டின சிவகங்கை கலெக்டர், லித்தியம் பேட்டரி பாதி விலைக்கு வாங்கித் தர்றதா சொல்லியிருக்காங்க. மானாமதுரை எம்எல்ஏவும் எனக்கு சப்போர்ட் பண்றதா சொல்லியிருக்காங்க. மஹிந்திரா நிறுவனம் விகடன் மூலமா என் நம்பர் வாங்கிப் பேசினாங்க. மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு கார் டிசைனிங் பண்றதில் ரொம்ப ஆர்வம். பணமில்லாததால் அதற்கான கோர்ஸில் சேர முடியவில்லை. ஆல்ட்டர் பண்ணுகிற வண்டிகளுக்குத் தேவையான பாகங்களை கையாலேயே டிராயிங் பண்ணி எடுத்துட்டுப் போய் ஸ்பேர்களை வாங்கி வருவேன். பெட்ரோல் இல்லாமல் சுற்றுச்சூழலைக் காக்க இன்னும் நிறைய ஐடியா இருக்கு...'' என்றார் உற்சாகமாக கௌதம்.