Published:Updated:

Australotitan cooperensis: ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய டைனோசர்... மாற்றி எழுதப்படும் வரலாறு!

Australotitan cooperensis - கூப்பர்
Australotitan cooperensis - கூப்பர் ( Vlad Konstantinov and Scott Hocknull/Eromanga Natural History Museum )

இந்த டைனோசர் ஓர் இரண்டு அடுக்கு கட்டடத்தின் அளவுக்கு உயரமானது. 100 அடி நீளம் கொண்டது. அதாவது ஒரு பாஸ்கெட் பால் கிரவுண்டின் அளவு நீளம். 40-60 டன்கள்வரை இதன் எடை இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

"பரிணாம வளர்ச்சியின் வரலாறு நமக்கு ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கிறது. நம்மால் எந்த உயிரினத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அவை அதை விடுத்து நிச்சயம் வெளியே வரும். புதிய வாழிடங்களுக்கு விரிவடையும், வலியிருந்தாலும் ஆபத்தாகவே இருந்தாலும் தடைகளை உடைத்து வெளியேறும். வாழ்வதற்கு, உயிர் பிழைத்து இருப்பதற்கு ஒரு வழியை நிச்சயமாகக் கண்டடையும்! (Life finds a way!)"

'ஜூராசிக் பார்க்' (1993) படத்தில் டாக்டர் இயான் மால்கம் சொல்லும் இந்த வசனம் மிகவும் பிரபலமானது. ஓர் உயிரினம், தான் வாழும் இடத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும். இதுதான் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் செய்தி! இதுவரை டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சியில் துண்டு செய்தி அளவே இடம்பெற்று வந்த ஆஸ்திரேலியா, தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. நம்மால் 'ஜூராசிக் பார்க்' படத்தில் வருவதுபோல டைனோசர்களை மீட்டுருவாக்கம் செய்து கண் குளிரப் பார்க்க முடியாது. ஆனால், தொல்லியல் எச்சங்கள் மூலம் தகவல்களைத் தொகுத்து, கிடைக்கும் எலும்புகளை ஆராய்ந்து 10 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை, டைனோசர்களின் வாழ்க்கை முறையை நிச்சயம் அறிந்துகொள்ள முடியும்.

Australotitan cooperensis - கூப்பர்
Australotitan cooperensis - கூப்பர்
Vlad Konstantinov/Eromanga Natural History Museum

15 வருடங்களுக்கும் முன் தொடங்கும் கதை இது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசிக்கும் ஸ்டூவர்ட் மெக்கென்ஸியின் மகனான சாண்டி விளையாடச் சென்றபோது, தன் கண்ணில் வித்தியாசமாகத் தெரிந்த ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு வருகிறான். பின்னர்தான் தெரியவருகிறது அது ஒரு தொல்லியல் எச்சம் என்று! இந்தக் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்வையே மாற்றுகிறது, அதுவரை எழுதப்பட்ட டைனோசர்களின் வரலாற்றையும், அதில் ஆஸ்திரேலியாவின் இடத்தையும் புரட்டிப் போடுகிறது.

தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இப்போது இது டைனோசர்களில் ஒரு புதிய இனம் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். இந்த டைனோசர் ஓர் இரண்டு அடுக்கு கட்டடத்தின் அளவுக்கு உயரமானது. 100 அடி நீளம் கொண்டது. அதாவது ஒரு பாஸ்கெட் பால் கிரவுண்டின் அளவு நீளம். 40-60 டன்கள்வரை இதன் எடை இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலேயே இதுதான் பெரியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன்மூலம் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட ஒரு டைனோசர் உலகின் மிகப்பெரிய டைனோசர்களின் பட்டியலில் ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. இதுவரை தென் அமெரிக்காவின் டைனோசர்கள்தான் அந்தப் பட்டியலை ஆக்கிரமித்திருக்கின்றன.

புதிதாக கண்டறியப்பட்ட இந்த ராட்சத டைட்டனோசோரியன், சோராபாட் (Sauropod) எனும் வகையைச் சேர்ந்தவை. அதாவது தாவர வகைகளை உண்டு உயிர் வாழ்பவை. இது ஆஸ்திரலோடைட்டன் (Australotitan) என்ற பேரினத்தின் கீழ் வருகிறது. கூப்பர் என்ற சிற்றோடை அருகில் கண்டறியப்பட்டதனால், இந்தப் புதிய டைனோசர் வகைக்கு 'கூப்பரென்சிஸ்' (Cooperensis) என்று பெயரிட்டுள்ளனர்.

இலைகள், மரத்துண்டுகள் மற்றும் பிற வண்டல்களிலிருந்து தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பாகப் பிரித்தெடுத்தல் | peerj.com/articles/11317/#fig-6
இலைகள், மரத்துண்டுகள் மற்றும் பிற வண்டல்களிலிருந்து தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பாகப் பிரித்தெடுத்தல் | peerj.com/articles/11317/#fig-6
"கூப்பர் ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்தான். ஆஸ்திரேலியாவிலேயே தற்போது நிறைய இடங்களில் டைனோசரின் எலும்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவை ஆராய்ச்சியில் இருக்கின்றன. இது குயின்ஸ்லாந்தின் 10 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை மாற்றி எழுதுகிறது."
என்கிறது குயின்ஸ்லாந்து அருங்காட்சியகத்திலிருந்து வந்த செய்திக்குறிப்பு.
இது குறித்து உயிரியலாளர், தொல்லியல் ஆர்வலர், ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜி அமைப்பின் உறுப்பினர் மற்றும் டைனோசர்களை வைத்து 'ட்ரூடான்' எனும் புத்தகத்தையும் எழுதிய நிர்மல் ராஜாவிடம் பேசினோம்.

"புதிதாக வெளியாகியிருக்கும் இது குறித்தான ஆராய்ச்சிக் கட்டுரை 130 பக்கங்கள் நீள்கிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் டைனோசரின் எலும்புகள், தமிழ்நாட்டில் கிடைக்கும் எலும்புகளைப் போலவே துண்டு துண்டாகத்தான் கிடைக்கின்றன. இதை வைத்துத்தான் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. இந்தப் புதிய டைனோசர் குயின்ஸ்லாந்தின் எரமோங்கா வடிநிலத்தின் (பேசின்) வின்டன் பாறையமைவின் (Winton Formation) கீழ் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் நிறைய டைனோசர்கள், குறிப்பாக மூன்று தாவரம் உண்ணும் சோரபாட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கூப்பர் இதனுடன் தொடர்புடைய ஒன்றுதான். மெக்கின்ஸி குடும்பம் இந்தப் புதிய டைனோசரின் எச்சங்களைக் கண்டறிந்தவுடன், குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம், மெல்பேர்ன் பல்கலைக்கழகம், எராமோங்கா இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் எனப் பல அமைப்புகள் இணைந்து இந்த எலும்புகளை ஆராய்ந்துள்ளன. இது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர்தான் என்றாலும் உலகளவில் இன்றுவரை அர்ஜென்டினாவின் பெட்டகோடைட்டன் (Patagotitan) என்ற இனம்தான் முன்னிலையில் இருக்கிறது.

நிர்மல் ராஜா
நிர்மல் ராஜா

இதுவரை கூப்பரின் சிதிலமடைந்த தொடை எலும்பு, முதுகெலும்பு மற்றும் என்னவென்றே தெரியாத சில எலும்புகளும்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விலங்கு இறந்த பின்னர் அதன் எலும்புகள் முற்றிலும் ஒரே இடத்திலே இருக்காது. காற்று, நீர், பிற விலங்கினங்கள் போன்றவற்றின் மூலம் அவை பல இடங்களைச் சென்றடையும். கூப்பருக்கும் இதுதான் நடந்திருக்கிறது. கண்டறியப்பட்ட எலும்புகளின் எடை 10 கிலோவிலிருந்து 1 டன் வரை இருக்கிறது.

சிடி ஸ்கேன் மற்றும் 3டி ஸ்கேன் மூலமாக அந்த எலும்பின் தன்மைகளை ஆராய்ந்து டிஜிட்டலில் ரெட்ரோடிஃபார்மேஷன் (Retrodeformation) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அதை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள். இதை இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் டைனோசர்களின் டேட்டாவோடு ஒப்பிட்டு, இது புதிய வகை டைனோசர் என்பதையும் ஆஸ்திரேலியாவிலேயே பெரியது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த எரமோங்கா பேசின் அப்போது டெல்டா பகுதியாக இருந்திருக்கிறது. அதன் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள, அதற்கேற்றவாறு ஒரு பொதுவான இனத்திலிருந்து புதிய இனமாகப் பிரிந்து, அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்ற டைனோசர்களைக் காட்டிலும் இது அளவில் பெரியதாகவும், நீண்ட கழுத்துள்ளதாகவும் இருந்திருக்கிறது" என்கிறார்.

இதன் மூலம், இதுவரை எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் மாற்றங்கள் நிகழப்போகின்றன, பல புதிய பக்கங்கள் சேர்க்கப்படவிருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆர்வலர்களுக்குப் பிரமாண்டமானதொரு புதிய கதையை அவை சொல்லவிருக்கின்றன!
அடுத்த கட்டுரைக்கு